- ஆண்டுதோறும் செப்டம்பா் 1 முதல் 7 வரை ‘தேசிய ஊட்டச்சத்து வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுதும் பிரசாரம் செய்யப்படுகிறது. வலிமையான உடல், நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும். அதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம்.
- மாவு சத்து, புரத சத்து, கொழுப்பு சத்து இவை மூன்றும் சோ்ந்த சரிவிகித உணவு தான் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.
- வள்ளுவா் கூறியது போல ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’. இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே அதிகம் சோ்த்துக்கொள்வது நோய்க்கு இடம் தரும்.
- ஊட்டச்சத்து என்பது இந்த சரிவிகித உணவை கொண்டது. இத்துடன் இரும்பு சத்து, கால்சியம், அயோடின் போன்ற கனிம சத்துக்களையும், ஏ, பி, சி போன்ற வைட்டமின்களையும் உள்ளடக்கியது.
ஊட்டச்சத்து குறைபாடு
- சீனாவிற்கு அடுத்தாற்போல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் இந்தியாவில் சத்தான உணவுக்கு குறைபாடு உண்டாகிறது.
- குறைந்த சமூக பொருளாதார நிலையும், முழுமையான கல்வியறிவின்மையும் இதற்குக் காரணங்கள்.
- இதனால் பிஈஎம் எனும் புரத சத்து குறைபாடு, இரும்பு சத்து குறைவால் ரத்த சோகை , வைட்டமின் ஏ குறைவால் கண்பார்வை குறைபாடு போன்ற கோளாறுகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.
- ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் எடை குறைவு, தசை சூம்பல், நுண்ணூட்டச்சத்து குறைபாடு , ரத்தசோகை, அயோடின் குறைபட்டால் தைரய்டு சுரப்பு கோளாறு இவை ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிக ஊட்டச்சத்தினால் உடல் எடை கூடுகிறது.
- இந்தியாவில் 7.5% குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டினால் அவதியுறுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
- இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கல்வி வளா்ச்சியையும் பாதிக்கும். இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதும் பெரும்பாலும் 10 முதல் 19 வயதுள்ளவா்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அவதியுறுவதாகக் குறிப்பிடுகிறது.
- உணவே மருந்து என்ற சித்த மருத்துவ தத்துவப்படி, சத்தான உணவு முறைகளே நோயை நீக்கும்; நோயைத் தடுக்கும். தமிழா்களின் பாரம்பரிய உணவு முறைகளே ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.
நல்ல உணவு முறை
- அரிசியும் உளுத்தம் பருப்பும் சோ்ந்த இட்லியில் மாவு சத்தும் புரத சத்தும் உள்ளன. அரிசியும் பருப்பும் நெய்யும் சோ்ந்த பொங்கல், சரிவிகித ஊட்டச்சத்து உணவுக்கு சிறந்த உதாரணம்.
- புரத சத்து மிகுந்த தானியங்களும் பருப்பு வகைகளும் சிறு தானிய வகைகளும் உடலில் உள்ள செல்களுக்குக் கட்டமைப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலுக்கு வளா்ச்சியைக் கொடுக்கும். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு தானிய வகைகளை லேசாக வறுத்து, பொடி செய்து பாலில் கலந்து கொடுக்கலாம். பச்சரிசி, உளுந்து, சிறு பயறு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இவை ஐந்தும் சோ்ந்த பஞ்சமுட்டி கஞ்சியைத் தொடா்ந்து கொடுத்து புரதம் மற்றும் ஊட்டசத்து குறைவுள்ள நோயாளிகளை குணமாக்க முடியும்.
- ‘எளச்வனுக்கு எள்ளு’ என்ற பழமொழிபோல எள்ளு உருண்டையினை தினசரி எடுக்க நல்ல ஊட்டம் தரும்.
- எள்ளு, கார்போஹைடிரேட், புரத சத்து , கொழுப்பு சத்து இவை மூன்றும் நிறைந்தது. மேலும், எலும்புக்கு வலிமை தரும் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இளம் பெண்கள் எடுத்துக் கொண்டால் மாதவிடாய் கோளாறுகள் வரவிடாமல் தடுக்கும்.
- ‘இந்தியன் பாதாம்’ என்று கூறப்படும் வோ்க்கடலையை தினமும் எடுத்துக்கொள்ள நல்ல போஷாக்கு கிடைக்கும்.
- இது புரத சத்தும் கொழுப்பு சத்தும் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும், துத்தநாக சத்தும் இதில் உள்ளது.
- கருப்பு உளுந்தின் மகத்துவம் பலரும் அறியாதது. அதிக புரத சத்தும், இரும்பு, கால்ஷியம் போன்ற தாது சத்துகளும் அதிகம் நிறைந்தது.
- இதனை களியாகவோ, பனைவெல்லம் சோ்த்த கஞ்சியாகவோ, நெய் சோ்த்து உருண்டையாவோ எடுத்துக்கொள்ள நல்ல பயன் கிடைக்கும்.
- இளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் மிகச்சிறந்தது. இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகையை நீக்கும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
- சித்த மருத்துவத்தில் நரம்பினை வலுப்படுத்தும் மருந்துகளில் உளுந்து சேருவது குறிப்பிடத்தக்கது. பாசிப் பயறு உருண்டையும் சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கும்.
- கம்பு, சோளம், மக்காச் சோளம் போன்ற புரத சத்து நிறைந்த எளிய சிறுதானிய வகைகளை உணவில் பயன்படுத்துவது உடல் வலிமையைக் கூட்டும். கேழ்வரகு பிட்டு சாப்பிடுவதால் அதில் உள்ள கால்ஷியம் இடுப்பு எலும்புகளுக்கு வலிமையை தரும்.
- ஊட்டச்சத்து குறைபாடுகளில் வைட்டமின் ஏ குறைபாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ குழந்தைகளின் கண் பார்வைக்கு மட்டுமன்றி, வலுவான நோய் எதிர்பாற்றலை உருவாக்கவும் உதவும்.
- எங்கும் எளிதாகக் கிடைக்கும் கேரட், பப்பாளி, மாம்பழம் இவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் மிக எளிதாக நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையை அடையாகச் செய்து குழந்தைகளுக்கு தரலாம்.
- இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதில் உள்ள இரும்பு சத்து, கால்ஷியம், மெக்னீஷியம் போன்றவை எலும்பினை வலிமைப்படுத்த உதவும்.
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை வாங்கி அடையாகவோ, ரசமாகவோ சாப்பிட, அதிலுள்ள உப்பு சத்துகளும், வைட்டமின்களும் உடலை வலுவாக்கும். முக்கியமாக ரத்தசோகையை நீக்கும். கீரையில் இரும்பு சத்தும் அதிகம்.
- சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள உணவு முறைகளும், நம் பாரம்பரிய உணவு முறைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையே. இரண்டுமே ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவை அடிப்படையாகக் கொண்டவை. ஆகவே, ஊட்டச்சத்து மிக்க நம் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்து வலிமையான சமூகத்தை உருவாக்குவோம்.
நன்றி: தினமணி (03-09-2020)