TNPSC Thervupettagam

உலக வங்கி அறிக்கை – குப்பை!

August 11 , 2024 6 hrs 0 min 22 0
  • ‘பொறியில் சிக்கிய நடுத்தர வருவாய் நாடுகள்’ என்று தலைப்பிட்டு உலக வளர்ச்சி அறிக்கை ஒன்றை இந்த ஆகஸ்ட் முதல் நாள் வெளியிட்டது உலக வங்கி. இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைக் கேலிசெய்யும் விதத்திலும் இப்போது கடைப்பிடிக்கும் தன்னிறைவுக் கொள்கைகளை விட்டுவிடுமாறு நயவஞ்சகமாக ஆலோசனை கூறியும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
  • ‘அமெரிக்காவின் தனிநபர் (நபர்வாரி) வருவாயில் நாலில் ஒரு பங்கை (25%) அடைய, இந்தியாவுக்கு இன்னும் 75 ஆண்டுகள் பிடிக்கும்’ என்கிறது அது. உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தி 2047க்குள் வளர்ந்த நாடாகிவிட வேண்டும் என்ற இந்தியாவின் ‘ஆத்மநிர்பார்’ கொள்கையைத்தான் இப்படி ஏளனம் செய்கிறது.

என்ன சொல்கிறது அறிக்கை?

  • ‘உலக மக்கள்தொகையில் 75%, உலக மொத்த உற்பத்தியில் 40%, கொண்டுள்ள 108 நடுத்தர வருவாய் நாடுகளின் தரவுகளை அலசி ஆராய்ந்த பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்கிறது உலக வங்கி. கள யதார்த்த நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல், கபடமான உள்நோக்கத்துடன், தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியாத வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உயர் வளர்ச்சி வேகம் மூலம் வளர்ந்த நாடாகிவிட வேண்டும் என்ற இந்தியா, இந்தோனேசியா நாடுகளின் தொழில் கொள்கையை அது கடுமையாக சாடுகிறது. நிதானமாகவும், தொடர்ச்சியாகவும் நீண்ட காலம் உழைத்து பெறும் வளர்ச்சியே நல்லது என்று பரிந்துரைக்கிறது.
  • நடுத்தர வருவாயுள்ள நாடுகள் தொழில் உற்பத்தியில் சொந்தமாக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தக் கூடாது, உயர் வருவாயுள்ள பணக்கார நாடுகள் ஏற்கெனவே தயாரித்துள்ள உயர் தொழில்நுட்பங்களை (அதிக செலவுசெய்து) பயன்படுத்த வேண்டும் என்கிறது. சொந்தமான முயற்சியில் (ஆத்மநிர்பார் போல) மேற்கொள்ளப்படும் உற்பத்தி முறைகளால் இடுபொருள்கள்தான் அதிகம் வீணடிக்கப்படும் என்கிறது.
  • தென் கொரியாவும் பிரேசிலும் அரசின் மானிய உதவிகளோடு பணக்கார நாடுகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது நல்ல முன்னுதாரணம் என்கிறது. அறிவுசார் சொத்துரிமை மீது இறக்குமதி வரிவிதித்த பிரேசிலை அதேசமயம் கண்டிக்கிறது. பிரேசிலின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டில் காப்புரிமப் பதிவுகள் அதிகமாயின - ஆனால் எல்லாமே தரக் குறைவானவை என்கிறது.
  • மலேசியா, இந்தோனேசியா முயற்சி செய்ததைப் போல உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை வளர்க்க இந்தியாவும் முயற்சி செய்யக் கூடாது என்று கூறும் அறிக்கை செமி-கண்டக்டர்கள் மற்றும் ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள், கருவிகள் தயாரிப்பை உள்நாட்டிலேயே மேற்கொள்வது கூடாது என்கிறது.
  • ராணுவத்துக்குத் தேவைப்படும் 509 சாதனங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யக்கூடாது என்று இந்தியா தடை விதித்த பிறகு, உலகின் 25 ராணுவ ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா இல்லை என்று ‘தி எகானமிஸ்ட்’ கூறுகிறது.
  • உயர் வருவாய் நாடுகளில் வளரும் வேகத்தில், திறமையான தொழில் நிறுவனங்கள் இந்தியா, மெக்ஸிகோ, பெரு ஆகிய நாடுகளில் வளர்வதில்லை; காரணம், அரசின் கட்டுப்பாடுகளால் ஏற்படும் உற்பத்திச் செலவு அதிகரிப்புதான் - இது அரசின் கொள்கைகள் ஏற்படுத்தும் குளறுபடிகள் என்று பிரபல பொருளாதார அறிஞர் ஷும்பிடர் தெரிவித்த கருத்தைத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறது உலக வங்கி. அமெரிக்காவில் ஒரு தொழில் நிறுவனம் 40 ஆண்டுகளில் ஏழு மடங்கு பெரிதாகிறது என்றால் இந்தியாவில் அதற்கு 80 ஆண்டுகள் பிடிக்கிறது என்கிறது.
  • உலக வங்கியின் அறிக்கை முழுக்க முழுக்க தவறான அடிப்படைகளைக் கொண்டது.

இந்தியா உலக முன்னணி

  • இந்தியாவில் தடைகளின்றி தொழில் உற்பத்தி செய்ய ‘டெஸ்லா’ நிறுவனம் விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டதும், இறக்குமதித் தீர்வையிலிருந்து முழு விலக்கு தர முடியாது என்று கூறியதும் கிளப்பிய எரிச்சல்தான் இந்த உலக வங்கி வளர்ச்சி அறிக்கை. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களால், உலக அரங்கில் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியா வகிக்கும் சிறப்பிடம் புரிந்துகொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. மின்சாரத்தில் (பேட்டரி உதவியில்) ஓடும் மோட்டார் வாகனத் தயாரிப்பு இந்தியாவில் இப்போது பெருகிவருகிறது. மின்சார வாகன விற்பனையில் 66% வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
  • இணையவழி நிதி பரிமாற்றங்களில் இந்தியா தனக்கென்று தனியிடத்தை உருவாக்கிவிட்டது. உலக வங்கியே அங்கீகரித்துள்ள ‘யுபிஐ’ முறை இப்போது இந்திய தொழில் – வர்த்தகத் துறையில் பரிமாற்றங்களைப் புரட்சிகரமாக விரைவுபடுத்திவிட்டது. மிகச் சிறிய பரிமாற்றத்துக்குக்கூட இது பயன்படுகிறது.
  • இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்களுடைய நாடுகளிலும் பின்பற்ற ஏராளமான நாடுகள் ஆவலோடு முன்வந்துள்ளன. ‘விசா’, ‘மாஸ்டர்கார்டு’ ஆகிய நிறுவனங்கள் போட்டியிட முடியாமல் திகைக்கின்றன. அது மட்டுமல்ல அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்பாத நாடுகளிடம் (ரஷ்யா போல), சர்வதேச வர்த்தகத்தை ‘ரூபாய்’ மூலமே செய்துகொள்ளத் தொடங்கிவிட்டது இந்தியா.
  • விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணத் துறையிலும் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரித்த தொழில்நுட்பம் தரத்தில் உயர்ந்ததாகவும் செலவு குறைந்ததாகவும் நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கிறது. ‘பிஎஸ்எல்வி’, ‘சந்திரயான்’ திட்டங்கள் பெற்ற வெற்றி சாதாரணமானவை அல்ல. ‘கிரையோஜெனிக்’ இயந்திரத் தொழில்நுட்பத்தை எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள் என்று கேட்டபோது, நெருங்கிய நட்பு நாடாக இருந்தபோதிலும் ரஷ்யா நிராகரித்தது என்பதையும் இங்கே நினைவுகூர்ந்தாக வேண்டும்.
  • நிலவின் புறப்பகுதியை (இருட்டுப்பகுதி என்றும் கூறலாம்) அடைந்த முதல் நாடு இந்தியாதான். அதையும் வெறும் ரூ.615 கோடி செலவில் சாதித்திருக்கிறோம். அதேவேளையில் சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய அப்போலோ ராக்கெட் சோதனை முயற்சிக்கு 25,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு பிடித்தது.
  • உலக ராணுவ ஏற்றுமதியாளர்கள் பட்டியிலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டுவிட்டதாக ‘தி எகானமிஸ்ட்’ கூறும் அதேவேளையில்தான், கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் ராணுவ சாதன ஏற்றுமதி பல மடங்காக உயர்ந்துவருகிறது. ஏராளமான நாடுகள் இந்தியாவிடமிருந்து துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், தானியங்கி துப்பாக்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளன.
  • இப்படி ‘பல தவறுக’ளைச் செய்த பிறகும் உலகின் வேகமான வளர்ச்சி கொண்ட பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா ஏன் இருக்கிறது என்பதைக் கூற, உலக வங்கி அறிக்கை மறந்துவிட்டது. அது பாராட்டும் பணக்கார நாடுகளில், பணவீக்க விகிதம் கடுமையாக உயர்ந்திருக்கிறது, தொழில் துறை உற்பத்தி சுருங்கியும் தேங்கியும் காணப்படுகிறது என்பதை ஏன் சொல்லவில்லை?

இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும்

  • பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு கடுமையாகிவிட்டது. பொருளாதார வளர்ச்சி சரிந்துவருகிறது, கடன் சுமை அதிகரித்தும்விட்டது. இந்தியாவோ அதற்கு மாறாக, வெளிவர்த்தகப் பற்றுவரவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரூபாயின் மாற்று மதிப்பு பெருமளவுக்கு நிலையாகவே தொடர்கிறது. அடித்தளக் கட்டமைப்பு வேகமாக வளர்கிறது.
  • அறிவுசார் சொத்துரிமை இனத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காப்புரிமை கோரி நிறைய பதிவுகள் அதிகரித்துள்ளன. 2023இல் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் காப்புரிமைப் பதிவு (பேடண்ட்) ஏற்பட்டிருக்கிறது. புதிதாகவும் வேகமாகவும் வளரும் தொழில் துறைகளில் (சன் ரைஸ் இன்டஸ்ட்ரீஸ்) புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவே இந்திய அரசு 2024 - 2025 நிதிநிலை அறிக்கையில் ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது.
  • இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை வறுமையைக் குறைப்பதிலும் இதுவரை இருந்திராத முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. ஏழைகள், நடுத்தர வருவாயுள்ள குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, கல்வி பயில உதவிகள், மருத்துவ உதவிக்கு இலவசக் காப்பீட்டுடன் கூடிய வசதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகரிப்பு ஆகியவை ஏழைகளின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திவருகிறது. இந்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவு (யுஎன்டிபி) பாராட்டுகிறது.
  • ‘வாங்குதிறன் சரிசம நிலையில்’ (பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி) இந்தியர்களின் நபர்வாரி திறன் 10,000 டாலர்களுக்கும் மேல் என்பது உலக வங்கிக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அளவு அமெரிக்காவைவிட அதிகம். எனவே, அடுத்த 23 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாகிவிடுமா என்று உலக வங்கி ஏளனம் செய்திருக்கக் கூடாது.

வரலாறு சொல்வது என்ன?

  • இந்தியாவின் வளர்ச்சி உத்தியை உலக வங்கி கடுமையாக சாடுகிறது என்றால், இந்தியா சரியான பாதையில்தான் செல்கிறது என்று பொருள் என்று உலக வங்கியைப் பல ஆண்டுகளாக கவனித்துவரும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • பணக்கார நாடுகளின் நலனுக்காக இப்படிப்பட்ட உள்நோக்க அறிக்கைகளை உலக வங்கி திணிக்கப் பார்க்கிறது. கடந்த காலத்தில்கூட உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் (ஐஎம்எஃப்) இந்தியா வளர்ந்துவிடக் கூடாது என்று பல நிபந்தனைகளை விதித்தன என்பது வரலாறு.
  • ‘நடுத்தர வருவாயுள்ள நாடுகளுக்கான பொறி’ என்ற தலைப்பில் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற தன்னிறைவுத் திட்டம், காலத்துக்கு ஒவ்வாத பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல, இந்திய அரசின் கடந்தகால அனுபவத்தின் அடிப்படையிலானது. ‘உலகமயம்’ என்ற கொள்கையைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினால் உள்நாட்டுத் தொழில் துறை நசித்துவிடும் என்ற அனுபவத்தினால் விளைந்தது ‘ஆத்மநிர்பார்’.
  • இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இந்த அறிக்கையை நிராகரிப்பதுடன், தனக்கிருக்கும் தனி அந்தஸ்தைப் பயன்படுத்தி, இப்படியெல்லாம் குப்பைகளை அறிக்கைகளாக்கி உலக வங்கி வீணாக்கக் கூடாது என்று கண்டிக்கவும் வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்