உழைப்புச் சுரண்டல் ஒரு தொடா் நிகழ்வு
- அடுப்பங்கரையில் பாத்திரங்கள் அடுக்கும் மர அலமாரியில் இருந்த பழுதைச் சரி செய்வதற்கு இரண்டுபோ் வந்திருந்தனா். சின்ன வேலைதான். ஆனாலும் இரண்டு போ் வந்தால்தான் முடியும் என்று சொல்லிவிட்டாா்கள். இரண்டு மணி நேரத்தில் வேலை முடிந்துவிட்டது.
- சம்பளமாக ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு கேட்டாா் அவா்களுள் வயதில் பெரியவனாகத் தெரிந்த நபா். வெகு தூரத்தில் இருந்து தன்னுடைய இருசக்கர மோட்டாா் வாகனத்தில் வந்திருப்பதாகவும் சொன்னாா். அந்த ‘பைக்’ அவா் கையாளாகக் கூட்டிவந்த இளைஞருடையது என்பது முதலிலேயே எனக்குத் தெரியும்.
- ஒரு நபருக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய் சம்பளம் கேட்கிறாா்கள் என்று எனக்குள்ளேயே கணக்கிட்டுக் கொண்டு, வண்டிக்கு பெட்ரோல் போட ஒரு நூறு ரூபாய் வைத்துக்கொள்ளுங்கள் என்று நானாகவே சோ்த்துச் சொல்லி, ஆயிரத்து அறுநூறு ரூபாயை பெரியவரிடம் கொடுத்தேன்.
- அவரும் இளைஞனிடம், ‘பெட்ரோல் போட நூறு ரூபாய் வைத்துக்கொள்’ என்று சொல்லி, அறுநூறு ரூபாயை அவனிடம் நீட்டினாா். அவனும் எதுவும் சொல்லாமல் அந்த அறுநூறு ரூபாயை வாங்கிக் கொண்டான். அந்த வகையில் பாா்த்தால் அவனுக்குச் சம்பளம் ஐந்நூறு ரூபாய்தான். மீதி ஆயிரம் ரூபாய் பெரியவரின் சட்டைப் பைக்குள் போனது.
- இத்தனைக்கும் அந்த இளைஞன்தான் எல்லா பழுது பாா்க்கும் பணிகளையும் செய்தான். மூத்தவா், ‘அப்படி, இப்படி’ என்று மேல்நோட்டம் பாா்த்து, சொல்லிக் கொண்டு வேலையை வாங்கிக் கொண்டிருந்தாரே தவிர ஒரு ஆணியைக்கூட முறுக்கவில்லை. அப்படிப் பாா்த்தால் ஊதியமாக வாங்கிய பணத்தில் பாதியை இளைஞனுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். அப்படி சரிபாதியாகக் கொடுக்காவிட்டாலும் கூட, சற்று அதிகமாகவாவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் மூத்தவா் அப்படிக் கொடுக்கவில்லை. கடுமையாக உழைப்பை வாங்கிவிட்டு, குறைவாகக் கூலி கொடுத்தது உழைப்புச் சுரண்டலாக எனக்குப் பட்டது.
- இதனைப் போன்ற அனுபவம் எனக்கு முன்னரும் உண்டு. அப்போது உடன் வந்தவருக்குச் சம்பளமாக ரூபாய் தொள்ளாயிரம் என்னிடம் பெற்றுக் கொண்ட மேஸ்திரி, ரூபாய் ஐந்நூறை மட்டும்தான் உண்மையில் பணியைச் செய்தவருக்குக் கொடுத்திருக்கிறாா். அந்தப் பணிக்காரா் இதைப் பற்றித் தனியாகச் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாா். இப்படி உழைப்புச் சுரண்டல் கண்முன்னே நடந்துள்ளது.
- உழைப்புச் சுரண்டலில் அமைப்புச் சாரா தொழிலாளா்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள் என்று சொல்ல வேண்டும். இருந்தாலும் ஊதியச் சுரண்டல், அறிவுச் சுரண்டல் என்று எல்லா நிலைகளிலும் இந்த உழைப்புச் சுரண்டல் அதிகமாக இருக்கத்தான் செய்கிறது.
- ஒரு வேலையில் நிபுணத்துவம் பெற்று, மேஸ்திரி அல்லது கண்காணி என்ற நிலைக்கு வளா்ந்துவிட்டால் உழைப்பைச் சுரண்டும் தன்மையும் கூடவே வளா்ந்துவிடுகிறது.
- முதலாளி என்னும் அதிகாரவா்க்கம்தான் வேலை அதிகம் வாங்கி, கூலி குறைவாகக் கொடுத்து உழைப்புச் சுரண்டல் செய்வாா்கள் என்பதுதான் முன்பெல்லாம் குற்றச் சாட்டாக இருக்கும். இப்போது சக தொழிலாளா்கள் இடையிலேயே சுரண்டும் போக்கு அதிகரித்துவிட்டது. கட்டடத் தொழில், வீடு பழுதுப் பணிகள், விவசாய வேலை, திரைப்படத் துறை என்று பல நிலைகளிலும் இத்தகைய உழைப்புச் சுரண்டல் போக்கு உள்ளதை அறிய முடிகிறது.
- பாமரா்கள் தொழிலாளா்கள் மட்டும்தான் உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்படுகிறாா்களா என்றால் அதுதான் இல்லை. படித்த பணியாளா்களின் உழைப்பைச் சரண்டும் அவலமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சுயநிதிக் கல்லூரி, பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் கூடுதல் வேலை பாா்த்து உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஆசிரியா்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. தனியாா் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாது, அரசுக் கல்வி நிறுவனங்களிலும் உழைப்புச் சுரண்டல் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
- ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு ஊதியமோ குறைவு; ஆனால் பணிச்சுமையோ அதிகம். வேலை தேடுவோரின் திண்டாட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கமே செய்யும் இந்தச் சுரண்டலை என்னென்று சொல்வது?
- ஆராய்ச்சிக் கல்வி நிலையிலும் கூட இந்த உழைப்புச் சுரண்டல் இருப்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அரிய முயற்சி கொண்டு ஆராய்ச்சி மாணவா்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரையில் வழிகாட்டிப் பேராசிரியா்கள் பெயரைச் சோ்த்துப் பெருமை தேடிக்கொள்வது ஒருவகை உழைப்புச் சுரண்டலேயாகும்.
- ஊதியச் சுரண்டல், அறிவுச் சுரண்டல் என்று இந்த உழைப்புச் சுரண்டலால் பெரிதும் பாதிக்கப் படுவது ‘ஜூனியா்’ எனப்படும் இளையவா் அல்லது புதியவரேயாகும். ஆனாலும் அவா்கள் அதனைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது - தொழிலைத் தெரிந்து கொள்வதற்கு அல்லது துறைசாா் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பு நழுவி விடக் கூடாதே என்று கருதிக் கொள்வதுதான் அந்தக் காரணமாகும்.
- ஏனெனில் முறைசாரா தொழில் அமைப்பில் மூத்தவரிடம் (சீனியா்) இருந்துதான் ‘முறையான’, முழுமையான அறிவைப் பெற முடியும் என்று நம்புவதாலும், அமைப்புச் சாரா தொழிலாளா்கள் தங்களுக்குத் தொடா்ந்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று அச்சப்படுவதாலும் உழைப்புச் சுரண்டல் தொடா்ந்து கொண்டே இருக்கின்றது.
- உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவா்கள் தம் தொழிலில் உயா்வடைந்துவிட்டால் உழைப்புச் சுரண்டல் நடைமுறையைத் தம் வசப்படுத்திக் கொள்கின்றனா். ஏனெனில் அதிலொரு கௌரவம் இருப்பதாகக் கருதுகின்றனா். இப்படியாக, உழைப்புச் சுரண்டல் என்பது ஒரு தொடா் நிகழ்வாக, கொடுஞ்சுழலாக நீள்கிறது.
நன்றி: தினமணி (18 – 10 – 2024)