TNPSC Thervupettagam

உலகமயமும் இன்றைய தொழிலாளர் நிலையும்

May 1 , 2023 576 days 414 0
  • எட்டு மணி நேர வேலை என்பது பெருத்த சவாலுக்கு உட்பட்டிருக்கும் தருணம் இது. 137 ஆண்டுகளுக்கு முன்னர் (1886), இதே நாளில் எட்டு மணி நேர வேலை கேட்டுக் கிளர்ந்து எழுந்தது போராட்டம். அன்று தொடங்கி, படிப்படியாகத் தொழிலும் தொழிலாளர் வர்க்கமும் வளர்ந்தன.
  • ‘தொழிலாளி’ என்றாலே நிரந்தர வேலை, கௌரவமான ஊதியம், பணிப் பாதுகாப்பு ஆகியவை சார்ந்த நம்பிக்கை அல்லது கற்பிதங்கள்கூட உருவாயின. 1919இல் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் (ILO) தொடங்கப்பட்டது. உழைக்கும் நேரத்தை முறைப்படுத்துவது தொடங்கி, சமூக நீதியை நிலைநாட்டுவதுவரை சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் முக்கியப் பங்காற்றியது. 1944இல் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடைபெற்ற ஐஎல்ஓ சர்வதேச மாநாடு, தொழிலாளர் நலம் பேணுவதில் அடிப்படை விதிகளை உறுதிப்படுத்தியது.
  • அதன் பிறகான இந்த 80 ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, பனிப்போரின் முடிவு, இனப் பாகுபாடுகளுக்குச் சட்டரீதியான முடிவு, கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் மறைவு, பெர்லின் சுவர் தகர்ப்பு என என்னென்னவோ நடந்தேறிவிட்டன. இனப் படுகொலைகள், பயங்கரவாதம், இனவாதம், வகுப்புவாதம், வெறுப்பு அரசியல் எனப் பல நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன.

எது வளர்ச்சி?

  •  இவற்றின் ஊடாகவே, உலகமயமாக்கல் வழியாக வளர்ச்சியும் நடந்தேறிவருகிறது. எட்டு வழிச் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள், பிரம்மாண்டமான பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில்நுட்ப-தொலைத்தொடர்பு வசதிகள் எனத் தொழிலும் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டுவருகின்றன.
  • மனிதகுலத்தின் அடிப்படைத் தேவைகளின் வளர்ச்சிக்கு இதுபோன்ற பல அத்தியாவசியங்கள் இருக்கலாம். ஆனால், உண்மையான வளர்ச்சி என்பது இவை மட்டுமே அல்ல. அது வேலைவாய்ப்பையும் இலக்காகக் கொண்டதாக, வருவாய்ப் பெருக்கம் பரவலாகச் சென்று சேர்வதாக இருக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபட்டு வளர்ச்சிக்கு வித்திடும் அனைவரும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
  • உலகமயமாக்கல் சூழலில், மூலதனம் பல வழிகளில் நாடுவிட்டு நாடு எளிதில் செல்ல முடிகிறது. ஒரு தொழில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர முடிகிறது.‌ மூலதனத்தின் இந்த இடப்பெயர்ச்சி பல நேரங்களில் தொழிலாளர்களுக்கே துன்பத்தை ஏற்படுத்துகிறது.
  • தொழில்நுட்ப மாற்றமும் (Transfer of technology) தொழிலாளிகளுக்குத் தொல்லைதருகிறது. மாறிய தொழில்நுட்பத்தோடு செல்லும் மூலதனத்துக்குத் தக்கவாறு, அந்த நாட்டின் தொழிலாளர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஒரு நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பம் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்று கணிக்க முடிவதில்லை. அதனால் பாதிப்பு ஏற்படும்போது தாங்கிக்கொள்ள இயலாமல் போகிறது.
  • தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று, சுதந்திரம். உலகமயமாக்கலின் விளைவாக பெருநிறுவனங்கள் பல இயல்பாக ஒன்றிணைகின்றன. ஒன்றையொன்று உள்ளிழுத்துக்கொள்கின்றன. இந்தச் சூழ்நிலையில் ஒரு நிறுவனம் நலிவடையும்போதோ, செயல்பட இயலாது என்ற சூழ்நிலை வரும்போதோ, சரி செய்யவே முடியாது என்ற சூழல் உருவாகும்போதோ, தொழிலாளிகள் கூட்டுபேர சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை.
  • தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறுவதுகூடப் பெரும் சவாலாக மாறிவிடுகிறது. தொழில் துறையில் வேகமாக நடந்தேறும் தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கேள்விக்குறியாகும் உரிமைகள்:

  •  உற்பத்தி முறைகள் மாறும்போதும், வேலையின் தன்மையில் மாற்றம் நிகழும்போதும், தொழில் உறவுகள் பெரும் மாற்றம் அடைகின்றன. இந்தத் தருணங்களில், முறைசார் தொழிலாளிகள் குறைந்து, முறைசாராத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். இதனால்தரமில்லாத வேலைகளைத் தொழிலாளிகள் ஏற்கநேர்கிறது. நிரந்தரமான வேலைவாய்ப்புகள் குறைந்து,நிரந்தரம் இல்லாத வேலைகள் அதிகரிக்கின்றன.
  • நிரந்தரம் இல்லாத தொழிலாளிகளுக்குச் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம்கூட உத்தரவாதம் இல்லை. சட்டப்படி அல்லாத பிடித்தங்கள் அதிகரிக்கின்றன. பணியிட ஆரோக்கியம், பாதுகாப்பு, இழப்பீடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி போன்றவை முறைசாராத் தொழிலாளிகளுக்கு கேள்விக்குறியாகின்றன.
  • உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்களில், தொழிலாளிகளின் ஒன்றுகூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவை பெரும் சவாலுக்கு உள்ளாகியிருக்கின்றன. தொழிற்சங்க நடவடிக்கைகள் தடைசெய்யப்படுகின்றன. பணியிட மேலாளர்களே பணியையும் பணியின் தன்மையும் தீர்மானிக்கின்றனர். தொழிலாளர் சட்டங்கள் பயனின்றிப் போகின்றன. உலகமயமாக்கல் சூழலில், சில தொழிற்சாலைகளில் சங்கங்களின் பதிவும் கடும் சவாலுக்கு உட்பட்டிருக்கிறது.
  • சில வகைத் தொழி லாளிகளுக்குத் தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்றும் வாதிடப்படுகிறது. தொழிற்சங்க உரிமை என்பது கூட்டுபேரசக்தியை அதிகரிக்க, சமூக ஒற்றுமையைஉயர்த்த, சமூக உரையாடல்களை வளர்க்கசமூகப் பாதுகாப்பை அதிகரிக்க, வாழ்வாதார ஊதியம்,பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றைப்பெறப் பயன்படும் கருவி. இவை அனைத்தையும்உலகமயம் உடைத்தெறிந்து விடுகிறது.

அதிகரிக்கும் துயரம்:

  • உலகமய காலகட்டத்தில் என்னதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று பேசப்பட்டாலும் இன்னமும் வறுமை குறைந்தபாடில்லை. தினமும் 82 கோடிக்கும் அதிகமானோர் பட்டினியோடு உறங்கச் செல்வதாக ஐநா சொல்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 25 கோடி தொழிற்சாலை விபத்துகள் வழியாக 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் 16 கோடிப் பேர் ஆலை பணிச்சூழல் காரணமாக நோய்வாய்ப்படவும் செய்கின்றனர் என்றும் ஐஎல்ஓ கூறுகிறது.
  • அடிமை முறை ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் 2.7 கோடிப் பேர் அடிமைகள்போல் வாழ்ந்துவருகின்றனர். பல கோடிக் குழந்தைகள், பதின்பருவத்தினர் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எட்டு மணி நேர வேலைச் சட்டம் அகற்றப்பட்டு வேலைப் பளு கூடினால் நிலைமை இன்னும் மோசமாகும். ‘மனித நினைவுக்கு எட்டிய வகையில், 20ஆம் நூற்றாண்டே அதிக ரத்தக் கறை படிந்த நூற்றாண்டு’ என ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியிருப்பது இந்த இடத்தில் கவனத்துக்கு உரியது.
  • உலகமய காலகட்டத்தில், Flexibilisation, Informalisation, Deregulation, Privatisation, De-unionisation உள்ளிட்ட நவதாராளவாதச் சொல்லாடல்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை எல்லாவற்றுக்கும் பொருள் ஒன்றே: சந்தையே வேலையையும் கூலியையும் தீர்மானிக்கும். அரசுக்கோ தொழிற்சங்கங்களுக்கோ அங்கு வேலை இல்லை. நிறுவனங்கள் ஆள்களைப் பணிக்கு எடுத்துக்கொள்ளலாம்; பணிநீக்கம் செய்யலாம்.
  • உலகமயமாக்கலின் விளைவாக உருவான சமச்சீரற்ற வளர்ச்சியால், ஏற்றத்தாழ்வு கண்கூடாகத் தெரிகிறது. செல்வக் குவிப்பும் இழப்பும் இயல்பானதாக மாறிவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. கூலி விகிதம் குறைந்துள்ளது. பணி நிலைமைகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன. சமூகப் பாதுகாப்பின்மை அதிகரித்துவருகிறது. இழப்பீடு ஏதுமின்றி நிறுவனங்கள் மூடப்படுவது, ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது வெகு இயல்பாகிவிட்டது.‌
  • தற்போதைய நிலையில் முதலீட்டாளர்களுக்கு இது நல்லதாகத் தெரிந்தாலும், இது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல; சமச்சீர் வளர்ச்சிக்கும் ஏற்றதல்ல. சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், 84% தொழிலாளர்கள் தங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
  • உலகமயமாக்கல் சூழலில் உலகம் முழுமைக்குமான குறைந்தபட்ச ஊதியம் ஒன்றைப் பரிந்துரைக்க வேண்டும் என ஐஎல்ஓ கூறியுள்ளது; அந்தக் குறைந்தபட்ச ஊதியமானது அந்தந்த நாடுகளின் பொருளியல் சூழலுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தையும் முன் வைத்துள்ளது. வேலை என்றால் அது கௌரவத்தோடும் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தோடும் வாழும் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் நிலை உருவாக வேண்டும்.

நன்றி: தி இந்து (01 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்