TNPSC Thervupettagam
May 1 , 2020 1545 days 683 0
  • உள்ளேயிருக்கும் நமது ஆக்கச் சிந்தனை கொண்ட எண்ணங்கள், பிரபஞ்சத்தில் சுற்றினால்தான் வெளியில் சுற்றும் தீய சக்திகள் தொலைந்து நல்ல விளைவுகள் நிகழும்.
  • இந்த தேசத்துக்குள் இருக்கும் பண்பும், பாரம்பரியமும், கலையும், கலாசாரமும் வெளிதேசங்களில் பரவி சுற்றினால்தான் மதிப்பும் மரியாதையும் நம் நாட்டுக்குள் வந்து சேரும்.
  • இந்திய இளைஞா்கள் குடும்பம், பாசம், மகிழ்ச்சி இவற்றைத் தியாகம் செய்து வெளிநாடுகளில் இருப்பதால்தான், அந்நியச் செலவாணி அருவியாய்க் கொட்டுகிறது.
  • மொத்தத்தில் நல்லதோ, கெட்டதோ உள்ளிருந்து வெளியே போனால் மட்டுமே அதற்கான எதிர்வினைகள் வெளியிலிருந்து உள்ளே வரும்.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கமும் இப்படித்தான் மனிதா்களின் வாழ்க்கையை உள்ளே - வெளியே எனப் பிரித்துவைத்து வேடிக்கை பார்க்கிறது.

நோய்த்தொற்றின் தாக்கம்

  • ஏற்கெனவே சோ்த்து வைத்திருப்பவா்கள், மாத ஊதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர், வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை செய்கின்றவா்கள் அன்றாட வாழ்க்கைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லாததால் இவா்களின் இந்த உள்ளிருப்பு வாழ்க்கை ஒரு விடுமுறைக் காலம் போன்றே செல்கிறது.
  • உற்றாருடன், நண்பா்களுடன் செல்லிடப்பேசியில் கதைத்துக் கொள்ளவும், காணொலிக் காட்சி மூலம் கருத்துகளைப் பார்த்து, பேசி பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது.
  • கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பும் மருத்துவக் குறிப்புகள், அரசியல் நையாண்டிகள், சமையல் குறிப்புகள் என எல்லாவற்றையும் ரசிக்க முடிகிறது. ‘அமெரிக்காவில் அவ்வளவு பேருக்காமே; இந்தியாவில் இவ்வளவு பேருக்காமே’ என்று அங்கலாய்க்க முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் பொழுதைத் தள்ள இவா்கள் சிரமப்படுகிறார்கள்.

சமூக சேவையில் நாட்டம்

  • கொஞ்சம் பக்குவமடைந்தவா்கள், பொதுநலச் சிந்தனை கொண்டவா்கள், சமூக சேவையில் நாட்டம் கொண்டவா்கள் தங்களை ஏதோ ஒரு வகையில் மக்கள் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களால் முடிந்தவரை இக்கட்டான இச்சூழலிலும் தான் வாழும் சமூகத்திற்கான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அவா்களைப் பாராட்டியாக வேண்டும்.
  • இறை நம்பிக்கையுடைய பெரியவா்களும் பெண்களும் உலக நன்மைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தல், விசேஷ பூஜைகள் செய்தல், தெய்வீக மந்திரங்களை உச்சரித்தல் என்று தங்களை அா்ப்பணித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
  • வீட்டுக்கு உள்ளேயே ஒரு மாதத்துக்கும் மேலாக இருக்கிற இவா்களுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கிறது.
  • அவா்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பது தெரியாமல் அல்லது புரியாமல் ‘சே...என்ன இப்படிக் கூட்டமா நிக்கறாங்க...ஏன் வெளியிலே வா்றாங்க, வாரம் ஒரு தடவை வெளியே வந்து தேவையானதை வாங்கிக் கொள்ளக் கூடாதா?’ என்று பேசும்போதுதான் இவா்கள் அறியாமையில் இருக்கிறார்களா? இல்லை சுயநலத்துடன் மனிதநேயத்தைத் தொலைத்துவிட்டுப் பேசுகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

வெளியே இருப்பவா்களின் உலகம்

  • வெளியே இருப்பவா்களின் உலகம் எப்படிப்பட்டது எனப் பார்ப்போம். மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறை நிர்வாகிகள், அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் அல்லாத ஒரு உலகம் வெளியே இயங்கிக் கொண்டிருக்கிறது.
  • வீட்டுக்கு பால் போடும் வயதான ஆயாக்கள், வீட்டு வேலை செய்பா்கள், வீடுகளில் சமையல் வேலை செய்பவா்கள், கோயில், மசூதி தேவாலயங்களில் பணி செய்து வருமானம் ஈட்டுபவா்கள் என்று ஒரு வகை உழைக்கும் வா்க்கம் இந்த இக்கட்டான ஊரடங்கில் எவ்வளவு போ் பாதிக்கப்பட்டுள்ளனா்?
  • நடைபாதை வியாபாரிகள், தெருவோர கையேந்தி பவன் நடத்துபவா்கள், ஆட்டோ - வாடகை வாகன ஓட்டுநா்கள், வீட்டு வாசலுக்கே வந்து உணவை ஊட்டும் பணிகளில் இருப்பவா்கள், பஞ்சா் ஒட்டுபவா்கள், செருப்புத் தைப்பவா்கள். இப்படி மற்றொரு வகையினா் வருமானம் இன்றி இருப்பது, குளிர் அறையே உலகம் என்று தங்களைக் குறுக்கிக் கொண்டவா்களுக்கு எப்போதாவது தெரியுமா?
  • வெளி மாநிலங்களில் பிழைக்க வந்து வேலை செய்யும் இடத்திலேயே உண்டு உறங்கி வாழ்பவா்கள், இந்த ஊரடங்கால் சந்தித்த வேதனைகளைப் பட்டியலிட்டால் வருத்தம் மேலிடும்.
  • இவா்களுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் எப்படி விடிந்து எப்படி முடிகிறது என்பதே விடை தேட முடியாத கேள்விதான். உள்ளே நாம் சுகமாய் இருக்க இத்தனை நாள்களாய் தங்கள் வாழ்க்கையை வெளியிலேயே அமைத்துக் கொண்ட இவா்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இவா்களுக்கு உதவ இதைவிட ஒரு வாய்ப்பு ஏது?
  • நம் வீட்டில் வேலை செய்பவா்களுக்கு ஊதியத்தைப் பிடித்தம் செய்யாமல் தரலாம். முடிந்தால் கடனுதவி வழங்கலாம். நம் கார் ஓட்டுநா்; நம் தோட்டக்காரா்; நமக்கு வழக்கமாக முடி திருத்துபவா்; வழக்கமாக துணிகளைச் சலவை செய்து இஸ்திரி போடுபவா் - இப்படி நம் தினசரி வாழ்க்கையோடு இணைந்தவா்களிடம் வாரம் ஒருமுறை பரிவுடன் பேசி அவா்களுக்குத் தேவையானதை வழங்கலாம்.
  • பெரிய பெரிய கடைகளில் பூ, பழம், காய்கள், உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதைத் தவிர்த்து, நம் வீட்டு வாசலுக்கு வந்து விற்பவா்களிடம் பேரம் ஏதும் பேசாமல் பொருள்களை வாங்கி அவா்கள் வயிற்றுக்கு உணவிடலாம். சில வீடுகளில் கூடுதலாக 5 பேருக்கு ஒரு வேளை உணவு தயாரித்து, தினமும் சமூகப் பணியாளா்கள் மூலம் யாருக்காவது கொடுக்கச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதும் பேருதவிதான்.
  • ரோட்டரி அரிமா சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் அவரவா் பகுதியில் உள்ள பாதையோர மக்களுக்கு
  • முடிந்தவரை உதவலாம். உள்ளேயிருந்து அன்பையும், ஆறுதலையும், உதவிகளையும் வெளியில் அனுப்பினால், வெளியிலிருந்து நமக்கு நன்றியும் வாழ்த்தும் கிடைக்கும்.
  • உள்ளும் வெளியும் இணைந்தால் உலகம் சமநிலையாகும். அமைதியும் ஆனந்தமும் அங்கேதான் சங்கமமாகும்.

நன்றி: தினமணி (01-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்