TNPSC Thervupettagam

ஊடகங்கள் கவனம் விரியட்டும்.. நாடு இயல்புக்குத் திரும்பட்டும்

May 12 , 2020 1709 days 690 0
  • கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அமலாக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டைப் பழைய இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் வெகுமக்கள் மத்தியில் பெருகிவரும் நிலையில், இது சம்பந்தமான விவாதங்கள் கருத்துருவாக்கர்கள் மத்தியில், குறிப்பாக ஊடகங்களில் நிகழ்வது முக்கியம்.
  • துரதிர்ஷ்டவசமாக கரோனா நேரடியாக உருவாக்கும் சமூகப் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இங்கு ஊரடங்கின் விளைவாக மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு அளிக்கப்படவில்லை.
  • சீனாவிலும், தொடர்ந்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கரோனா பரவியபோது கரோனா தொடர்பில் இந்தியாவின் அறிதல்கள் குறைவு.
  • ஆனால், ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஐம்பது நாட்களில் கரோனாவை எதிர்கொள்வது தொடர்பில் தனக்கென்று சில புரிதல்களை நாடு எட்டியிருக்கிறது.
  • அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் அளவுக்கு இங்கே பாதிப்புகள் இல்லை என்பது போக, பாதிப்புகளை எதிர்கொள்வதிலும் வடக்கு, தெற்கு, வடகிழக்கு இடையே பொருட்படுத்தத்தக்க மாறுபாட்டைக் காண முடிகிறது; மிக முக்கியமாக, அந்தந்த மாநிலச் சூழலுக்கேற்பச் செயல்படுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அதேசமயம், கரோனா ஊரடங்கின் விளைவாக நாடு முழுக்க சாமானியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
  • விழிப்புணர்வோடும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் இயல்புநிலைக்குத் திரும்புவதே சிறந்த முறையாகத் தென்படும் நிலையில், ஊரடங்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுதல் அவசியம்.
  • இதற்கு ஊடகங்களும் முக்கியப் பங்காற்ற வேண்டும். ஆனால், ஊடகங்களின் சிந்தனையோ மொத்தமாக கரோனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
  • இரு மாதங்களுக்கும் மேலாக கரோனா சம்பந்தப்பட்ட செய்திகளே எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், சகலரின் சிந்தனைகளையும் அது பீடித்துவிட்டிருக்கிறது.
  • விளைவாக, கரோனா நீங்கலான ஏனைய எல்லா முக்கியச் செய்திகளும் மக்கள் கவனத்துக்கு அப்பால் மடிந்து விழுகின்றன. ஆட்சியாளர்களுக்கு இது அபாரமான வாய்ப்பு.
  • ஊரடங்கின் விளைவாக அரசியல் செயல்பாடுகள் தேக்கத்தைச் சந்தித்திருக்கும் சூழலில், நிறைய மக்கள் விரோதச் செயல்பாடுகள் அரங்கேறுகின்றன.
  • தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் நலச் சட்டங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு முடக்கிவைக்கும் நடவடிக்கை பரவத் தொடங்கியிருப்பது ஒரு சோறு பதம்.
  • நிச்சயமாக கரோனாவுக்கு உரிய முக்கியத்துவம் செய்திகளில் அளிக்கப்படல் முக்கியம். அதேசமயம், கரோனா செய்திகள் மட்டுமே செய்திகள் அல்ல.
  • ஊடகங்கள் தங்கள் கவனக் குவிமையத்தை விரிக்காத வரை மக்களாலும் இந்த உளவியல் வலையிலிருந்து விடுபட முடியாது. அது யாருக்கும் நல்லதல்ல!

நன்றி தி இந்து (12-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்