TNPSC Thervupettagam

ஊடகங்களின் முன்னோடி!

February 13 , 2020 1797 days 826 0
  • வானொலி வரலாற்றின் முதல் பக்கத்தில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. ஏனெனில், பம்பாயில் 1921-ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் - தந்தி துறையுடன்  "டைம்ஸ் ஆப் இந்தியா' நிறுவனம் இணைந்து ஒலிபரப்பினை நிகழ்த்திக் காட்டியது. அன்றைய பம்பாய் மாகாண ஆளுநர் "சர்' ஜார்ஜ் லாயிடின் நேயர் விருப்பமாக சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாக, அருகில் உள்ள புணேவிலிருந்து ஜார்ஜ் லாயிடு நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்தாராம்.
  • கல்கத்தா நகரில் நவம்பர் 1923-இல் "வங்க வானொலி மன்றம்' என்ற அமைப்பு சிறிய மார்க்கோனி ஒலிபரப்பியுடன் வானொலி சேவையைத் தொடங்கியது. வானொலி வரைபடத்தில் சென்னைக்கு இடம் கிடைத்த நாள் 1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி.
  • இந்தப் பணியினை முனைப்புடன் மேற்கொண்டவர் சி.வி.கிருஷ்ணசாமி செட்டி என்னும் வானொலி ஆர்வலர். சென்னை மாகாண வானொலி மன்றம் அவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

நிதி நெருக்கடி

  • இந்த மன்றம் நிதி நெருக்கடியால் 1927-இல் செயலிழந்தது. அந்த அமைப்பிடமிருந்து ஒலிபரப்பு உரிமையைப் பெற்றுக் கொண்ட சென்னை மாநகராட்சி 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வானொலி சேவையை மீண்டும் தொடங்கியது. தினம் மாலையில் இரண்டு மணி நேரம் வானொலி நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டு மகிழ, மெரினா கடற்கரை உள்பட 6 இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டன.
  • பள்ளி நாள்களில் மாலை நான்கு மணிக்குக் கல்வி ஒலிபரப்பு உண்டு. சென்னை மாநகராட்சியின் இந்த சேவை 1938-ஆம் ஆண்டு வரை நீடித்தது. 
  • அதே ஆண்டு ஜூன் 16-ஆம் நாள்"ஆல் இண்டியா ரேடியோ' சென்னையில் காலூன்றியது. மத்திய அலை - சிற்றலை ஒலிபரப்புகள் அன்று தொடங்கப்பட்டன. 
  • 1936-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று தில்லி வானொலி நிலையம் தொடங்கியது. இந்தியா விடுதலை அடைந்தபோது தில்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை, திருச்சிராப்பள்ளி, லக்னௌ ஆகிய 6 இடங்களில் மட்டுமே வானொலி நிலையங்கள் இருந்தன. இந்திய நிலப்பரப்பில் 2.5 சதவீத பரப்பளவையும், மக்கள்தொகையில் 11 சதவீத அளவையும் மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்து கொண்டிருந்தது. விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட வேகமான வளர்ச்சியால் இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு வரை 231வானொலி நிலையங்கள் செயல்பட்டன. வானொலி ஒலிபரப்பு 91.79 சதவீத நிலப்பரப்பையும், 99.14 சதவீத மக்களையும் சென்றடைந்தது.
  • ஆனால், இந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் 220-க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட பண்பலைகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 11வானொலி நிலையங்களில் 11 பண்பலைகள் உள்ளன.
    தமிழகத்தில் விடுதலைக்குப் பின்னர் திருநெல்வேலி (1963), கோயம்புத்தூர் (1966), நாகர்கோவில் (1984), மதுரை (1987), ஊட்டி (1994), தூத்துக்குடி (1994) என மேலும் 6  வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டன. 

வானொலி – பத்திரிக்கை

  • வானொலி நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்காக 1938-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி "வானொலி' என்ற பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. ஆனால், அது பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. தில்லி வானொலி நிலையம் 1938, அக்டோபர் 16-ஆம் தேதி கிராம நிகழ்ச்சியினை ஒலிபரப்பவே, திருச்சி வானொலியிலும் விவசாய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. எனினும், 1959-ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் முறையான  வானொலி வேளாண்மை ஒலிபரப்பு திட்டமிட்ட வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற கருத்துக்கு ஏற்ப வானொலியில் தனியாக இளைஞர்கள் நிகழ்ச்சிக்கான அலைவரிசை 1969-ஆம் ஆண்டு தில்லியில் தொடங்கப்பட்டதை அடுத்து சென்னை வானொலியிலும் உடனே இளையபாரதம் என்ற ஒலிபரப்பைத் தொடங்கினர். இந்தியாவில் வானொலித் துறை 1990-களின் இறுதியில் தனியார்மயமாக்கப்பட்டது.

வளர்ச்சி

  • எனினும் இரண்டாம் கட்டமாக பண்பலை வானொலிகளைத் தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்ட பிறகுதான் இந்தத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டது.
  • தொடக்கத்தில் வானொலிகளின் மூலமாகவே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், செல்லிடப்பேசிகளில் பண்பலைகளைக் கேட்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, வானொலி சேவை அதிகரிக்கத் தொடங்கியது.
  • தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற பலர் வானொலியை அலங்கரித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சாகித்ய அகாதெமி விருதாளர்களான தி.ஜானகிராமன், மீ.ப.சோமு, அகிலன் (இவர் ஞானபீட பரிசும் பெற்றவர்) அ.ச.ஞானசம்பந்தன், சு.சமுத்திரம் ஆகியோர் அவர்களுள் சிலர்.
  • வானொலியின் ஒலிக்களஞ்சியங்களைக் குறுந்தகடுகளாக்கி மக்களிடம் சேர்க்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் 2000-களில் வானொலி தொடங்கியது. அதன் ஓர் அம்சமாக 2005-இல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைக் குறுந்தகடு வெளியீடு, விற்பனை சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெற்றது. டி.டி.கே. சாலை முழுவதும் நீண்ட வரிசையில் அவற்றைக் காசு கொடுத்து வாங்க மக்கள் காத்து நின்றனர்.
  • அதே போன்று 2006-ஆம் ஆண்டு காமராஜர் நினைவு அரங்கத்தில் நிகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த பெருந்திரள் கூட்டமும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, அறிதிறன் பேசி, ஐபேட், இண்டர்நெட் எனப் பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்ட போதிலும் வெகுஜன ஊடகத்தின் முன்னோடி வானொலிதான். 

நன்றி: தினமணி (13-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்