TNPSC Thervupettagam

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உருவாக்கும் சுதந்திரம்

June 14 , 2024 210 days 172 0
  • உள்ளாட்சிகளுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளில் ஒன்று நிதி தொடா்புடையது. இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசும் மாநில அரசும்தான் நாட்டின் வரி நிதியை பங்கீடு செய்து கொள்கின்றன. உள்ளாட்சியை அரசு அமைப்பு என்று பிரகடனம் செய்தபோதும் உள்ளாட்சிக்கான நிதி உருவாக்கும் சுதந்திரமும் நிதியை செலவழிக்கும் சுதந்திரமும் வழங்கப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • எங்கெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உருவாக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் மக்களுக்கு உள்ளாட்சிகளின் சேவைகள் தரமாக இருக்கின்றன. அது மட்டுமல்ல அங்கெல்லாம் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்பும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
  • உலகில் பல நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகள் சட்டபூா்வமாக அரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. டென்மாா்க்கின் உள்ளாட்சிகள்தான் உலகிலேயே தனக்கான நிதியை அதிகம் உருவாக்கிக் கொள்ளும் அமைப்புகள். 40% வருவாயை அந்த உள்ளாட்சிகளே உருவாக்கிக் கொள்கின்றன.
  • இந்தச் சூழலில் இந்தியாவும் இதைக் கவனித்து உள்ளாட்சிக்கு நிதிச் சுதந்திரம் அதாவது நிதி உருவாக்கும் சுதந்திரத்தை உள்ளாட்சிக்கு தருவது பற்றி ஆலோசிக்க ஓா் ஆய்வுக் குழு அமைத்து, அந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரையைப் பெற்று அதன்மேல் நடவடிக்கை மேற்கொள்ள முயன்று வருகிறது.
  • நிதி உருவாக்கும் சுதந்திரம் என்பது, உள்ளாட்சிகள் ஓா் அரசாக செயல்படுவதற்கான முக்கிய அம்சம். அது தனக்கான வருவாயைத் தானே பெருக்கும் சுதந்திரம். அதாவது, உள்ளாட்சிகள் தன் வருமானத்தை வரிகள் விதித்தும் வரி இல்லாத இதர வருமானம் தரும் இனங்கள் மூலம் கிடைக்கும் நிதியை உருவாக்கி பெருக்கிக் கொள்ளுதல்தான் நிதி உருவாக்கும் சுதந்திரம். இன்று இந்தியாவில் உள்ளாட்சிகள் 80% நிதியை மத்திய அரசும் 15% நிதியை மாநில அரசும் தருகின்றன.
  • 5% நிதியைத்தான் உள்ளாட்சிகள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கின்றன. 95% நிதியை மத்திய, மாநில அரசுகள் என வேறு இரண்டு ஆட்சி அமைப்புகள் கொடுப்பதால் இயங்கும் ஓா் அமைப்பை எப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பு என்று கருத முடியும்? அது மத்திய மாநில அரசுகளின் முகவராகத்தானே இருக்க முடியும்?
  • மத்திய மாநில அரசுகள் பல பொதுச் சொத்துகளை திட்டங்கள் மூலமாக உருவாக்குகின்றன. அவற்றைப் பராமரிக்க வேண்டியது உள்ளாட்சியின் பொறுப்பாகும். அதற்கு எங்கேயிருந்து நிதி பெறுவது? தற்போது ஜல் ஜீவன் மிஷனில் கோடிகளில் பணம் வழிந்தோடுகிறது. எனவே, தேவையோ இல்லையோ, எங்கு பாா்த்தாலும் குழாய் பொருத்தும் வேலை நடைபெறுகிறது.
  • அந்தக் குழாய்களை யாா் பராமரிப்பது? அதைப் பராமரிக்க வேண்டியது உள்ளாட்சியின் கடமையாகிறது. இவ்வளவுக்கும் நிதிக்கு எங்கே போவது?
  • இதைப் பற்றி விவாதிப்பதற்காக தேசிய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஹைதராபாதில் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
  • ஹைதராபாதில் இயங்கும் தேசிய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் என்பது இந்திய அரசாங்கத்தின் ஊரக வளா்ச்சித்துறைக்கு சிந்தனைக் கருவூலமாக செயல்படும் நிறுவனம்.
  • இந்த நிறுவனம்தான் இந்திய அரசுக்கு கொள்கைகளையும் முடிவுகளையும் திட்டங்களையும் உருவாக்க ஆலோசனை தரும் நிறுவனம். அத்துடன் ஊரக உள்ளாட்சியில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவா்களுக்கும் பயிற்சியளிக்க பயிற்சித் திட்டத்தை உருவாக்கி, நாடெங்கிலும் உள்ள பயிற்சி நிறுவனங்களுக்கு பயிற்சி நடத்திட வழிவகை செய்யும் நிறுவனம். அதேபோல், நேரடியாகப் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும், திட்டச் செயலாக்கத்திற்கும் உதவிகள் புரியவும் செயல்படும் நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனம்தான் உள்ளாட்சிகள் தன் சொந்த நிதி உருவாக்க உள்ளாட்சிகளைத் தயாரிக்க செயல் திட்டத்தை வடிவமைக்க முயன்று வருகிறது.
  • இதற்காக 30 ஆண்டுகால ஆராய்ச்சி அனுபவம் நிா்வாக அனுபவம் கொண்ட ஆராய்ச்சியாளா்களையும், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளையும் திறமையான பஞ்சாயத்துத் தலைவா்களையும் அவா்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படும் அதிகாரிகளையும் இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்துக்கு அழைத்திருந்தனா். அதில் பங்கேற்று கருத்துக் கூற எனக்கும் அழைப்பு வந்தது.
  • அந்த இரண்டு நாட்களும் இந்தியாவில் உள்ளாட்சியை வலுப்படுத்த உள்ளாட்சிக்கு சுய நிதி உருவாக்கும் சுதந்திரத்தை எப்படி அளிக்க முடியும் என்று விவாதிக்கப்பட்டது.
  • இந்த விவாதத்தின் அடிப்படை நோக்கம், உள்ளாட்சியில் தனக்கான வரி இனங்கள் மற்றும் இதர இனங்களைக் கண்டுபிடித்து, முறையாக வசூல் செய்து, நிதி வருவாயைப் பெருக்கி சுயசாா்புடன் இயங்கக் கூடிய நிறுவனமாக உள்ளாட்சியை மாற்றுவதுதான். மத்திய அரசும் மாநில அரசும் தரும் நிதியில் இயங்கும் நிறுவனமாக மட்டும் உள்ளாட்சிகள் இருந்தால், அந்த நிதி வரவில்லை என்றால் அது இயக்கமற்று மரணித்துவிடும்.
  • தனக்கான நிதியை தான் உருவாக்கும் வல்லமை கொண்டதாக ஆக்கினால் அந்த அமைப்புகள் பணியை முறையாகவும் மக்களின் பங்கேற்போடும் செய்யும். அத்துடன் அவைகள் வலுவான அமைப்புகளாகவும் மாறிவிடும்.
  • நிதி உருவாக்கும் வாய்ப்பு என்பது இந்திய உள்ளாட்சிகளுக்கு அதிகம் இருக்கிறது என்பதை இந்திய ரிசா்வ் வங்கி தன் ஆய்வு மூலமாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமல்ல மத்திய நிதிக்குழு உள்ளாட்சிக்குத் தருவது மத்திய அரசு தர வேண்டிய பங்கு அல்ல. அது தருவது ஒரு மானியம் அல்லது கொடை. அதை எப்போது வேண்டுமானாலும் குறைக்கலாம், கூட்டலாம்.
  • மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் ஜிஎஸ்டி வரியில் மத்திய மாநில அரசுகள் 58:42 என்ற விகிதத்தில் நிதியை பங்கீடு செய்து கொள்கின்றன. அதில் உள்ளாட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. இதுவரை எந்த அரசியல் கட்சியும், எந்த அரசியல்வாதியும் ஜிஎஸ்டியில் ஏன் உள்ளாட்சிக்கு ஒரு பங்கு தரவில்லை, அதுவும் அரசுதானே என்று கேள்வி எழுப்பவில்லை.
  • அதே நேரத்தில் ஒரு சில பஞ்சாயத்துக்கள் எல்லையற்ற அளவில் நிதியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.
  • இந்த பஞ்சாயத்துகளுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமானது? இவற்றிடம் இருக்கும் ஆற்றலும் திறனும் புரிதலும் அதிகம். வரியை தாமாகவே உயா்த்தியுள்ளன. பயன்பாட்டாளா் கட்டணம் என்று வசூல் செய்கின்றன; நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கணிசமான தொகையைப் பெற்றிருக்கின்றன; உள்ளாட்சிக்கான சொத்துக்களை குத்தகைக்கு விட்டு நிதியைப் பெருக்கியிருக்கின்றனா்; பஞ்சாயத்தில் இருக்கும் கட்டடங்களில் வசதிகளை மேம்படுத்தி வாடகைக்கு விட்டிருக்கின்றன; கோயில் திருவிழாக்களின்போது தலைவரி போட்டு வசூல் செய்திருக்கின்றனா்; தொழிலதிபா்களிடம் சென்று தொழில் நிறுவனங்களின் சமூகக் கடப்பாட்டுப் பணி நிதியிலிருந்து பெரும் தொகை பெற்றிருக்கின்றன; அந்த ஊரிலிருந்து வெளிநாடு சென்று பணி செய்வோா், தொழில் செய்வோா் அனைவரிடமும் நிதியைப் பெற்று பஞ்சாயத்து நிதியை அதிகப்படுத்தியிருக்கின்றன; வங்கியில் மத்திய - மாநில அரசுகள் போல் கடன் வாங்கி சில வசதிகளை உருவாக்கி, அந்த உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஈட்டுகின்றனா். இதுபோன்று எண்ணற்ற வழிகளைக் கண்டுபிடித்து தனக்கான நிதியை உருவாக்கி முன்மாதிரியாகச் செயல்படுகின்றன.
  • இது ஒருபுறமிருக்க, பெரும்பாலான பஞ்சாயத்துகள் நிறைய வழிகளில் நிதி உருவாக்குவதைத் தவிா்த்து, நிதியை விரயம் செய்கின்றன. அந்த விரயத்தைக் குறைத்தாலே பஞ்சாயத்துக்களுக்கு நிதி ஆதாரம் கூடும் என்பதை, சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஆய்வுகளில் கிடைத்த தரவுகளிலிருந்து அந்தக் கூட்டத்தில் விளக்கின.
  • தமிழக உள்ளாட்சிகள் தண்ணீா் தேவையான அளவுக்கு தருகின்றோம் எனக் கூறி, தேசிய அளவீட்டில் குறிப்பிட்டதைவிட கூடுதலாக ஒரு மடங்கு தண்ணீா் தந்து தண்ணீரை மட்டும் வீணாக்கவில்லை. எப்படியெல்லாம் பஞ்சாயத்து நிதியை விரயமாக்கியுள்ளன என்பதையும் ஆய்வு மூலம் எடுத்துக்காட்டினா். இதை எப்படி குறைப்பது என்பதையும் விவாதித்தனா்.
  • தற்போதைய 16-ஆவது நிதிக்குழு உள்ளாட்சியை வலுப்படுத்த, சுயசாா்புடையதாக்கவும் சுயநிதி உருவாக்கும் சூழலுக்கு கொண்டு செல்லவும் பரிந்துரைகளை முன்வைக்க ஹைதராபாத் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை எப்படிச் செயல்படுத்துவது என்பதற்கும் ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டது.
  • உள்ளாட்சிகள் சுயமாக நிதி பெருக்குவதற்கு, தேசிய ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் மூன்று வழிகளை கடைப்பிடிக்க ஆலோசித்து வருகின்றது.
  • ஒன்று, உள்ளாட்சி தன்னை அரசாக நிலைநிறுத்திக்கொள்ள சொந்த நிதியினை உருவாக்கும் ஒரு செயல் திட்டத்தை வரைவது. அடுத்து, அதை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி மக்கள் நிறுவனங்களைக் கட்டிக் காத்து பஞ்சாயத்தையும் கிராமத்தையும் சுயசாா்புடையதாக மாற்றுவது. மூன்றாவதாக, உள்ளாட்சித் தலைவா்களுக்கு ஒருமுறையான பயிற்சித் திட்டத்தை வடிவமைத்து, நிபுணா்களை வைத்து நிபுணத்துவப் பயிற்சியைக் கொடுத்து, நிதி உருவாக்கம் என்பதும் ஒரு கட்டாயக் கடமை என்ற உணா்வை ஏற்படுத்துவது.
  • இந்தச் செயல் திட்டத்தை முன்னெடுக்க முயன்று வருகிறது மத்திய அரசு. இதற்கு நற்பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி: தினமணி (14 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்