(For English version to this, please click here)
உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்
- மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனம் (UDHR) என்ற ஆவணமானது மனித உரிமைகள் தொடர்பான வரலாற்றின் ஒரு மைல்கல் ஆவணமாக பார்க்கப் படுகிறது.
- உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, குறிப்பாக சட்ட மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட பிரதிநிதிகளால் இது வரைவு செய்யப்பட்டது.
- இந்தப் பிரகடனமானது 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பாரீஸில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் அவற்றின் சாதனைகளின் மீதான பொதுவான ஒரு தரநிலையாக அறிவிக்கப் பட்டது (பொதுச் சபை தீர்மானம் 217 ஏ).
- இது முதன்முறையாக, அடிப்படை மனித உரிமைகளானது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.
- மேலும் இது 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- UDHR ஆனது எழுபதுக்கும் மேற்பட்ட மனித உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு உத்வேகம் அளித்ததாகவும், அதற்கு வழி வகுத்ததாகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இது உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் நிரந்தரமாக வழங்கப்படும் வகையில் இன்று பயன்படுத்தப்படுகிறது (இவையனைத்தும் அவற்றின் முகவுரைகளில் குறிப்பிடப் பட்டுள்ளன).
முகவுரை
- எல்லா நேரங்களிலும் அனைத்து மக்களின் உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் சமமான மற்றும் பிரிக்க முடியாத உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுளளது.
- உலகளாவிய சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான அடித்தளமாக மனித குடும்ப அமைப்பானது விளங்குகிறது.
- அதேசமயம், மனித உரிமைகளைப் புறக்கணிப்பதும் அவமதிப்பதும் மனித குலத்தின் மனசாட்சிக்கு எதிராக ஊறுவிளைவிக்கும் நாகரீகமற்றச் செயல்களின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
- பேச்சு சுதந்திரம், நம்பிக்கை மற்றும் பயத்திலிருந்துச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையிலான சுதந்திரத்தினை எதிர்கால மனிதர்களின் உலக வாழ்க்கையில் வழங்குதல்.
- இது சாமானியர்களின் மிக உயர்ந்த விருப்பமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
- அதே நேரத்தில், கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிக்கு கடைசி முயற்சியாக மனிதன் கட்டாயப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமானால், மனித உரிமைகளானது சட்டத்தின் ஆட்சியால் பாதுகாக்கப்பட வேண்டும்.
- அதே சமயம் நாடுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.
- ஐக்கிய நாடுகள் சபையின் இம்மக்கள் சாசனத்தில் அடிப்படை மனித உரிமைகளின் மீதான தங்களது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- மனிதனின் கண்ணியம் மற்றும் மதிப்பு ஆகியவற்றில், ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற பாகுபாடுகளின்றி சம உரிமைகளை வழங்க வேண்டும்.
- பெரியளவிலான சுதந்திரத்தினைச் சமூகமானது அடைய வேண்டுமெனில், சமூக முன்னேற்றம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இது தீர்மானித்தது.
- அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கு இன்றியமையாத உலகளாவிய மரியாதையினை வழங்குதல் மற்றும் அதனைக் கடைபிடிப்பதனை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதியளித்துள்ளது.
- இந்த உறுதிமொழியை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில், இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பற்றிய பொதுவான புரிதல் மிகவும் முக்கியமானதாகும்.
பொதுச்சபை
- பொதுச்சபையானது, இந்த உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை அனைத்து மக்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும், ஒவ்வொரு தனிமனிதனும், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பும் அடையும் ஒரு பொதுவான தரநிலையாக அறிவிக்கிறது.
- இந்த பிரகடனத்தைப் பற்றி தொடர்ந்து, உறுப்பு நாடுகளின் மக்களிடையேயும் அவர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பிரதேசங்களின் மக்களிடையேயும், இந்த உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான மரியாதையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உலகளாவிய மற்றும் பயனுள்ள அங்கீகாரத்தைக் கடைபிடிப்பதையும் பாதுகாக்கும் வகையில், தேசிய மற்றும் சர்வதேச முற்போக்கான நடவடிக்கைகள் மூலம் மனித உரிமைகள் பற்றிய கற்பித்தல் மற்றும் கல்வியினை வழங்க வேண்டும்.
சரத்து 1
- எல்லா மனிதர்களும் பிறக்கும் போது சுதந்திரமாகவும், கண்ணியம் மற்றும் சம உரிமைகளையும் கொண்டே பிறக்கிறார்கள்.
- அவர்கள் பகுத்தறிவும் மனசாட்சியும் கொண்டிருப்பதோடு, சகோதரத்துவ உணர்வோடு ஒருவருக்கொருவர் செயல்பட வேண்டும்.
சரத்து 2
- இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது பிற கருத்து, தேசியம் அல்லது சமூகத் தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எந்த வகையிலும் வேறுபாடு இல்லாமல், இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் அனைவருக்கும் உரிமை உண்டு.
- மேலும், ஒரு நபர் சுதந்திரமாக, நம்பிக்கையாக, சுயராஜ்யமற்றதாக அல்லது இறையாண்மையின் வேறு எந்த வரம்புக்கு உட்பட்டவராக இருந்தாலும், அந்த நாட்டின் அல்லது அந்தப் பிரதேசத்தின் அரசியல், அதிகார வரம்பு அல்லது சர்வதேச அந்தஸ்து அடிப்படையில் எந்த வேறுபாடும் செய்யப் படக்கூடாது.
சரத்து 3
- ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கும், சுதந்திரம் பெறுவதற்கும், பாதுகாப்பான வாழ்வினைப் பெறுவதற்கும் உரிமை உண்டு.
சரத்து 4
- யாரும் அடிமைத்தனத்திலோ அல்லது அடிமைத்தன நிலையிலோ வைத்து நடத்தப்படக் கூடாது; அடிமைத்தனம் மற்றும் அடிமை வியாபாரம் அனைத்து வடிவங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்.
சரத்து 5
- யாரும் சித்திரவதை அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படக் கூடாது.
சரத்து 6
- சட்டத்தின் முன் ஒரு நபராக எல்லா இடங்களிலும் அங்கீகரிக்கப்பட அனைவருக்கும் உரிமை உண்டு.
சரத்து 7
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் முன் சமமானப் பாதுகாப்பினைப் பெறுவதற்கு உரிமையுண்டு.
- இந்தப் பிரகடனத்தை மீறும் எந்தவொரு பாகுபாட்டிற்கும் எதிராகவும், அத்தகையப் பாகுபாட்டிற்கான தூண்டுதலுக்கு எதிராகவும் அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பினைப் பெற உரிமை உண்டு.
சரத்து 8
- அரசியலமைப்பு அல்லது சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்குச் சட்டப்படி அதிகாரம் பெற்ற தேசியத் தீர்ப்பாயங்களால் பயனுள்ள தீர்வுகளைப் பெற உரிமையானது அனைவருக்கும் உள்ளது.
சரத்து 9
- எவரும் தன்னிச்சையான கைது, தடுப்புக் காவல் அல்லது நாடு கடத்தலுக்கு உட்படுத்தப்படக் கூடாது.
சரத்து 10
- ஒவ்வொருவருக்கும் அவரது உரிமைகள் மற்றும் கடமைகள் மற்றும் அவருக்கு எதிரான எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டையும் தீர்மானிப்பதில், ஒரு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்றத் தீர்ப்பாயத்தால் நியாயமான மற்றும் பொது விசாரணைக்கான வழி வகையினைப் பெற முழு அளவிலான சம உரிமை உள்ளது.
சரத்து 11
- தண்டனைக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் பொது விசாரணையில் சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று கருதப் படுவதற்கு உரிமை உண்டு.
- தேசிய அல்லது சர்வதேசச் சட்டத்தின் கீழ், அது நிறைவேற்றப்பட்ட நேரத்தில், தண்டனைக் குற்றமாக அமையாத எந்தவொரு செயல் அல்லது தவறின் காரணமாக, எந்தவொருத் தண்டனைக் குற்றத்திற்கும் யாரும் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டார்கள்.
- தண்டனை ரீதியிலான குற்றம் செய்யப்பட்ட நேரத்தில் அதற்கென்று பொருந்திய தண்டனையை விட அதிக தண்டனை விதிக்கப் படாது.
சரத்து 12
- எவரும் அவரது தன்மறைப்பு உரிமை, குடும்பம், வீடு அல்லது கடிதப் பரிமாற்றம் ஆகியவற்றில் தன்னிச்சையான குறுக்கீடு அல்லது அவரது மரியாதை மற்றும் நற்பெயர் மீதான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட கூடாது.
- அத்தகையத் தலையீடு அல்லது தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்பினைப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
சரத்து 13
- ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைக்குள் நடமாடுவதற்கும் அங்கு வசிப்பதற்கும் சுதந்திர உரிமையானது அனைவருக்கும் உண்டு.
- ஒவ்வொருவருக்கும் சொந்த நாடு உட்பட எந்த நாட்டையும் விட்டு வெளியேறவும், தனது நாட்டுக்கு மீண்டும் திரும்பவும் உரிமை உண்டு.
சரத்து 14
- துன்புறுத்தலில் இருந்து மற்ற நாடுகளில் புகலிடம் தேடவும் அந்த உரிமையினை அனுபவிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
- அரசியல் சாராத குற்றங்கள் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானச் செயல்களில் இருந்து உண்மையாக எழும் வழக்குகளில் இந்த உரிமைகளைப் பயன்படுத்த இயலாது.
சரத்து 15
- ஒவ்வொருவருக்கும் தேசியத்திற்கான உரிமைகளைப் பெற உரிமையுண்டு.
- எவருக்கும் தன்னிச்சையாக அவரது தேசியத்தை இழக்கவோ அல்லது அவரது தேசியத்தை மாற்றுவதற்கான உரிமையையோ மறுக்கக் கூடாது.
-------------------------------------