TNPSC Thervupettagam

ஊசலாடும் எட்டு உயிர்கள்

November 1 , 2023 423 days 266 0
  • இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேர், கத்தார் நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். உளவுக் குற்றச்சாட்டு என்பதால் அதன் விவரங்கள் எதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை. கசிந்திருக்கும் தகவலின்படி, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
  • தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எட்டு முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரிகளும், பணி ஓய்வுக்குப் பிறகு அல் தாரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்கிற பாதுகாப்புத் தொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். ராயல் ஓமன் விமானப் படையில் ஸ்குவாட்ரன்ஸ் லீடராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த கமிஸ் அல் - அஜ்மி என்பவரால் நடத்தப்பட்ட அந்த நிறுவனம், கத்தார் நாட்டுக் கடற்படைக்கு பயிற்சி, பராமரிப்பு சேவைகளை வழங்கி வந்தது.
  • மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திரகுமார் வர்மா, கேப்டன் செüரவ் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுநாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் கோபகுமார் ஆகிய எட்டு பேரும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாரா குளோபல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள். கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களுடன், அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கமிஸ் அல் - அஜ்மியும் கைது செய்யப்பட்டார் என்றாலும், கடந்த நவம்பர் மாதம் அவர் எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
  • இந்த வழக்கின் பின்னணி குறித்து விவாதிக்கப்படுவது அந்த எட்டு பேரின் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை உணர்ந்து, உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும் என்கிற இந்திய வெளியுறவு அலுவலகத்தின் வேண்டுகோள் நியாயமானது. இன்னொரு நாட்டின் நீதிபரிபாலன முறையில் நாம் நேரடியாகத் தலையிட முடியாது என்பதையும் கருத்தில் கொண்டுதான், இது குறித்து விவாதிக்க முடியும்.
  • கத்தார் கடற்படையில் இத்தாலிய நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்கும் ரகசியத் திட்டத்தை தாரா குளோபல் நிறுவனம் மேற்பார்வை செய்து வந்தது. அந்த அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள பிற நாடுகள் ஆர்வம் காட்டுவது இயல்பு என்பதால் விவரங்கள் அந்நிய நாட்டுக்குப் பகிரப்பட்டன என்பது குற்றச்சாட்டாக இருக்கக்கூடும்.
  • இதற்கு முன்னர் வெளிநாடுகளில் கொலை, கொள்ளை, போதை மருந்துக் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக இந்தியர்களுக்கு தண்டனைவழங்கப்பட்டிருந்தாலும், அரிதாகவே உளவு பார்ப்புக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சிறையில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு குல்பூஷன் யாதவ் என்பவர், தூக்குதண்டனைக்குக் காத்திருக்கிறார் என்றாலும், நட்பு நாடு ஒன்றில் எட்டு இந்தியர்கள் உளவு பார்த்த குற்றத்துக்காகத் தூக்குதண்டனை பெற்றிருப்பது இதுதான் முதல் தடவை.
  • கத்தார் நாட்டில் அந்த எட்டு பேரும் மேல்முறையீடு செய்வதற்கு இந்தியா உதவலாமே தவிர, சர்வதேச நீதிமன்றத்தில், குல்பூஷன் யாதவ் வழக்கைப்போல முறையிட முடியாது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அந்த அதிகாரிகளின் செயல்பாடுகள், ராஜாங்க ரீதியான முறைகேடு அல்ல. அவர்களது கைது, விசாரணை, சிறையடைப்பு உள்ளிட்டவை முறையாகவே நடந்திருக்கின்றன.
  • அவர்கள் மன்னிப்புக் கோர முடியாது. அவர்கள் மன்னிப்புக் கோரினால், அது குற்றத்தை ஏற்றுக் கொள்வதாகிவிடும். இந்தப் பிரச்னையில் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, ராஜாங்க ரீதியாகக் கத்தார் அரசை அணுகி, சுமுகமாகத் தீர்வு காண்பது மட்டுமாக இருக்கும்.
  • இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே மிகவும் நெருக்கமான ராஜாங்க உறவு நிலவுகிறது. 2008-இல் பிரதமர் மன்மோகன் சிங்கும், 2016-இல் பிரதமர் நரேந்திர மோடியும் கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர் என்றால், மார்ச் 2015-இல் கத்தாரின் அமீரான ஷேக் தமீம் பின் ஹமது அல் தானி இந்தியாவுக்கு விஜயம் செய்தார். கத்தார் நாட்டு ஆட்சிப்பணி அதிகாரிகள் இந்தியாவில்தான் பயிற்சி பெறுகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.
  • இருநாடுகளுக்கும் இடையேயான 15 பில்லியன் டாலர் வர்த்தகத்தில், இந்தியாவின் இறக்குமதி பங்கு 80%. நமது எரிவாயுத் தேவையில் 42% கத்தாரில் இருந்து பெறப்படுகிறது. அதேபோல கத்தாரின் இறக்குமதிகளிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 27 லட்சம் மக்கள்தொகையுள்ள கத்தாரில், எட்டு லட்சம் இந்திய மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். மக்கள்தொகையின் எண்ணிக்கையில் கால் பங்கு அளவில் இந்தியர்கள் அங்கே பணிபுரிகிறார்கள். வணிகர்களாகவும், வர்த்தக நிறுவனத் தலைவர்களாகவும் அந்த நாட்டு அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் பலர்.
  • தண்டனை வழங்கப்பட்டிருப்பவர்களின் மேல்முறையீட்டுக்கு வழிகோலுவதும், அது இயலாத நிலையில், கத்தார் அமீருடனான தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் கையில்தான் இருக்கிறது. அமீர் மனது வைத்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்கவும் முடியும்!

நன்றி: தினமணி (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்