TNPSC Thervupettagam

ஊடக விமர்சனங்களை முடக்கும் கருவியா நிதிசார் சட்டங்கள்?

October 30 , 2024 69 days 87 0

ஊடக விமர்சனங்களை முடக்கும் கருவியா நிதிசார் சட்டங்கள்?

  • அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும், பொருளாதாரக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களின் துணையுடன் முடக்கப்படும் போக்கு சர்வதேச அளவில் அதிகரித்துவருவதாக யுனெஸ்கோவும் வேறு சில சர்வதேச அமைப்புகளும் தெரிவித்திருக்கின்றன. சர்வதேச அளவில் ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவாலாகவே இதைப் பார்க்க வேண்டும்.
  • ‘பத்திரிகையாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் மெளனமாக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் நிதிசார் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள யுனெஸ்கோ அறிக்கை, 2005 முதல் நிதிசார் சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 120 வழக்குகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
  • இவற்றில் 60% வழக்குகள் 2019இலிருந்து 2023வரையிலான காலக்கட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவை என்பதிலிருந்து அரசுகளின் இந்தப் போக்கு குறுகிய காலத்தில் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துவருகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். பத்திரிகையாளர்கள் மீது பதியப்படும் வழக்குகளில் - மிரட்டிப் பணம் பறித்தல், வரி ஏய்ப்பு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகியவையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
  • யுனெஸ்கோவுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான உலகச் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கமும் (World Association of News Publishers) இது குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பதியப்பட்ட வழக்குகள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, அந்நிய நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி வசூலித்த குற்றச்சாட்டின் பெயரில் ‘நியூஸ் கிளிக்’ நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா, மனித வளத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதையும் நியூஸ் கிளிக் ஊழியர்கள் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதையும் ‘அரசை விமர்சிக்கும் ஊடகங்களை முடக்குவதற்கு தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் பயன்படுத்தப்படும் போக்குக்கான கவலைக்குரிய உதாரணம்’ என்று அந்த அறிக்கை அடையாளப்படுத்தியுள்ளது.
  • பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டது தவறு என்று கூறி, இந்த ஆண்டு மே 2024இல் உச்ச நீதிமன்றம் அவரைச் சிறையிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது அவதூறு வழக்கு என்றால் ஒரு பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி / கட்டுரையில் அவதூறு இருப்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், பத்திரிகையில் வெளியாகும் உள்ளடக்கங்களுக்கும் அவற்றின் மீதான நிதிசார்ந்த குற்றச்சாட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வேண்டியதில்லை.
  • எனவே, அரசுகள் தமக்கு எதிரான செய்திகளை முடக்குவதற்கான மறைமுக உத்தியாக ஊடக நிறுவனங்கள் மீது நிதி சார்ந்த குற்றச்சாட்டுகளை ஏவும் வழிமுறையைக் கைக்கொள்கின்றன என்பதை இரண்டு அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன. நிதிசார் வழக்குகளை எதிர்கொள்ளும் ஊடக நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
  • வழக்குகளை எதிர்கொள்வதற்கு மிகுந்த நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களை நியமிப்பதும் அதற்கான செலவுகளும் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை. மேலும், இதுபோன்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாட முன்வரும் வழக்கறிஞர்களும் மிரட்டல்களை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளையும் இந்த அறிக்கைகள் கவனப்படுத்தியுள்ளன.
  • அந்நிய நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோதமான வழிகளில் நிதியைப் பெற்று அரசுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் செயல்படும் ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்ட வழிகளில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், அரசை விமர்சிக்கும் உரிமையை முடக்குவதற்கான கருவியாக இவற்றைப் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
  • அரசின் மீதான நியாயமான விமர்சனங்கள் ஜனநாயகத்துக்கு வலுசேர்ப்பவை. மக்கள் நலனை நோக்கிய பாதையில் அரசை வழிநடத்துபவை. ஜனநாயக நாடுகளில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதை உறுதிப்படுத்துவதும் சட்டங்களின் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதும் சர்வதேசச் சமூகத்தின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்