TNPSC Thervupettagam

உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது? ஏன்?

March 12 , 2023 509 days 263 0
  • பெண்களைக் கொண்டாடும் பொருட்டும் அவர்களுக்கான உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு, இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என எந்த வேறுபாடும் இன்றி பெண்கள் தங்கள் சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் நாள் இன்று! 

சர்வதேச பெண்கள் இயக்கம்

  • மகளிர் நாள் கொண்டாடப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில், இது பெண்களுக்கான ஒரு புதிய உலகளாவிய பரிமாணமாக பார்க்கப்பட்டது. பின்னர் சர்வதேச பெண்கள் இயக்கம்(IWD) நடத்திய 4 மிகப்பெரிய பெண்கள் மாநாடுகளால், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் அரசியல், பொருளாதார அரங்கங்களில் பங்கேற்க வித்திட்டது. 
  • உலக மகளிர் நாள் முதல் முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. எனினும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளிலிருந்து முதன்முதலில் தோன்றியது. 

முதல் இயக்கம் 

  • 1848 ஆம் ஆண்டு, பெண்கள் அடிமைப்படுத்தப்படுத்துவதற்கு எதிராக, அமெரிக்கர்களான எலிசபெத் கேடி ஸ்டாண்டன், லுக்ரேஷியா மோட் ஆகிய பெண்கள் நியூயார்க்கில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். இது முதல் பெண் உரிமை மாநாடு என்று கருதப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்கான முதல் இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் ஐ.நா., மகளிர் நாளை அங்கீகரிக்கவும் இந்த முதல் இயக்கமே அடித்தளமிட்டது. 

மார்ச் 8 - மகளிர் நாள்!

  • முதல்முதலில் 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவால் இந்நாள் கொண்டாடப்பட்டது. 
  • 1857 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற பின்னலாடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை அளிக்கும் விதமாக அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி இந்த நாளை தேர்வு செய்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் தங்களின் வேலை நேரம் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினர். 
  • அதுபோல 1917 ஆம் ஆண்டு (பிப்ரவரி 23 ஆம் தேதி) ரஷியாவில் 'உணவும் அமைதியும்' என்ற பெயரில் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமே சோவியத் ரஷியாவில் பெண்களுக்கு வாக்குரிமை பெற வழிவகுத்தது. கிரிகோரியன் காலண்டர்படி, அந்த நாள் மார்ச் 8.
  • இதன்பின்னர் 1977ல், மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் நாளாக ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்தது. 

2023 ஆம் ஆண்டு கருப்பொருள் 

  • 2023 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. கருப்பொருள் 'டிஜிட்ஆல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்'. மாறி வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் முன்னேற்றத்திற்காக போராடும் பெண்கள், சிறுமிகளை அங்கீகரித்துக் கொண்டாடப்படுகிறது. 
  • பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளில் எண்ம(டிஜிட்டல்) பாலின இடைவெளியின் தாக்கத்தை ஆராயவும், எண்ம இடைவெளிகளில் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நாள் வலியுறுத்துகிறது. 
  • ஏனெனில், உலக அளவில் 37% பெண்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. பெண்கள் இணையத்தை அணுக முடியாமலோ, ஆன்லைனில் பாதுகாப்பாக உணர முடியாமலோ தேவையான எண்ம (டிஜிட்டல்) திறன்களை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியாது. இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான தொழில்ககளில் அவர்கள் ஈடுபடும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஏனெனில், 2050 ஆம் ஆண்டுக்குள் 75% வேலைகள் இந்த நான்கு துறைகளை சார்ந்தே இருக்கும். இன்றும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பதவிகளில் பெண்கள் வெறும் 22% மட்டுமே உள்ளனர். பெண்களை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வருவதே இந்த ஆண்டு மகளிர் நாளின் நோக்கம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

தொடரும் போராட்டம் 

  • பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வளர்ச்சி மேம்பாட்டு வந்தாலும் இன்றும் இன்றும் பல நாடுகளில் பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். 
  • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி இதற்கு ஒரு பெரும் உதாரணம். தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, என உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களின் ஹிஜாப் போராட்டமும் உலக அளவில் கவனம் ஈர்த்த ஒன்று. 
  • ஏன் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக கல்லூரி மாணவிகளுக்கு வகுப்புகளில் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். 
  • உலகம் முழுவதும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுவது மட்டுமின்றி அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. 

நன்றி: தினமணி (12 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்