உள்ளத்தில் உண்மை... வாக்கினிலே இனிமை...
- நாம் பேசும் பேச்சில் நேர்மையும், நாம் பயன்படுத்தும் சொற்களில் தெளிவும் மிக அவசியமான ஒன்று. நம் பேச்சு உண்மையுள்ளதாகவும் அது சரியான தகவல்களை சுமந்து வருவதாகவும் இருப்பது மிக முக்கியம். அதோடு அது கள்ளம், கபடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக, வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது மட்டுமே நம்முடைய பேச்சு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
- இத்தகைய பண்புகளில் குறை ஏற்படும்போது கேட்பவர்கள் நம்மை சந்தேக கண்ணுடன் பார்ப்பார்கள். நம் பேச்சின் ஓசை அவர்கள் காதுகளை எட்டினாலும் பேச்சின் பொருள் அவர்களின் மனதை எட்டாது. எனவே, நேர்மையான சொற்களால் நம்முடைய பேச்சை நிரப்ப வேண்டியது கட்டாயம்.
- உண்மையான அனுபவங்கள், நிகழ்வுகள், தகவல்கள் நிரம்பி வழியும்போது நம்முடைய பேச்சின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். நம்பிக்கையுடனும், தெளிவுடனும் சரியான குரல் ஓசையுடனும் நேர்மையாகப் பேசும்போது அந்தப் பேச்சு மிகுந்த வரவேற்பைப் பெறும். இன்றைய காலகட்டத்தில் நாம் என்றோ பேசிய சொற்கள்கூட நொடிப்பொழுதில் பிறர் காதுகளை எட்டிவிடும். முன்பு ஒரு முறை ஒரு கருத்தைப் பேசி, இப்போது வேறு விதமாகப் பேசினால் அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விடுவர்.
- பேசும் சொல்லுக்கு ஈடாக பேசாத உடல் மொழியும், திறம்படப் பேசுதலின் முக்கிய அங்கமாகிறது. எந்த அளவுக்குப் பேசும் சொற்களை மற்றவர்கள் கேட்கிறார்களோ, அந்த அளவுக்குப் பேசுபவரின் உடல் மொழியையும் கவனிக்கிறார்கள். குறிப்பாக முக பாவனைகள், சைகைகள், கண் தொடர்பு பேசும் தோரணை, உடல் அசைவுகள், உட்காரும் முறை ஆகியவை உடல் மொழியைப் பறைசாற்றும். பேசுபவரின் ஈடுபாட்டை உடல் மொழி வெளிப்படுத்தும். உடல் மொழி சரியாக இருக்கும்போது மட்டுமே பேசும் சொற்கள் எதிர்பார்த்த பலனைத் தரும். ஒருவரின் உடல் தோற்றத்தைப் போன்றே அவரின் குரலும் அவரைப் பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்தும்.
- இடத்துக்கு இடம் மக்களின் பழக்க வழக்கத்தைப் பொருத்தும் சொற்களின் பொருள் வேறுபடும். கவனக் குறைவாகப் பேசும் சொற்கள் நீங்காத துன்பத்தை வரவழைத்துவிடும். தனிப்பட்ட சூழலில் பேசுவதும், ஒரு குழுவிலோ, பொதுமக்கள் முன்னிலையிலோ பேசுவதும் நிறைய வித்தியாசங்களைப் பெற்றிருக்கும். யாருடன் உரையாடுகிறோம் என்பதற்கேற்ப நம் சொற்களின் உச்சரிப்பு தொனி இருப்பது அவசியம்.
- நாம் பேசும் தொனி நம்முடைய தனிப்பட்ட சிந்தனை, தன்னம்பிக்கை, அறிவின் ஆழம், மற்றவர்கள் மீது கொண்டுள்ள மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்தும். சொற்கள் சரியாக இருந்தாலும் அந்தச் சொற்களைப் பேசும் தன்மை தவறாக இருந்துவிட்டால், வித்தியாசமான விளைவுகளைக் காண நேரிடும். உணர்ச்சிபூர்வமாக பேசுவதையும், அமைதியாகப் பேசுவதையும் கோபத்துடன் பேசுவதையும், வெறுப்புடன் பேசுவதையும் குரலின் தொனியே வெளிப்படுத்திவிடும்.
- பெரும் பேச்சாளர்கள் தங்கள் சொற்களை உச்சரிக்கும் தொனிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர். கேட்பவர்களும், பேச்சாளரின் பேச்சுக்கு அதிக அக்கறை காட்டுகின்றனர். சரியான பேச்சே சொற்களின் அர்த்தத்தைச் சரியாக சென்றடைய வைக்கிறது. சொற்கள் தெளிவாகவும், கருத்துமிக்கதாகவும் இருக்கத் தகுந்த தயாரிப்பு கண்டிப்பாகத் தேவை.
- "இரண்டு மணி நேரம் உரையாற்ற வேண்டுமா? - இப்போதே நான் தயார். ஐந்து நிமிஷம் உரையாற்ற வேண்டுமா? அதைத் தயாரிக்க இரண்டு வாரமாகும்' என்றார் பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான மார்க் டிவைன்.
- எல்லா சிறந்த பேச்சாளர்களும் முதலில் தடுமாற்றத்துடன்தான் தொடங்குகின்றனர். நாளடைவில் அவர்களின் தயாரிப்பின் ஆழம் அவர்களை பெரிய பேச்சாளர்களாக மாற்றுகிறது.
- தயாரிப்பு உள்ளபோதுதான் தகுந்த சொற்களைத் தேர்வு செய்து திறம்பட எடுத்துரைக்க முடிகிறது. எந்தத் தருணத்தில் பேசினாலும் கேட்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும். நம் அறிவின் ஆழத்தை மட்டுமே வெளிப்படுத்த முனைந்து, கேட்போருக்குப் புரியாத சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசினால் அந்தப் பேச்சால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.
- தெளிவாகப் பேசுவது பேச்சாளர் மீதான நம்பிக்கையை வளர்க்கும். கேட்பவர்கள் எல்லோரும் கேட்பதற்கு உகந்த குரல் ஓசையுடன் பேச வேண்டும். நாம் பேசுவதை எல்லோரும் கேட்க முடியாதபோது தேவையற்ற சலசலப்பு ஏற்படும். தெளிவான குரலில், தெளிவான சொற்களைப் பயன்படுத்திப் பேசுபவர்கள் நிலைத்து நிற்கிறார்கள். இன்று பலர் தயாரிப்பின்றி நிகழ்ச்சிகளில் பேசும்போது அரைகுறைத் தகவல்களைப் பேசுவதைக் காண்கிறோம். இவ்வாறு பேசுவதில் அவர்களின் அறிவின் ஆழம் அல்லது ஆழமின்மை மிக விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும். உள்ளத்தின்ஆழத்திலிருந்து உண்மையான தகவல்கள் வரும்போது மட்டுமே நம் பேச்சு மெச்சப்படும்.
- தடைகள் தகர்க்கப்படும், எளிமை நிலைகொள்ளும், தாக்கம் அதிகரிக்கும், உறவுகள் மேம்படும். சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நேர்மையாக இருப்பவர்கள், மற்றவர்களை ஈர்க்கும் சக்தி பெற்றவர்களாக திகழ்கின்றனர். அவர்களது வார்த்தைகள் அதிக வல்லமையுடையவையாகத் திகழ்கின்றன. நேர்மை உடையவர்களே சமூகத்தால் மதிக்கப்படுகின்றனர், பின்பற்றப்படுகின்றனர். நேர்மை இல்லாமல் பேசுபவர்களைக் கண்டு மற்றவர்கள் ஒதுங்கியே செல்கின்றனர்.
- எனவே, திறம்படப் பேசுவது மட்டும்மல்லாமல், நேர்மையுடன் பேச வேண்டியது கட்டாயமாகும். திறம்படப் பேசுதல் ஒருவர் வாழ்வில் வெற்றிகள் குவிப்பதற்குத் தேவையான அடித்தளமாகும்.
நன்றி: தினமணி (08 – 08 – 2024)