ஊழலை விசாரிக்க ஆளுநர் அனுமதி ஏன்?
- ‘பொதுவாழ்வில் இருப்பவர் – இருந்தவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி வழக்கு விசாரணை தொடர அனுமதி பெறுவது அவசியமா?’ என்ற கேள்வி மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது; கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமய்யாவுக்கு எதிராக ‘முடா’ மனை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார்கள் மீது வழக்கு நடத்த, ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
- இது தொடர்பாக கர்நாடக மாநில அரசும் காங்கிரஸ் கட்சியும் சட்டப் பிரச்சினைகளை எழுப்பி, விசாரணைக்குத் தடையாணை கோரின. ‘தனியார் புகார்கள்’ அடிப்படையிலான இந்த ஊழல் வழக்கு விசாரணையைச் சற்றே ஒத்திப்போடுமாறு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் இருந்தவர் மீது ஊழல் புகார் தொடர்பாக வழக்கு நடத்த அனுமதி ஏன் தேவைப்படுகிறது?
- ஊழல் தடுப்புச் சட்டத்தில், பின்பற்றப்பட வேண்டிய கட்டாய அம்சமாக, ‘விசாரணைக்கு அனுமதி தேவை’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மீது, அவர்கள் அரசு வேலைகளைச் செய்யும்போது வேண்டுமென்றே அவதூறு சுமத்தவும், அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் அலைக்கழிக்கவும் ஆதாரமற்ற புகார்களின் அடிப்படையில் எவரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவர்களை வழக்கு மன்றங்களில் அலையவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது.
- ‘பொது வேலை’யில் இருக்கும் ஒருவர் (Public Servant) மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று எவரேனும் கோரினால், அப்படிப் புகாருக்கு உள்ளானவரை ‘பதவியிலிருந்து அகற்றக்கூடிய அதிகாரம்’ உள்ளவரின் முன் அனுமதி பெறாமல் விசாரணைக்கு அனுமதி தரக் கூடாது என்று தண்டனையியல் சட்டத்தின் பிரிவு 197 கூறுகிறது. ‘பொது வேலையில் இருந்தவர் – அல்லது இருப்பவர்’ என்று அப்பிரிவு தெளிவாகக் குறிப்பிடுகிறது.
- ஊழல் தடுப்புச் சட்டம், 1947, பிரிவு 6லும் இதேபோன்ற பிரிவு இருக்கிறது. புகாருக்கு உள்ளானவர் பொதுப் பதவியை வகித்த காலத்தில் நடந்ததாகத் தொடரப்படும் ஊழல் வழக்குகளுக்கு மட்டும்தான் இப்படி முன் அனுமதி தேவை. அப்படிப் பொதுப் பதவி ஏதும் வகிக்காத காலத்தில் செய்த ஊழலுக்கு இப்படி யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. இதைத் தண்டனையியியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் இரண்டுமே தெளிவாகத் தெரிவிக்கிறது.
- அரசுப் பணியில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்கிறது. முதல்வர் – அமைச்சர் போன்ற பதவிகளை வகிப்பவர்கள், அவர்களுடைய பதவிக் காலத்தில் ‘பொது ஊழியர்க’ளாகக் கருதப்படுவதால் அவர்கள் மீதான விசாரணைகளுக்கு ஆளுநர் அனுமதி அவசியப்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் - 1988இன் பிரிவு 19லும் இந்த ஏற்பாடு அப்படியே தொடர்கிறது.
அனுமதி வழங்குவது தொடர்பாக சமீபத்திய நடைமுறை என்ன?
- தண்டனையியல் சட்டத்துக்கு மாற்றாக புதிதாக இயற்றப்பட்டுள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதை (பிஎன்எஸ்எஸ்) சட்டத்திலும் பிரிவு 218, இந்த அனுமதி அம்சத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. 2018இல் ஊழல் தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தம்செய்தபோது, ஊழல் குற்றச்சாட்டு மீதான விசாரணையைத் தொடங்குவதற்குக்கூட உரியவர்களின் அனுமதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது.
- ஊழல் குற்றச்சாட்டு மீதான விசாரணையைத் தொடங்க உரிய அதிகாரியின் அனுமதி தேவை என்று பிரிவு 17ஏ கூறியது; ஊழல் புகார் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் என்று எதுவாக இருந்தாலும் உரிய அதிகாரமுள்ளவரின் அனுமதி தேவை என்று பிரிவு 19 வலியுறுத்துகிறது. ‘பொது ஊழியராக இருந்தவர் – இருப்பவர்’ என்று 2018இல் செய்யப்பட்ட திருத்தம் தெளிவாக்குகிறது.
முதல்வருக்கு எதிரான ஊழல் புகாரில் ஆளுநரின் பங்கு என்ன?
- ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வேலைக்கு அமர்த்தும் ‘பொது ஊழியர்கள்’ மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்கும் அதிகாரம் குறித்து தண்டனையியல் சட்டம் பொதுவாகப் பேசுகிறது. ஆனால் 1947, 1988 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில், ‘வேறு எந்த நபர் மீதாவது’ என்றொரு வார்த்தையைச் சேர்த்து – அந்தப் பதவியில் இருப்பவர்களை, ‘பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் படைத்தவர்’ அனுமதி பெறப்பட வேண்டும் என்கிறது. முதல்வரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், மாநில ஆளுநருக்குத்தான் அரசமைப்புச் சட்டப்படி தரப்பட்டிருக்கிறது என்பதால் முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி தரும் அதிகாரம் அவருக்கு இந்தச் சட்டங்களின் மூலம் கிடைக்கிறது.
- இந்த விவகாரத்தில் ஆளுநர், மாநில அமைச்சரவையின் ‘ஆலோசனைப்படி’ செயல்பட வேண்டுமா அல்லது அவருடைய ‘விருப்ப அதிகாரத்’தைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி அடுத்து பிறக்கிறது.
- மஹாராஷ்டிர முதலவராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே மீதான ஊழல் புகார் வழக்கில், ஆளுநர் தன்னுடைய விருப்ப அதிகாரப்படி முடிவெடுக்க வேண்டும் என்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. “முதல்வர் மீது ஊழல் புகார் அடிப்படையில் வழக்கு நடைபெற்றாக வேண்டிய அவசியம் ஏற்படும்போது, முதல்வர் மீது வழக்கு நடத்த அனுமதி தரலாமா, கூடாதா என்ற ஐயம் ஆளுநருக்குத் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது; ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 6வது பிரிவு, ஆளுநர் இந்த கட்டத்தில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை – அவருடைய விருப்ப அதிகாரத்தைப் பயன்படுத்தினாலே போதும் என்பதையே உள்ளார்ந்த அம்சமாகக்கொண்டிருக்கிறது.”
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்கள் கூறியது என்ன?
- மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது இதுபோல ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன; புகார்களை விசாரித்த லோக்ஆயுக்த அமைப்பு, பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறியிருந்தாலும் - விசாரணைக்கு அனுமதி தர வேண்டியதில்லை என்றே ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியது மாநில அமைச்சரவை. ஆளுநர் அந்த ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, ஊழல் செய்ததற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதால் வழக்கு தொடர அனுமதி வழங்கினார்.
- ‘மத்திய பிரதேச மாநில காவல் துறை நிர்வாகம் எதிர் மத்திய பிரதேச அரசு மற்றும் சிலர்’ என்ற அந்த வழக்கில் (2004), அமைச்சரவையின் முடிவு பகுத்தறிவுக்கு முரணானது, ஆளுநரின் முடிவு சரியானது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
- “இந்த மாதிரியான அபூர்வ தருணங்களில் குற்றச்சாட்டுகளில் கூறப்படும் உண்மைகளும், குற்றத்துக்கு உள்ளானவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒருசார்புத்தன்மையும் ஒருசேர வெளிப்படுகின்றன; குற்றச்சாட்டு தொடர்பாக பல உண்மைகள் வெளிப்படையாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும் அனுமதி தர வேண்டாம் என்று மாநில அமைச்சரவை பகுத்தறிவுக்கு முரணாக ஆலோசனை வழங்குகிறது. ‘அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் நடக்க வேண்டும்’ என்ற பொதுவான கோட்பாட்டின்படியல்லாமல், ‘விருப்ப அதிகாரத்தின் பேரில்’ விசாரணைக்கு அனுமதி தர ஆளுநர் செய்த முடிவு சரியானது” என்று விளக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)