உழவு முதல் உணவாக்குதல் வரை: இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் சி.ஐ.கே.எஸ்.
- கடலலைகளின் அசைவோடு காலை நேரக் காற்றில் நெற்கதிர்கள் தாழ்ந்து நிமிர்கின்றன. ஓர் ஆசிரமத்தின் அமைதியோடு அந்தப் பண்ணை நம்மை வரவேற்கிறது. இடம் செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள சுக்கன்கொல்லை. இங்கு 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் ‘இந்தியப் பாரம்பரிய அறிவியல் மைய’த்தின் (CIKS - Centre for Indian Knowledge Systems) ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
- இயற்கைவழி வேளாண்மையில் கால் பதிக்கும் ஒருவர், கற்பதற்கும் விளை பொருள்களை விற்பதற்கும் நிறுவனம் சார்ந்த வழிகாட்டுதல் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. இந்த அடிப்படையான சிக்கல்களைக் கருத்தில்கொண்டு 1995லிருந்து இம்மையம் செயல்பட்டுவருகிறது.
- மண்ணைத் தேர்வு செய்வதிலிருந்து விளைபொருளை உணவாக்குவது வரைக்கும் அனைத்துக் கட்ட வேலைகளிலும் விவசாயிகளுக்குத் துணையாக இந்த நிறுவனம் இருப்பது இதன் சிறப்பு. இம்மையம் பயிரிட்டு ஆவணப்படுத்தியுள்ள மரபு நெல் வகைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 170ஐத் தொட்டுள்ளது தனிச்சிறப்பு.
அடிப்படைப் பணிகள்:
- பத்திரிகையாளரான ஆ.வே. பாலசுப்பிர மணியன், சிலந்தி குறித்த ஆய்வாளரான கே. விஜயலட்சுமி ஆகியோர் இம்மையத்தை நிறுவியவர்கள். தொடக்கத்தில் மரபு நெல் வகைகளைக் கண்டறிவது, விதைகளைச் சேகரிப்பது, ஆராய்ச்சி, பயிரிடுவது, சாகுபடித் தொழில்நுட்பங்களை ஆவணப்படுத்துவது போன்றவை மட்டுமே இவர்களின் பணிகளாக இருந்தன. விவசாயிகளின் விளைபொருள் களைச் சந்தைப்படுத்த உதவுவது, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உருவாக்குவது, வேளாண் பயிற்சி அளிப்பது எனக் காலப்போக்கில் செயல்பாடுகள் அதிகரித்தன.
விவசாயிகள் உடனான ஒருங்கிணைப்பு:
- சுக்கன்கொல்லையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூலமாகவும் 170 நெல்வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன. வேளாண்மை அறிவியல் பட்டதாரிகளிலிருந்து பாமரர்கள் வரைக்கும் இங்கு பணிபுரிகின்றனர். அந்தந்த வட்டாரம் சார்ந்து தனித்தனிக் குழுக்களாக ஒன்றிணைந்து செயல்படும் விவசாயிகளும், இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்துடன் கைகோத்துச் செயல்படுகின்றனர்.
- தமிழகம் முழுவதும் 23 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுடன் இம்மையம் ஒருங்கிணைப்பில் உள்ளது. அவற்றில் திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு செயல்படும் மருதம் நீடித்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் வளநாடு நிறுவனம் போன்றவை இம்மையத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்போடு உருவானவை. பல விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களின் விளைபொருள்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் இந்நிறுவனங்கள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன.
வியக்க வைக்கும் மரபுநெல் வகைகள்:
- சுக்கன்கொல்லைப் பண்ணையில் பெயர்ப் பலகை சகிதம் பல வகை நெற்பயிர்கள் தலையாட்டுகின்றன. பிசினி, சீங்கினி, வல்லரக்கன், வசரமுண்டான், வீதி வடங்கன் போன்ற பெயர்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. ‘ஒருவர் ஆயுள் முழுவதும் தினமும் ஒரு வகை என உண்ணும் அளவுக்கு நம் நாட்டில் நெல் வகைகள் இருந்திருக்கின்றன. மரபு நெல் வகைகளைக் கண்டறிவது பொறுமையும் அக்கறையும் தேவைப்படுகிற செயல்.
- திருக்கழுக்குன்றம் ஊராட்சியில் உள்ள திருவானைக்கோயிலில் 30 விவசாயிகள் மூன்று தலைமுறைகளாகக் கப்பக்கார் என்கிற சம்பா வகையைப் பயிரிட்டுவந்தனர். இது புழுதி விதைப்பாகக் களிமண் நிலத்தில் பயிரிடப்படுவது.
- 2002இல் அந்த வட்டாரத்தில் இரண்டு மாதங்களுக்கு மழை பொய்த்தபோது வழக்கமான வெள்ளைப் பொன்னி வகை வாடிவிட்டது. கப்பக்கார் சாய்ந்துவிட்டாலும், ஆனால் மீண்டும் மழை வந்தபோது துளிர்த்து வளர்ந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன், எங்களுக்கு விதை அளித்து உதவியவர்களுக்குக்கூட நாங்கள் விதை அளித்து இப்போது உதவ முடிவது மனநிறைவைத் தருகிறது’ என்கிறார் பால சுப்பிரமணியன்.
நெல் கலைக்களஞ்சியம்:
- இம்மையம் உருவாக்கிய ‘தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் - ஒரு தகவல் களஞ்சியம்’ என்னும் நூல், 2024இல் கூடுதல் தகவல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. நெல்லின் பெயர்க் காரணம், சாகுபடிக்கேற்ற பட்டம், பயிரின் வயது, அரிசியின் பண்புகள், அதில் செய்யத்தகுந்த உணவு வகைகள், ஊட்டச்சத்துகள், மருத்துவப்பண்புகள் ஆகிய விவரங்கள் நெற்கதிரின் ஒளிப்படத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஓர் ஏக்கருக்கான மகசூல், வைக்கோல் அளவு, ஒரு கதிரில் உள்ள நெல்மணிகளின் சராசரி எண்ணிக்கை ஆகிய தகவல்களும் இதில் தரப்பட்டிருப்பது இம்மையத்தின் நெடுங்கால உழைப்புக்குச் சான்று.
பிரத்யேக அரவை ஆலை:
- வழக்கமான நெல் வகைகளையே அரைத்துப் பழக்கப்பட்ட ஆலைகளில், பிரத்யேகமான தேவைகளுடன் கூடிய மரபு நெல்லை அரைத்து வாங்குவது மிகவும் கடினம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் முயல்கிறது. மரபு நெல்லை அரைப்பதற்கு எனத் தனி ஆலை பண்ணையில் உள்ளது.
- நெல்லோடு கலந்த பெரிய கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் அகற்றுதல், 80 சதவீத அரிசியைப் பிரித்தல், மீதமுள்ள 20 சதவீத நெல்லையும் அரைத்து அரிசி ஆக்குதல், சிறு கற்களை அகற்றுதல், அரிசியை உடைத்தல் என்கிற வரிசையில் நான்கு எந்திரங்கள் அரைவையில் ஈடுபடுகின்றன.
- இதன் மூலம் மரபு அரிசிக்கே உரிய இயல்புகள் தக்கவைக்கப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பரவலாக்குவதில் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் ஈடுபட்டுவருகிறது. இந்தியப் பாரம்பரிய முறையான விருட்ச ஆயுர்வேத வழிமுறைகளைத் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இம்மையம் நடைமுறைப்படுத்துகிறது. மண்புழுக்களின் செயல்பாட்டை ஆதாரமாகக் கொண்ட கரிம உரம் தயாரித்தல், அமிர்தக் கரைசல் தயாரித்தல் போன்றவை அன்றாடம் நடைபெறுகின்றன.
- மரக்கட்டையைக் கரியாக்கித் (biochar) தருகிற இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. எளிய வடிவமைப்புடன் உள்ள இந்த இயந்திரத்தை வைக்கத் திறந்தவெளியில் சிறிய இடமே போதுமானது. பயிரை உண்ணும் பூச்சி புழுக்களை இயற்கையான முறையில் தடுக்கும் எளிய உத்திகளைப் பண்ணையில் காண முடிகிறது.
- இயற்கைவழி விளைபொருளை விற்க வாய்ப்பற்ற விவசாயிகள்தான் நம்மூரில் அதிகம். அவர்களிடமிருந்து உரிய விலையில் விளைச் சலைக் கொள்முதல் செய்வதை ‘செம்புலம்’ என்னும் இதன் துணை அமைப்பு மேற்கொள்கிறது. அரிசியிலிருந்து பலகாரங்கள், குக்கீஸ் வரைக்கும் வெற்றிடத்துக்கு வழியில்லாத வகையிலான நவீனத் தொழில் நுட்ப பேக்கிங்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
- லாப நோக்கமற்ற அமைப்பான இம்மையத்துக்கு இத்தகைய வணிகச் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாயும் நன்கொடைகளுமே ஆதாரமாக உள்ளன. இயற்கை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்க இத்தகைய பல அமைப்புகள் அவசியம்தான்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 12 – 2024)