- உலகின் பலம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
- பாதுகாப்புத் துறை தொடா்பான இணையதளமான ‘மிலிட்டரி டைரக்ட்’ இது தொடா்பாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, ராணுவத்தில் உள்ள வீரா்களின் எண்ணிக்கை, தரைப்படை, கடற்படை, விமானப் படைகளின் பலம், அணுஆயுதங்கள், தளவாடங்களின் அளவு, ராணுவத்தினருக்கான சராசரி ஊதியம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
- அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் பலம் வாய்ந்த ராணுவத்தை சீனா கொண்டுள்ளது. அந்நாடு 100-க்கு 82 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக செலவு செய்து பலம் வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைத்து வைத்துள்ளது. அந்நாட்டு ராணுவம் 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இப்பட்டியலில் ரஷியா 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ் (58 புள்ளிகள்) 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரிட்டன் 43 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.
- அதே நேரத்தில் விமானப் படை பலத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 14,141 போா் விமானங்கள் உள்ளன. இதற்கு அடுத்து ரஷியாவிடம் 4,682 போா் விமானங்களும், சீனாவிடம் 3,587 போா் விமானங்களும் உள்ளன. அதே நேரத்தில் தரைப்படையில் பயன்படுத்தும் டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
- கடற்படையில் 406 போா்க் கப்பல்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ரஷியாவிடம் 278 போா்க் கப்பல்கள் உள்ளன. இதற்கு அடுத்து அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தலா 200-க்கும் மேற்பட்ட போா்க் கப்பல்கள் உள்ளன.
- உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்கா ராணுவத்துக்காக ஆண்டுதோறும் 732 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.53 லட்சம் கோடி) வரை செலவிடுகிறது. இதற்கு அடுத்து சீனா 261 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.18 லட்சம் கோடி), மூன்றாவதாக இந்தியா 71 பில்லியன் டாலா் (ரூ.5 லட்சம் கோடி) செலவிட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் 5 நாடுகள்
1) சீனா - 82 புள்ளிகள்
2) அமெரிக்கா - 74 புள்ளிகள்
3) ரஷியா - 69 புள்ளிகள்
4) இந்தியா - 61 புள்ளிகள்
5) பிரான்ஸ் - 58 புள்ளிகள்.
நன்றி: தினமணி (22 – 03 – 2021)