(For the English version of this Article Please click Here)
- சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடியாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. 142.57 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாற உள்ளது.
- 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 தேதி அன்று உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டியது.
- உலக மக்கள்தொகை தினத்தன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 ஆம் ஆண்டு என்ற அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- உலகம் 2037 ஆம் ஆண்டில் அடுத்த பில்லியனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியன அந்த வளர்ச்சியின் பெரும்பகுதியாக இருக்கும், அதே நேரத்தில் மக்கள் தொகை குறைவதால் ஐரோப்பாவின் பங்களிப்பு மிக எதிர்மறையாக இருக்கும்.
- 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மெதுவான விகிதத்தில் வளர்ந்து வருகிற உலக மக்கள் தொகையானது 2020 ஆம் ஆண்டில் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்தியக் கணிப்புகளின் படி, உலக மக்கள் தொகையானது 2030 ஆண்டில் 8.5 பில்லியனாகவும், 2050 ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக் கூடும் என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
- இது 2080 ஆம் ஆண்டுகளில் சுமார் 10.4 பில்லியன் மக்களை அடையும் என்றும் 2100 ஆம் ஆண்டு வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
- சமீப பத்தாண்டுகளில் பல நாடுகளில் கருவுறுதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக மக்கள்தொகை வாய்ப்புகள் அறிக்கை குறிப்பிடுகிறது.
- இன்று உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவிற்கு ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழ்நாள் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற அளவிற்கு குறைவாக உள்ளது. நீண்ட காலத்திற்கு குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்ட மக்கள் தொகை தான் பூஜ்ஜிய வளர்ச்சிக்குத் தேவையான அளவு ஆகும்.
- 2022 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 61 நாடுகள் அல்லது பகுதிகளின் மக்கள் தொகையானது 1 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக குறையும் என்று கணிக்கப் பட்டு உள்ளது. இதனால் நீடித்த குறைந்த அளவிலான கருவுறுதல் அளவைத் தொடர்ந்து, சில சமயங்களில் குடியேற்ற விகிதமும் அதிகரிக்கும்.
மக்கள் தொகை
- குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் 'மக்கள் தொகை' எனப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
- மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நாட்டில் அல்லது ஒரு நாட்டின் நன்கு வரையறுக்கப் பட்ட பகுதியிலுள்ள மக்கள்தொகை, அனைத்து நபர்களின் பொருளாதாரம் மற்றும் சமூகத் தரவுகளைச் சேகரித்தல், தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் மொத்தச் செயல்முறையாகும்.
- இது பத்து வருட இடைவெளியில் நடக்கும்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவானது நிர்வாகம், திட்டமிடல், கொள்கை உருவாக்கம் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மேலாண்மை மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் மக்கள்தொகை போக்குகள்
- மக்கள்தொகை அம்சங்கள் பற்றி அறிவியல் நெறிப்படி படிப்பதே மக்கள்தொகையியல் எனப் படும்.
மக்கள் தொகை அளவு
- கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு இந்திய மக்கள்தொகை அளவு அதிகரித்துள்ளது.
- மக்கள்தொகையின் அளவைப் பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
- உலகின் புவிப்பரப்பில் 2.4% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாயைப் பெற்றுள்ள இந்தியா, உலக மக்கள்தொகையில் 17.5 சதவிகித்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
- வேறு வகையில் கூறினால் உலக மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார்.
மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் மாற்றம்
- மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், மக்கள் தொகையின் ஒரு முக்கியமான அம்சமாகும்.
- இது மக்கள் தொகை மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல் கடந்த கால சமுதாயத்தின் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு வருங்கால மக்கள் தொகையின் பண்புகளைக் கணிக்க உதவுகிறது.
- மக்கள் தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை உணர்த்துகிறது.
- மக்கள் தொகை வளர்ச்சியானது சதவீதத்தில் குறிப்பிடப்பட்டு, அது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமாக விவரிக்கப் படுகிறது.
- கீழ்க்கண்ட கோட்டுப்படம் 1901 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் பத்தாண்டுகள் என்ற கால அளவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் காண்பிக்கிறது.
- இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி பல்வேறு காலக்கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.
- 1901 ஆம் ஆண்டு 238 மில்லியனாக இருந்த நாட்டின் மக்கள் தொகை, ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில் 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
தேக்க நிலை காலம்: 1901/1921
- முதல் இருபது ஆண்டு (1901-1921) காலக் கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 15 மில்லியன்கள் அதிகரித்தது.
- 1921 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எதிர்மறை வளர்ச்சி விகிதமாக (-0.31%) ஆக பதிவாகி உள்ளது.
- இது இந்திய மக்கள்தொகை வரலாற்றில் ஒரு முறை மட்டுமே ஏற்பட்ட நிகழ்வாகும்.
- இது மக்களியல் வரலாற்றில் ’பெரும் மக்களியல் பிளவு ஆண்டு’ என அழைக்கப்படுகிறது.
நிலையான வளர்ச்சிக் காலம் (இரண்டாம் காலக் கட்டம்) – 1921/1951
- இரண்டாம் கட்டமான இந்த 30 ஆண்டுகளில் (1921-51) இந்தியாவின் மக்கள் தொகை 110 மில்லியன்கள் அதிகரித்தது.
- 1951 ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33% என்ற அளவிலிருந்து 1.25% என்ற அளவாக குறைந்தது. ஆகையால் இது “சிறு பிளவு ஆண்டு” என அழைக்கப் படுகிறது.
நிலையான வளர்ச்சிக் காலம் (மூன்றாம் காலக்கட்டம்) - 1951 /1981
- மூன்றாவது 30 ஆண்டுகளில் (1951 – 1981) 1951 ஆம் ஆண்டில் 361 மில்லியன்களாக இருந்த மக்கட்தொகை 1981 ஆம் ஆண்டில் 683 மில்லியன்களாக வளர்ச்சி அடைந்தது.
- முந்தைய கால வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தக் காலத்தில் வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.
- இந்த காலக் கட்டம் பெருமக்கள் வெடிப்பு காலக் கட்டம் என்றும் அழைக்கப் படுகிறது.
- 1961 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும்.
- ஆகையால் 1961 ஆம் ஆண்டை ”மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு” என்கிறோம்.
அதிக வளர்ச்சியிலிருந்து வளர்ச்சி குன்றல் தென்பட ஆரம்பித்த காலம் – 1981/2011
- இந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 685 மில்லியனிலிருந்து 1210 மில்லியனாக அதிகரித்துள்ளது.
- மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஒரு கணக்கெடுப்புக் காலத்திலிருந்து மற்றொரு கணக்கெடுப்புக் காலத்திற்கு குறைந்து கொண்டு வருகின்றது.
- இது இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவைக் கடந்தது.
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இளைஞர்களின் மக்கள் தொகை குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது. இது ‘மக்கள் தொகை மீதான பெரும் மாறுதலை’ குறிக்கிறது.
- பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.
- மேலும் இவை மூன்றும் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
- பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
- இறப்பு விகிதம் எனப்படுவது ஒர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
- இந்தியாவில் இறப்பு விகிதத்தின் விரைவான சரிவு மக்கள் தொகையின் துரித வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
- குழந்தைகள் பிறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
- இறப்பு விகிதம்: இது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையும் (14.7) மற்றும் உத்தரப் பிரதேசம் (29.5) அதிக அளவு பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளன.
- இதில் மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தையும் (6.3), ஒரிசா அதிக இறப்பு விகிதத்தையும் (9.2) கொண்டுள்ளது.
- மாநிலங்களிடையே 2001-2011 என்ற பத்தாண்டுகளில் பீகார் அதிக மக்கள் தொகைப் பெருக்கத்தையும் கேரளா குறைந்த பிறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது.
- பீகார்), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் “BIMARU” (பிமாரு) மாநிலங்கள் எனப்படுகின்றன. அவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் ஆகும்.
- 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் 22 தேதி அன்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) வெளியிட்ட 2020 ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதற்காக வேண்டி இந்தியா 2014 ஆம் ஆண்டு முதல் குழந்தை இறப்பு விகிதம் (IMR), 5 வயதுக்கு கீழுள்ள குழந்தை இறப்பு விகிதம் (U5MR) மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (NMR) ஆகியவற்றில் ஒரு முன்னேற்றகரமான குறைப்பைக் கண்டு வருகிறது.
- 2020 ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, இந்தியாவின் அசல் பிறப்பு விகிதம் 19.5 ஆகும்.
- 2020 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1000 மக்களுக்கு 13.8 ஆக உள்ளது. தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 2001 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 19 பிறப்புகள் என்ற நிலையில் இருந்து 2020 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 13.8 ஆக குறைந்துள்ளது.
- பெரிய மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் அதிகபட்ச பிறப்பு விகிதம் பீகாரிலும் (25.5) மற்றும் குறைந்த பட்சம் கேரளாவிலும் (13.2) பதிவாகியுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அசல் இறப்பு விகிதம் 6.0 ஆக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் அதிக பட்ச இறப்பு விகிதம் 7.9 ஆகவும், குறைந்த இறப்பு விகிதம் டெல்லியில் 3.6 ஆகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
- 2005 ஆம் ஆண்டில் 7.4 ஆக இருந்த தமிழகத்தின் அசல் இறப்பு விகிதம் 2019 ஆம் ஆண்டில் 6.1 ஆக குறைந்துள்ளது.
மக்கள் தொகை அடர்த்தி
- மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
- அதாவது அது நிலம் மற்றும் மனிதன்ஆகியோருக்கு இடையேயான விகிதாச்சார அளவைக் குறிக்கிறது. மொத்த நிலப்பரப்பு மாறாதிருக்கும் போது அதிகரிக்கும் மக்கள் தொகையானது மக்கள் தொகையின் அடர்த்தியை அதிகரிக்கின்றது.
- மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள் தொகை /அப்பகுதியின் நிலப்பரப்பு.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மக்கள் தொகை அடர்த்தி 382 ஆகும். இதனால் மக்கள் தொகை அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.
- கேரளா, மேற்கு வங்காளம், பீகார், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட மக்கள் தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது.
- பீகார் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடன், ஒரு சதுர கிமீக்கு 1,102 என உள்ளது. அதற்கு அடுத்ததாக மேற்கு வங்காளம் 880 என்ற அளவில் மக்கள் தொகை அடர்த்தியினைக் கொண்டுள்ளது.
- ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் அருணாச்சலப் பிரதேசம் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை அடர்த்தியானது 555 ஆகும் என்ற நிலையில், இந்த மதிப்பு இந்தியாவின் சராசரி அடர்த்தியை விட அதிகமாக உள்ளது.
பாலின விகிதம்
- இது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தைக் குறிக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தை அளவிடவும், பாலினச் சம நிலையை பிரபலப்படுத்தவும் இது ஒரு முக்கியமான சுட்டிக் காட்டியாகும்.
- இந்தியாவில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகச் சாதகமாக உள்ளது.
- இறுதியாக 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி பாலின விகிதம் அதிகரித்து உள்ளது.
- 2011 ஆம் ஆண்டின் படி ஹரியானாவில் 877 என்ற அளவில் பாலின விகிதம் மிகக் குறைவாக இருந்தது. கேரளா மற்ற மாநிலங்களை விட பெண்கள் பாலின விகிதத்தினை அதிகமான அளவில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்களைக் கொண்டுள்ளது.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பாலின விகித மதிப்பு முறையே 940 மற்றும் 995 ஆகும்.
- தேசியக் குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5 2019-21) ஐந்தாவது சுற்றின்படி, நாட்டின் மக்கள் தொகையில் பாலின விகிதம் (1000 ஆண்களுக்குப் பெண்கள்) 1020 என மதிப்பிடப் பட்டு உள்ளது.
- மொத்த மக்கள் தொகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பாலின விகிதம் முறையே 6 சதவீதம் மற்றும் 5 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்து முறையே 1034 மற்றும் 1088 ஆக உள்ளது.
- மொத்த மக்கள் தொகையின் பாலின விகிதத்தில் 1078 (NFHS-4) என்ற அளவிலிருந்து 1040 (NFHS-5) என்ற அளவிற்குக் குறைத்துள்ள நாட்டின் ஒரே பெரிய மாநிலம் இமாச்சலப் பிரதேசம் ஆகும்.
குழந்தைப் பாலின விகிதம்
- குழந்தைப் பாலின விகிதம் என்பது மக்கள்தொகையில் 0-6 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தைக் குறிக்கிறது.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் குழந்தைப் பாலின விகிதம் 943 மற்றும் 919 ஆகும்.
- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகமான மற்றும் குறைந்த குழந்தைப் பாலின விகிதம் கொண்ட மாநிலங்கள் முறையே அருணாச்சலப் பிரதேசம் (972) மற்றும் ஹரியானா (834) ஆகும்.
- தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வின் (NFHS-5 2019-21) ஐந்தாவது சுற்றின்படி, நாட்டின் மக்கள் தொகையின் குழந்தைப் பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்) 929 என மதிப்பிடப் பட்டுள்ளது.
பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு
- பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிக்கப் படுகிறது. தற்போது வாழ்நாள் எதிர்பார்ப்புக் காலம் அதிகரித்து வருகிறது.
- இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் போது சராசரி வாழ்நாள் காலம் குறைவாகவும், மாறாக இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் போது சராசரி வாழ்நாள் காலம் அதிகமாகவும் உள்ளது.
- வேறு வகையில் கூறுவதானால் அதிக சராசரி வாழ்நாள் காலம், குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த சராசரி வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடச் செய்கின்றது.
- 1901 – 1911 ஆண்டு காலக் கட்டங்களில் வாழ்நாள் எதிர்பார்ப்பு விகிதம் 23 வருடங்கள் மட்டுமே ஆகும்.
- இது 2011 ஆம் ஆண்டில் 63.5 வருடங்கள் என்ற அளவில் அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே ஆகும்.
- ஆயினும் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்புக் காலம் குறைவே ஆகும்.
- 2011 ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளா (74.9) இந்திய மாநிலங்களில் அதிக சராசரி ஆயுட்காலத்தினையும் அஸ்ஸாம் குறைந்த அளவினையும் கொண்டுள்ளது.
- தமிழ்நாட்டின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்புக் காலம் 70.6 ஆக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, 2015-19 என்ற காலக் கட்டத்தில் இந்தியாவின் ஆயுட்காலம் 69.7 ஆக உயர்ந்துள்ளது. இது மதிப்பிடப் பட்ட உலகளாவியச் சராசரி ஆயுட்காலமான 72.6 என்ற மதிப்பை விட கீழே உள்ளது.
- இதில் ஆயுட்காலத்தின் மீது இரண்டு வருடங்களைக் கூட்டுவதற்கு ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆனது.
- 1970-75 ஆகிய ஆண்டுகளில் 49.7 ஆக இருந்த இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு 45 வருட இடைவெளிக்குப் பிறகு 2015-19 ஆகிய ஆண்டுகளில் 69.7 ஆக உயர்ந்துள்ளது
- ஒடிசா கடந்த 24 ஆண்டுகளில் அதனை 45.7 என்ற அளவிலிருந்து 69.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அது 49.6 என்ற அளவில் இருந்து 72.6 ஆக அதிகரித்துள்ளது.
- 2015-19 ஆண்டில் குறைந்த சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் 65.6 என்ற அளவினையும், அதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கர் 65.3 என்ற அளவினையும் கொண்டு உள்ளது.
- 1970-75 ஆண்டில் இந்தியாவில் மிகக் குறைந்த சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நாற்பத்து மூன்று ஆண்டுகளில் அது 22.6 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் (IMR)
- குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 1000 உயிருள்ள பிறப்புகளில் ஏற்படும் இறப்புகளின் விகிதத்தைக் குறிக்கும் ஒரு எண்ணிக்கையாகும்.
- நிதி ஆயோக் அறிக்கையின் படி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விதிதம் 17 ஆகும். இது தேசியச் சராசரியான 34 என்ற அளவில் பாதி அளவாகும்.
- 2020 ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2019 ஆண்டில் 1000 உயிருள்ளப் பிறப்புகளுக்கு 30 என்ற அளவிலிருந்து 2020 ஆண்டில் 1000 உயிருள்ள பிறப்புகளுக்கு 28 என்ற அளவாக 2 புள்ளி சரிவைப் பதிவு செய்துள்ளது (வருடாந்திரச் சரிவு விகிதம்: 6.7%).
- இதில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடு 12 புள்ளிகளாகக் குறைந்துள்ளது (நகர்ப்புறம் - 19, கிராமம் - 31).
- இதன் படி 2020 ஆண்டில் பாலின வேறுபாடு எதுவும் காணப்படவில்லை (ஆண் - 28, பெண் - 28).
- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அஸ்ஸாமில் குழந்தை இறப்பு விகிதம் 60.0 ஆக உள்ளது, அதே சமயம் அது கேரளாவில் 12.2 குறைவாக உள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் (MMR)
- மகப்பேறு இறப்பு விகிதம் என்பது 100,000 தாய்மார்களின் மகப்பேறு காலத்தில் இறக்கும் தாய்மார்களின் விகிதத்தைக் குறிக்கும் ஒரு எண்ணிக்கையாகும்.
- நிதி ஆயோக் அறிக்கையின் படி மகப்பேறு காலத்தில் தாயின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு 79 என்ற எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தேசியச் சராசரியான 159 என்ற அளவில் சரி பாதி அளவாகும். மகப்பேறு இறப்பு விகிதத்தில் கேரளம் 61 (முதலிடம்), மகாராஷ்டிரா 67ஆகவும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, அஸ்ஸாம் (195) மாநிலத்தில் மகப்பேறு இறப்பு நிகழ்வுகள் அதிகம் ஆகும்.
- 2020 ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) 2014-16 ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 130 என்ற அளவிலிருந்து, 2015-17 ஆண்டில் 122 ஆகக் குறைந்துள்ளது, மேலும் 2016-18 ஆண்டில் அது 9 புள்ளிகள் குறைந்து 113 ஆக உள்ளது. 2017-19 ஆண்டில் இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் ஏற்கனவே 103 என்ற அளவாகக் குறைந்து விட்டது. இது உலகளாவிய மகப்பேறு இறப்பு விகிதமான 211 (2017 ஆம் ஆண்டு) என்ற அளவை விட குறைவாக உள்ளது.
- 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) உலகளாவிய மகப்பேறு இறப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சத்திற்கு 70 என்ற அளவிற்கும் குறைவாகக் குறைக்க வேண்டும் என இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.
- பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான கொள்கைகளுடன் இந்த இலக்கை முன் கூட்டியே அடையும் பாதையில் இந்தியா சீராக முன்னேறி வருகிறது.
- மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பல மாநிலங்களில் சிறப்பான முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. அவற்றில் எட்டு மாநிலங்கள் ஏற்கனவே நிலையான வளர்ச்சி இலக்கை (SDG) எட்டியுள்ளன.
- இதில் கேரளா (19), மகாராஷ்டிரா (33), தெலுங்கானா (43) ஆந்திரா (45), தமிழ்நாடு (54), ஜார்க்கண்ட் (56), குஜராத் (57), கர்நாடகா (69) ஆகியவை அடங்கும்.
- மகப்பேறு இறப்பு விகிதம் அதிகபட்சமாக அஸ்ஸாமில் 195 என்ற அளவாக பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அது முறையே 173 மற்றும் 167 என்ற அளவாகப் பதிவாகியுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR)
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) என்பது புதிதாகப் பிறந்த 1,000 குழந்தைகளுக்கு இடையே, ஐந்து வயது வருவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் விகிதத்தை குறிக்கும் எண்ணிக்கையாகும்.
- 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) 79 ஆகும்.
- இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) 159 ஆகும்.
- இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே உத்தரப் பிரதேசத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) அதிகமாக உள்ளது. அதே சமயம் அது கேரளாவில் மிகக் குறைவாக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) புள்ளி விவர அறிக்கையின் படி, நாட்டிற்கான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமானது (U5MR) 2019 ஆம் ஆண்டிலிருந்து 3 புள்ளிகள் என்ற அளவில் (வருடாந்திரச் சரிவு விகிதம்: 8.6%) கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது (2020 ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 32 பேர், 2019 ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 35 பேர்).
- இது கிராமப் புறங்களில் 36 ஆகவும், நகர்ப் புறங்களில் 21 ஆகவும் மாறுபடுகிறது.
- இதில் பெண்களுக்கான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமானது (U5MR) ஆண்களை விட (33) அதிகமாக உள்ளது (31). தொடர்புடைய இதே காலக்கட்டத்தில் ஆண்களுக்கான U5MR என்ற அளவில் 4 புள்ளிகள் மற்றும் பெண்களுக்கான U5MR என்ற அளவில் 3 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் (U5MR) அதிகபட்ச சரிவு உத்தரப் பிரதேச மாநிலம் (5 புள்ளிகள்) மற்றும் கர்நாடகா (5 புள்ளிகள்) ஆகியவற்றில் காணப் படுகிறது.
- கேரளா 6 என்ற அளவில் மிகவும் குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) கொண்ட மாநிலமாக உள்ளது.
எழுத்தறிவு விகிதம்
- இது மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதத்தைக் குறிப்பிடுகிறது.
- 1951 ஆம் ஆண்டில் ஆண்களில் நான்கில் ஒருவர் மற்றும் பெண்களில் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
- இதன் படி சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு 82% மற்றும் பெண்களுக்கு 65.5% என்ற அளவில் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகும்.
- இது மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இலங்கையைக் காட்டிலும் கூட மிகவும் குறைவு ஆகும்.
- கேரளா 94% என்ற அளவில் அதிக எழுத்தறிவு விகித கொண்ட ஒரு மாநிலமாகவும், அதற்கு அடுத்தப்படியாக மிசோரம் (91.3%) கோவா (88.7%) ஆகிய மாநிலங்களும் உள்ளன.
- இதில் இமாச்சலப் பிரதேசம் (82.8%) மகாராஸ்டிரா (82.3%) சிக்கிம் (81.4%) மற்றும் தமிழ்நாடு (80.1%) ஆகியன உள்ளன.
- 2011 ஆம் ஆண்டின் படி பீகார் (61.8%) குறைவான எழுத்தறிவு விகிதம் பெற்ற மாநிலமாக உள்ளது.
அதிக மக்கள் தொகையினால் ஏற்படும் வாய்ப்புகள்
- மக்கள் தொகை அதிகரிக்கும் போது உணவு உற்பத்தி மற்றும் பிற உற்பத்தி ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியை விட வேகமாக வளர்வதால் ஒரு நாடு விவசாயம் மற்றும் தொழில்துறைப் பொருளாதாரத்தில் இருந்து வெகுவாக பயனடைய முடியும்.
- மக்கள் கூட்டத்தை மிகவும் துடிப்பான சமுதாயமாக மாற்ற அதிக மக்கள் தொகை உதவும்.
- மக்கள் தொகை பெருகும் போது அது பல்வேறு பரந்தக் கலாச்சார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான ஆதரவை வழங்க முடியும்.
- மக்கள்தொகையின் அளவானது, நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவை வடிவமைக்கும் சக்தியைக் கொண்ட அதிகார இயந்திரத்துடன் மிக நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது.
- இருப்பினும் இது இரு முனைகள் கொண்ட வாள், எனவே அது திறமையாக பயன்படுத்தப் பட வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு (UNSC) அமைப்பில் நிரந்தர உறுப்பினருக்கான கோரிக்கை
- இந்தியா மிகப்பெரிய நாடாக மாறினால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுமத்தில் அது நிரந்தர உறுப்பினர் உரிமையைப் பெறும்.
- தற்போதைய புதிய மக்கள் தொகையானது ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர இடம் பெறுவதற்கான கோரிக்கையை நிறைவேற்றும்.
- இது ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பழைய சக்திகளுடன் இணைந்து ஒரு இடத்திற்குத் தகுதியான புதிய சக்திகளை உருவாக்கியுள்ளது என்பதோடு இது புவிசார் அரசியல் யதார்த்தத்தினையும் மாற்றி விட்டது.
- நிதி ஆதார அதிகரிப்பு: நிதி ஆதாரங்களை குழந்தைகளுக்கு என்று செலவழிப்பதில் இருந்து நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித மேம்பாடு மீதான முதலீடாக மாற்றலாம்.
- இந்த மனித உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் இந்தியாவின் பொருளாதார நிலைத் தன்மையை அதிகரிக்க முடியும்.
- தொழிலாளர் எண்ணிக்கையில் உயர்வு: இந்தியாவில் உழைக்கும் வயதுடைய நபர்கள் மக்கள் தொகையில் 65%க்கும் அதிகமான அளவில் இருப்பதனால் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசு நாடாக உயர முடியும் என்பதோடு, வரவிருக்கும் தசாப்தங்களில் ஆசியாவிற்கு வேண்டிய பலம் வாய்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்ட நபர்களை இந்தியா அனுப்ப முடியும்.
- தொழிலாளர் படையின் அதிகரிப்பு மூலம் பொருளாதாரத்தில் உற்பத்தித் திறனை நம்மால் அதிகரிக்க முடியும்.
- பெண் பணியாளர்களின் மத்தியில் ஏற்படும் ஒரு எழுச்சி மூலம் இயற்கையாகவேக் கருவுறுதல் விகிதம் குறைவதோடு, அது வளர்ச்சிக்கான ஒரு புதிய ஆதாரமாக இருக்கும்.
- வளர்ந்து வரும் இளம் மக்கள் தொகை இந்தியாவிற்கு வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவதோடு அது புதிய கண்டுபிடிப்புகளுக்கான சாத்தியக் கூறுகளையும் வழங்கும்.
- இந்தியாவின் மக்கள்தொகை மீதான பன்முகத் தன்மை என்பது மக்கள்தொகை ஈவுத் தொகையினை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் கிடைக்கச் செய்வதினை உறுதி செய்கிறது.
- மக்கள்தொகை வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதோடு, அது மக்களை மேலும் அதிகப் பொருட்களை உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.
- இது அதிக வரி வருவாய்க்கு வழி வகுக்கும் என்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயானது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்கள் போன்ற பொதுப் பொருட்களுக்குச் செலவிடப் படலாம்.
அதிக மக்கள்தொகையினால் ஏற்படும் சவால்கள்
- அதிக மக்கள்தொகை வளர்ச்சியினால் இயற்கை வளங்கள் தீர்ந்து போகக் கூடும்.
- இந்தியா தனது மக்களுக்குத் தேவையான உணவு, கல்வி, வீடு, சுகாதாரச் சேவைகள் மற்றும் வேலைகளை வழங்க முடியாவிட்டால், பூமியில் அதிகமான மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய எதிர்மறையாக இருக்கும்.
- இந்தச் சவாலின் அளவு மிகப்பெரியது ஆகும்.
- இந்தியா முழுவதும் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் ஒரு நாள்பட்ட பிரச்சினையாக உள்ளது. இந்தத் தேவைகள் அனைத்தும் முக்கியமானவை ஆனால் இதுவரை இந்தியா செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதில் வேலைகளை உருவாக்குவதுதான். ஆனால் இந்தக் குறிப்பிட்டச் சவாலின் அளவு உண்மையிலேயே மிக அச்சுறுத்தலாக உள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 900 மில்லியன் மக்கள் (மொத்த மக்கள் தொகையில் 67%) 15-64 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர்.
- இது 2030 ஆம் ஆண்டில் மேலும் 100 மில்லியனாக விரிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- உழைக்கும் வயதில் உள்ள மக்கள்தொகை அதிகரிப்பதினால் அது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதோடு, அது பொருளாதார மற்றும் சமூக அளவிலான அபாயங்களைத் தூண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் எண்ணிக்கை மிக வேகமாக வளர்வதால் மேலும் பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
- அரசிற்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது ஒரு பெரிய சவாலாகி விடும், இதனால் எதிர் கால அரசாங்கம் அதிகமான வளங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
- கல்வி என்பது பாலின வேறுபாடுகளைக் குறைக்க உதவும்.
- ஆனால் இந்தியாவில், மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் சேர்க்கப் படுகிறார்கள்.
- கல்வியில் மேலும் பாலினச் சமத்துவமின்மையை அது அதிகரிக்கக் கூடும்.
அதீத மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள்
- அதீத மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சில தனித்துவமான தீர்வுகள் பின்வருமாறு:
விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை ஏற்படுத்துதல்
- சமூக மற்றும் முக்கிய ஊடகங்களைப் பயன்படுத்தி உலகில் வாழும் மக்களுக்கு அதிக மக்கள் தொகையினால் ஏற்படும் நெருக்கடிகள் பற்றிய உண்மை மற்றும் அதனை உடனடியாகத் தடுக்க எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாகக் கூற வேண்டும்.
குழந்தைத் தத்தெடுப்பதை ஊக்கப்படுத்துதல்
- குடும்பக் கட்டுப்பாட்டிற்கு தத்தெடுத்தல் முறை ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது. இக்கருத்து குறிப்பாக சமூக அக்கறை உள்ளவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
- குடும்பத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் மக்கள் தொகை அதிகரித்து விடக் கூடாது என்ற அக்கறையுள்ள மக்களிடம் இன்று தத்தெடுப்பு முறை என்பது ஒரு நடைமுறைத் தீர்வாக உள்ளது.
ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற நோக்கம்
- புள்ளி விவரப் படி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வுலகில் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
- இது ஒரு நிலையற்ற விகிதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. எனவே ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற நோக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டியது இக்காலக் கட்டத்தில் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
தேசியப் பாதுகாப்பு பிரச்சனையாக உணர்தல்
- அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடுகள் அசாதாரண மக்கள் தொகை வளர்ச்சியை தேசியப் பாதுகாப்புப் பிரச்சனையாக கருத வேண்டும்.
- உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் கால நிலை மாற்றம் போன்று கட்டுப்பாடற்ற மற்றும் துரிதமான மக்கள் தொகை வளர்ச்சி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அது ஒரு நிலையற்றத் தன்மையை உருவாக்குகிறது.
சமூக நெறிமுறைகளில் மாற்றம்
- சில கணவன் – மனைவியர் குழந்தை வேண்டாமென முடிவெடுக்கும்போது அதை நாம் மதிக்க வேண்டும். இவ்வகையில் நாம் அதிக மக்கள்தொகைப் பிரச்சனையைக் கட்டுப் படுத்த முடியும்.
வரிச்சலுகைகள் அளித்தல்
- அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் வரி விலக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு விதிமுறைகளையும் கொள்கைகளையும் கொண்டு வரலாம்.
- எடுத்துக்காட்டாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு தம்பதியரின் வருமானத்தின் மீதான சில பகுதிகளுக்கு வரி விலக்கு அளிக்கலாம் அல்லது குறைந்த வரி வசூலிக்கலாம்.
- அதிக மக்கள்தொகை என்பது ஒரு நகரம் அல்லது பிராந்தியத்தின் மக்கள்தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் உணவுப் பற்றாக்குறை, வீட்டுவசதிப் பற்றாக்குறை மற்றும் வேலைப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அது ஏற்படுத்துகிறது. அதிக மக்கள் தொகைக்கு வறுமையும் ஒரு காரணம் என்பதால், அது பொருளாதாரத்தில் எதிர் மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
- மக்கள்தொகை பெருக்கத்திற்கான பொதுவான காரணங்கள் அதிகப் பிறப்பு விகிதம் மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகும். மனிதனால் தூண்டப் பட்ட காலநிலை மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மக்கள்தொகை தான் காரணமாக உள்ளது. எனவே அதிக மக்கள் தொகையினால் இந்தியச் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - -