- வேளாண்மையை மையமாகக் கொண்ட நம் நாட்டின் வேளாண் துறையை நவீன அறிவியல் முறை சார்ந்த வழிமுறைகளுக்கு இட்டுச் சென்றதற்காக அறியப்படுபவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அறியப்படும் அவருடைய நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.
- பாரம்பரியமாக வேளாண்மையை நிர்வகித்துவந்த ஒரு குடும்பத்தில் சுவாமிநாதன் பிறந்திருந்தாலும், அவருடைய தந்தை கும்பகோணத்தில் ஓர் அறுவைசிகிச்சை நிபுணராகச் செயல்பட்டுவந்தார். கல்லூரியில் படித்த காலத்தில் வேளாண்மை உள்பட இரண்டு பட்டங்களை சுவாமிநாதன் பெற்றிருந்தார்.
- நாடு விடுதலை பெறுவதற்கு முந்தைய காலத்தில் காவல் துறையில் சேரவே அவர் விரும்பினார். விடுதலைப் போராட்டமும் காந்தியத்தின் செல்வாக்கும் வேளாண் துறையை நோக்கி அவரை நகர்த்தின. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) இயக்குநராக அவர் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவால் அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களில் அதிக மகசூல் தரும் விதைகள் உருவாக்கப்பட்டன.
- வேளாண் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாகுடன் இணைந்தும் சுவாமிநாதன் செயல்பட்டார். இந்தியாவைப் போன்ற ஒரு வளரும் நாடு 1960களில் பஞ்சம், பட்டினி போன்ற நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டபோது, அதற்குத் தீர்வுகாண வேண்டிய தேவை அரசுக்குத் தீவிரமாக எழுந்தது.
- இந்தப் பின்னணியில், அன்றைய வேளாண் அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், ஜகஜீவன் ராம் ஆகியோரின் கீழ் செயல்பட்ட நெல் ஆராய்ச்சி நிறுவனமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றமும் (ICAR) புதிய விதை வகைகளை உருவாக்கின.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநராக 1972இல் பொறுப்பேற்ற சுவாமிநாதன், அதே ஆண்டில் ராமன் மகசேசே விருதையும் பெற்றார். பிறகு, பிலிப்பைன்ஸில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அந்தப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தமிழ்நாடு திரும்பினார்.
- உலக உணவுப் பரிசை (1987) முதன்முதலாகப் பெற்றபோது கிடைத்த பரிசுப் பணத்தை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அர்ப்பணித்தார். ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை’ என்கிற பெயரில் சென்னை தரமணியில் இயங்கிவரும் அந்த நிறுவனம் உழவர்கள், கிராம மேம்பாடு குறித்த ஆராய்ச்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.
- விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்பது விளைச்சலுக்கு உழவர்கள் செய்த செலவைவிட 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என அவர் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரை விவசாயிகளால் இப்போதும் வலியுறுத்தப்பட்டுவருகிறது. நாட்டின் உயரிய அரசு விருதுகள் அனைத்தாலும் பெருமைப்படுத்தப்பட்ட அவர், பாரத ரத்னா என்கிற உச்ச விருதாலும் அலங்கரிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
- பசுமைப் புரட்சியின் காரணமாக இன்றைய வேளாண்மை அளவுக்கு அதிகமான தண்ணீர், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருப்பது இன்றைக்கு விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. அன்றைக்குப் பஞ்சமும் பட்டினியும் வாட்டி வதைத்ததற்குத் தீர்வுகண்டதைப் போல, இதற்கும் தீர்வுகாண வேண்டிய அவசியத்தில் இப்போது இருக்கிறோம்.
- அதேநேரம், பசுமைப் புரட்சி என்பது ஏதோ திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கேடு என்கிற கருதுகோளுடன் அணுகக் கூடாது. அன்றைய உலகப் போக்கில் அது தேவையாக இருந்தது. அதன் காரணமாகவே உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அந்நிய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாமல் போனது என்பதை உணர வேண்டும். சுவாமிநாதனே பிற்காலத்தில் குறிப்பிட்டதுபோல் ‘பசுமைமாறா புரட்சி’யை நோக்கி நகர்வதே தற்போதைய தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 08 – 2024)