- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று தோன்ற வில்லை.
- நாளும் பொழுதும் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருக்கும் அந்தத் தீநுண்மி, "ஒமைக்ரான்' என்கிற பெயரில் புதிய அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
- மீண்டும் பொதுமுடக்கம், புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு என்றெல்லாம் தேவைப்பட்டால் அவற்றைத் தாங்கும் சக்தி உலகுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
- நவம்பர் மாதம் முடிவடைய இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு நவம்பர் மாதத்தில்தான் சீனாவின் ஹ்யுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகர பரிசோதனைச் சாலையில் பணிபுரியும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் தங்களை பாதித்த நோய்த் தொற்றுக்கு சிறப்பு மருத்துவம் கோரினார்கள். அப்போதுதான் புதியதொரு தீநுண்மி உருவெடுத்திருப்பது தெரிந்தது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவைட் 19 என்று பெயர் சூட்டப்பட்ட அந்தத் தீநுண்மி, கோடிக்கணக்கான மனிதர்களையும் அவர்தம் வாழ்வாதாரங்களையும் நிலை தடுமாற வைத்து இன்னும் கூட தனது கோரதாண்டவத்தை நிறுத்தாமல் தொடர்கிறது.
கரோனா தீநுண்மி
- கடந்த இரண்டு ஆண்டுகளில் 24.5 கோடி பேர் கொவைட் 19 தீநுண்மியால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறியிருக்கிறார்கள். ஐம்பது லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
- கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். உலக வங்கியின் கணக்குப்படி, ஏறத்தாழ 12 முதல் 13 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
- லட்சக்கணக்கானோர் தங்கள் வருங்காலம் குறித்து தெரியாத நிலையில் தொடர்கிறார்கள்.
- தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பணக்கார நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு முதல் தவணையும் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த எல்லா நாடுகளிலும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
- 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்திருக்கிறது என்று பெருமிதப்படுகிறோம். ஆனால், உலகில் பெரும்பாலான நாடுகளில் முன்களப் பணியாளர்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படாத நிலைதான் காணப்படுகிறது.
- உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கைகளையும், ஐ.நா. பொதுச்செயலாளரின் அறை கூவலையும் வல்லரசு நாடுகள் இப்போதும்கூட சட்டை செய்யவில்லை.
- வளர்ச்சியடையும் சின்னஞ்சிறு நாடுகள் குறித்தும், அங்கெல்லாம் ஏழ்மையில் வாடும் மக்களின் பாதுகாப்பு குறித்தும் வல்லரசு நாடுகள் கவலைப்படவில்லை என்கிற அவலம், மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய கறையாகத் தொடரப்போகிறது.
- இத்தனை நடந்தும்கூட, தீநுண்மித் தொற்றுக்குக் காரணமான சீனா, வெளிப்படையாக எந்த உண்மையையும் தெரிவிக்கத் தயாராக இல்லை. சீனாவின் இப்போதைய நிலை என்ன என்பதுகூடப் புதிராக இருக்கிறது.
- அங்கே மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் நோய்த்தொற்றால் பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் ஹ்யுபெய்யிலும் பெய்ஜிங்கிலும் நடக்க இருந்த மாரத்தான் ஓட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
- பதினொரு மாகாணங்களில் டெல்டா உருமாற்ற தீநுண்மி பரவியிருப்பதுதான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
- இவையெல்லாம் மூடி மறைக்கப்படுகின்றனவே தவிர வெளியுலகுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.
- அதனால் எந்த அளவுக்கு உலக வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் சீனாவின் இப்போதைய கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் பாதிக்கும் என்று கணிக்க முடியவில்லை.
- கடந்த மாதம் இத்தாலியின் ரோம் நகரத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூடிப் பேசினார்கள்.
- கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கொள்ளை நோய்த்தொற்று உலகை பாதித்திருக்கும் நிலையில், அதுகுறித்த கவனம் காணப்படவில்லை.
- ஜி20 என்பது சாதாரணமான அமைப்பு அல்ல. உலக ஜிடிபியில் 80% ஐ உள்ளடக்கியது. 60% மக்கள் தொகையை பிரதிபலிப்பது. உலக வர்த்தகத்தில் 75% க்கு காரணமானது.
- சமீபத்திய ஜி20 உச்சி மாநாடு கூடிய நாடான இத்தாலி கொள்ளை நோய்த்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.
- அப்படியிருந்தும்கூட, கொவைட் 19 குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும், அது உருவானதன் காரணம் குறித்தும் அந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படாதது விசித்திரமாக இருக்கிறது.
- இத்தாலி மட்டுமல்ல, சீனாவைத் தவிர ஜி20 அணியிலிருக்கும் ஒவ்வொரு நாடும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்கிறது என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- அமெரிக்கா உள்பட, சீனாவை தவிர்த்து ஏனைய 19 நாடுகளும் கடந்த ஓராண்டில் 2.5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.188 லட்சம் கோடி) அளவிலான பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டிருக்கின்றன.
- 2020 இல் சீனாவின் ஜிடிபி 400 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அதிகரித்து ஏறுமுகமாகக் காணப்படுகிறது. இது குறித்தும் அவர்கள் பெரிதாக விவாதிக்கவில்லை.
- கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் தொடக்கம் குறித்தும், பரவல் குறித்தும் இரண்டு ஆண்டுகள் கடந்தும்கூட எந்தவித ஆக்கபூர்வமான விசாரணையோ, ஆய்வோ நடத்தப்படாமல் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.
- அது குறித்து வெளியான 300 பக்க அறிக்கையில், பரிசோதனைச்சாலை விபத்தாக இருக்கலாம் என்று நான்கு பக்கங்களில் காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு தகவல்கள் இல்லை.
- எங்கிருந்து, எப்படி உருவாகி, எப்படிப் பரவியது என்பதைக் கண்டுபிடிக்காமல் நாளும் பொழுதும் உருமாறி புதுப்புது வடிவமும், அதிகரித்த வீரியமும் பெறும் தீநுண்மியைத் துரத்திக் கொண்டிருப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? ஒமைக்ரானுக்கு அடுத்த உருமாற்றத்துக்கும் இப்போதே பெயர் கண்டுபிடிப்பது நல்லது!
நன்றி: தினமணி (29 - 11 - 2021)