TNPSC Thervupettagam

உள்ளாட்சியைப் புரிந்து கொள்வோம்

May 5 , 2022 825 days 584 0
  • மத்திய அரசு தேசிய கிராம சுயராஜ்ய இயக்க செயல்பாட்டுத் திட்டத்தை ஐந்தாண்டு காலத்திற்கு (2022-லிருந்து 2026-ஆம் ஆண்டுவரை) நீட்டித்து அதற்காக 5,911 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி 2.78 லட்சம் கிராமப்புற உள்ளாட்சிகளின் திறனைக் கூட்ட பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் திட்டத்தின் இலக்கு.
  • இந்தத் திட்ட செயல்பாடு என்பது இந்திய கிராமப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 1.36 கோடி மக்கள் பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப் படுவது தான். அதாவது உள்ளாட்சித் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ள நீடித்த வளர்ச்சியின் இலக்குகளில் மிக முக்கியமான செயல்பாடுகளை கிராமங்களில் நிகழ்த்தி ஒரு சில இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான திறன் மேம்பாட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சியின் மூலம் அளிக்க வேண்டும்.
  • மக்கள் பிரதிநிதிகள் எந்தெந்த செயல்பாடுகளிலெல்லாம் நிபுணத்துவத்துடன் செயலாற்ற வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு தெளிவு படுத்திவிட்டது மத்திய அரசு. அவை, வறுமை ஒழிப்பு, வாழ்வாதார மேம்பாடு, சுகாதாரம், குழந்தை நேயம், தூய்மை, நீர் மேலாண்மை, பசுமை கிராமம், பெண் குழந்தை பாதுகாப்பு, சமூக நீதி ஆகியவை. அனைத்து செயல்பாடுகளிலும் நிபுணத்துவத்தைக் கொண்டு வந்து கிராமங்களை தற்சார்பு பெற்றவையாக மாற்றுவதற்கு பஞ்சாயத்தும் மக்களும் இணைந்து சாதனை படைக்க வேண்டும்.
  • மேற்கூறிய ஒன்பது இலக்குகள் பற்றியப் புரிதலையும், அவற்றை அடைவதற்கு தேவையான ஆற்றலையும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இந்த திட்ட செயல்பாடுகளுக்கு ரூ.3,700 கோடியை மத்திய அரசும், ரூ. 2,211 கோடியை மாநில அரசும் தந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆற்றல் பெருக்கத்திற்கான பயிற்சியை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
  • இன்றைய சூழலில் நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்படும் போக்கு, ஒரு சில கருத்தாக்கங்களை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதாவது உள்ளாட்சி என்பது ஓர் அரசாங்கம் என்றபோதும், அது மத்திய - மாநில அரசுகள் தரும் நிதியினை செலவிடும் நிறுவனம் என்ற பாணியில்தான் செயல்படுகின்றது. அந்த நிதியையும் நம் பஞ்சாயத்துகள் எப்படிப் பார்க்கின்றன என்றால், அரசாங்கம் தருகின்ற பணம் என்ற பார்வை மேலோங்கி, இது நம் மக்கள் பணம், நம் பணம், நம் பொறுப்பு என்ற உணர்வற்று செயல்படுகின்ற மனப்பாங்கைப் பார்த்து வருகின்றோம்.
  •  உள்ளாட்சி, தன்னாட்சி பெற்ற நிறுவனமாகவும், தற்சார்பு உடையதாகவும் விளங்க, பஞ்சாயத்துகள் அதற்கான புரிதலுடன் செயல்பட வேண்டும். பஞ்சாயத்துகளின் செயல்பாடுகள் மூலம்தான் மேற்கூறிய இலக்குகள் சாத்தியப்படும்.
  • மக்களுக்கு அருகில் பொறுப்புமிக்க ஓர் மக்கள் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். அது அரசு தரும் நிதியினையும், தாங்கள் உருவாக்குகின்ற நிதியினையும் பொறுப்புடன் நிர்வகித்து மக்கள் பங்கேற்புடன் ஒரு வளர்ச்சித் திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த புதிய உள்ளாட்சி அரசாங்கம். இதனை கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும் நடைமுறைப் படுத்தவில்லை.
  • சில மாநிலங்களில் சோதனை முயற்சியாக ஒருசில பஞ்சாயத்துகளில் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திட்டம் தயாரித்து செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கூட அப்படி 54 கிராம பஞ்சாயத்துகளில் மாநில திட்டக்குழுவின் வழிகாட்டுதலுடன் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் உதவியுடன் மக்கள் பங்கேற்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றை அச்சிட்டு இதுபோல் மற்ற பஞ்சாயத்துகளும் செய்திட வேண்டும் என வேண்டுதல் விடுக்கப்பட்டது.
  • அரசியல் சாசனத்தில் அடித்தளத்தில் மக்கள் பங்கேற்புடன் திட்டமிடுவது என்பது பணிக்கப் பட்டிருந்தாலும், 14-ஆவது நிதிக்குழு, கிராம அளவில் திட்டமிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றவரை எந்தத் திட்டமும் கிராமங்களில் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்படவில்லை.
  • மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற திட்டமிடும் பணியை பஞ்சாயத்துகள் செய்ய ஆரம்பித்தன. எப்படி என்றால், மத்திய நிதிக்குழு தரும் நிதியை செலவழிக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. அதுவும் கட்டுமானப்பணிகளை நிறைவேற்ற ஒரு திட்டமிடல் நடைபெற்றதே யொழிய அறிவியல்பூர்வமாக மக்கள் பங்கேற்புத் திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.
  • இதனையறிந்த மத்திய அரசு, பஞ்சாயத்துகளில் இது பற்றிய ஒரு புரிதலை உருவாக்க மக்கள் இயக்க செயல்பாடாக மாற்றி விழிப்புணர்வுக்காக ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியது. அதுவும் கேரளத்தில் நடைபெற்றதுபோல் சிறப்பாக நடைபெறாமல் வெறும் சடங்காக மாற்றப்பட்டது.
  • அதே நேரத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் நூறுநாள் வேலைக்கான திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதிலும் கூட மத்திய அரசு ஒதுக்கிய நிதியை செலவழிப்பதற்காக பஞ்சாயத்துகள் செயல்பட்டனவேயன்றி, மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டனவா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
  • மத்திய நிதி ஆணையம் தொடர்ந்து பஞ்சாயத்துகளுக்கு வழங்கும் நிதியை அதிகரித்த வண்ணம் உள்ளது. 14-ஆவது நிதிக்குழு, கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கிய நிதி இரண்டு லட்சம் கோடி ரூபாய். அதே போல் 15-ஆவது நிதிக்குழு ஒதுக்கிய நிதி 2.36 லட்சம் கோடி ரூபாய். அதே போல் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு 2005-இல் 6,408 கோடி ரூபாய் ஒதுக்கியதில் ஆரம்பித்து, 2021-இல் ஒரு லட்சம் கோடிக்கு வந்தது நிதி ஒதுக்கீடு.
  • இது போக மாநில நிதிக்குழு நிதி, திட்ட நிதி என்று இரண்டு உண்டு. இந்த இரண்டு பெரு நிதியும் முறையாக செலவழித்திருந்தாலே பெரும்பாலான மக்கள் தேவைகளை நம் பஞ்சாயத்துகள் பூர்த்தி செய்திருக்க முடியும். இந்த நிதிகள் எப்படிச் செலவழிக்கப்பட்டன என்பதை ஆய்வு செய்தால் நாம் எப்படிப் பொறுப்பற்றவர்களாய் செயல்பட்டுள்ளோம் என்பது நமக்குப் புரியும்.
  • இந்த நூறுநாள் வேலையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் செலவழித்த தொகை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை சற்று கவனித்து எவ்வளவு தொகை செலவழித்தோமோ அந்தத் தொகைக்கு நடந்த பணியை கிராமத்து மக்களே சற்று நிதானமாக ஆய்வு செய்து பார்த்தால் நாம் அனைவரும் எவ்வளவு பொறுப்பற்றவர்களாக மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய அனுமதித்துள்ளோம் என்பது புரியும்.
  • இந்தத் திட்டம் ஊழல் நிறைந்ததாக இருந்தும் ஏன் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் அறிந்து, அது யாருக்கானது என்பதையறிந்து வைத்திருப்பதால் தான். தவறு திட்டத்தில் இல்லை, திட்டச் செயல்பாட்டில்தான். மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு இந்தியாவில் குறைவில்லை. திட்ட செயல்பாடுகளால் உருவாக வேண்டிய விளைவுகள் எதிர்பார்த்த அளவில் உருவாகவில்லை என்பதுதான் நாம் இன்று காணும் எதார்த்த நிலை.

இதற்கான காரணம்

  • களத்தில் புரிதலற்று, பொறுப்பற்று திட்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பது வெள்ளிடைமலை. கிராம மேம்பாட்டு செயல்பாடுகளிலிருந்த பொறுப்பற்ற தன்மையையும், அறியாமையையும் போக்க வந்ததுதான் புதிய உள்ளாட்சி அரசாங்கம். இந்தப் புதிய உள்ளாட்சி ஏற்பட்டு 29 ஆண்டுகளைக் கடந்த பின்னும் சூழல் மாறவில்லை என்றால் பிரச்னை எங்கிருக்கிறது என்று ஆராய வேண்டாமா?
  • புதிய உள்ளாட்சியின் பொறுப்புகளையும், கடமைகளையும், செயல்பாடுகளையும் உற்று கவனித்தால் புதிய சூழலில் உள்ளாட்சிகள் மத்திய - மாநில அரசுகளால் செய்ய இயலாத செயல்களைச் செய்ய வந்தவை என்பது புரியும். அது மட்டுமல்ல, பல அடிப்படை மாற்றங்களை மக்கள் மத்தியில் கொண்டுவர நாம் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதனை அறியாது, அரசு தரும் நிதியினை செலவு செய்ய செயல்படும் அமைப்புக்களாக உள்ளாட்சிகளை சிலர் கொண்டுவந்து விட்டனர் என்பதுதான் நாம் பார்க்கும் கள நிலவரம்.
  • இந்த நிலையை மாற்றி, பஞ்சாயத்துகள் குறிப்பிட்ட மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஆற்றலையும், திறனையும் பெருக்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வந்துள்ளது.
  • இத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தி பஞ்சாயத்துத் தலைவர்களின் திறனை வளர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் மிக முக்கியப் பணியாகும்.
  • இந்தியாவில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்துவரும் அரசுப் பயிற்சி நிறுவனங்கள் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தாலும், அவற்றின் ஆற்றலும், திறனும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன. காரணம், உள்ளாட்சி பயிற்சி நிறுவனங்களை இந்தியா முழுவதும் நாம் திறன் அற்றதாக உருவாக்கி வைத்துள்ளோம்.
  • பொதுவாக, பயிற்சி நிறுவனம் என்பது, பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும் சிந்தனை, நடத்தை, செயல்பாடு என மூன்று நிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரத் தக்க ஆற்றலைப் பெற்றதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப அந்தப் பயிற்சி நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற்றதாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்தியாவில் எத்தனை பயிற்சி நிறுவனங்கள் தேறும் என்று கணக்கிட்டுப் பார்த்தால் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அப்படிப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன.
  • இந்தச் சூழலை பயிற்சி நிறுவனங்கள் மாற்றியமைக்கவில்லை என்றால் இந்த புதிய பயிற்சிகளும் சடங்குகளாக மாற்றம் பெற்று அரசின் நிதி விரயம் ஆகுமே தவிர இந்தத் திட்டத்தால் ஏற்பட வேண்டிய விளைவுகள் ஏற்படுமா என்பது கேள்விக்குறியே.

நன்றி: தினமணி (05 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்