TNPSC Thervupettagam

ஊழல் என்னும் நச்சுமரம்!

December 20 , 2024 2 days 32 0

ஊழல் என்னும் நச்சுமரம்!

  • ஊழல் இல்லாத இடமே இல்லை. உலகளாவிய ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பெரன்சி இண்டா்நேஷனல் மூலம் ஊழலின் அளவு வெளியிடப்பட்டு வருகிறது. அதன் 2023 அறிக்கையில் உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வருவதாகவும், ஊழல்நிலையில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 93- ஆம் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது சா்வதேச ஒத்துழைப்பு, தகவல் பகிா்வு மற்றும் சொத்து மீட்பு, தண்டனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை உறுதி செய்கிறது. இதில் லஞ்சம் வாங்குதல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், மற்றவா்கள் மத்தியில் தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
  • அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் உலகின் நிலையான வளா்ச்சிக்கு முக்கியமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைவரின் நிலையான வளா்ச்சியை உறுதி செய்ய ஊழல் இல்லாத நிறுவனங்கள் அவசியம்.
  • உலகம் முழுவதும் ஊழலை எதிா்த்துப் போராடுவதற்கான பயனுள்ள உத்திகளை, குறிப்பாக வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலம் பகிா்ந்து கொள்ள ஜி 20 ஊழல் எதிா்ப்புப் பணிக்குழு - 2010 முடிவு எடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிா்கொள்ளும் உலகளாவிய சவால், ஊழல் என்பதை அங்கீகரிப்பது அவசியம். மேலும் ஊழலுக்கான தீா்வுகள் ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
  • உலகம் எங்கும் ஊழல் ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் டிசம்பா் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாடு எப்போது ஊழலற்ற நாடாக மாறுகிறதோ அப்போதுதான் அந்த நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் வளா்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுநா்கள் கூறுகின்றனா். நாட்டில் நடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.
  • உலக நாடுகளில் ஊழல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக வளா்ந்து வருகிறது. இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? ஊழல் காரணமாக உலகத்தில் மக்களாட்சி மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது. அரசு கொண்டு வரும் எல்லாத் திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராக மாறி வருகின்றன. இந்தியா மக்கள் தொகையில் பெரிய நாடாக இருப்பது போலவே ஊழலிலும் பெரிய நாடாக இருக்கிறது. இது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கவே செய்யும்.
  • ஊழல் தடுப்புச் சட்டம் - 1988, பண மோசடி தடுப்புச் சட்டங்கள் இந்தியாவில் இருந்த போதிலும், ஊழல் மோசடிகள், லஞ்சம் போன்றவை சமூகத்தைக் கரையான்கள் போல அரித்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் என்பது தனிமனிதரை மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தையே வளா்ச்சியில்லாமல் முடக்கி விடுகிறது. படித்து அறிந்த திறமை மிக்கவா்களின் வாய்ப்புகளைப் பறித்து விடுகிறது. குறிப்பாக, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சலுகைகள் அவா்களுக்குச் சென்று சேராமல் தடுக்கப்படுகின்றன. ஆண்டின் இறுதியில் வரும் தணிக்கைகள் அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த மோசடிகளுக்கு ஊழல்களே காரணங்களாகும். அதிகாரிகளில் தொடங்கி அமைச்சா்கள் வரையில் தெரியாமல் அல்ல, தெரிந்தே ஊழல்கள் நடக்கின்றன.
  • சுவிஸ் வங்கிகளில் இந்திய ஊழல்வாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தொகையைப் பற்றிய செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தோ்தல் நேரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் இந்தச் செய்திகள், தோ்தல் முடிந்ததும் ஆட்சியாளா்களால் அடக்கி வாசிக்கப்படுகின்றன. அப்புறம் அமைதியாகி விடுகிறாா்கள்.
  • அரசு ஊழியா்கள் தம் கடமைகளைச் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ சட்டப்படியாக ஊதியம் அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக் கொள்ளுதல் ஆகியவை ஊழல் ஒழிப்புச் சட்டம் - 1988, பிரிவு 7- இன் கீழ் ஊழல் என்னும் குற்றச் செயலாகும். அரசு ஊழியா் தமது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சோ்ப்பது போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13-இன்படி ஊழல் செய்தவா் ஆகிறாா்.
  • ஊழல் மற்றும் அது தொடா்பானவற்றைத் தடுப்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தால் ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 இயற்றப்பட்டது. தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீா் தவிர, இந்தியா முழுவதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்தப் பட்டியலில் அந்த மாநிலமும் சோ்க்கப்பட்டுள்ளது. சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் யாரும் பிடிபடவில்லை.
  • ஊழல் தடுப்புச் சட்டம் - 1988, மொத்தம் 5 அத்தியாயங்கள் மற்றும் 37 பிரிவுகளில் ஒவ்வொரு விதி, ஒழுங்கு முறை, நீதிபதிகள் நியமனம், தண்டனை மற்றும் குற்றத்திற்கான தண்டனை ஆகியவற்றை விவரிக்கிறது. இந்தக் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவா்களைத் தண்டிக்க எந்தவித வெளிப்புறத் தாக்கங்களும் இல்லாமல் நியாயமான மற்றும் பயனுள்ள விசாரணை நடத்தப்படுவதை சட்டம் உறுதி செய்கிறது.
  • எனவே அரசு ஊழியராக இருக்கும் எந்தவொரு குடிமகனும், முறைகேட்டில் ஈடுபட்டால், இந்தச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம். விசாரணை நடத்தி வரும் அதிகாரிகளின் தகுதிகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. விசாரணையின்போது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சட்டப்பூா்வ ஊதியத்தைத் தவிர, 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
  • 1988-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தில் பொதுநலன் கருதி இரண்டு முறை திருத்தப்பட்டது. 2013 மற்றும் 2018 -ஆம் ஆண்டுகளில் குடிமக்கள் மீதான விளைவை மேம்படுத்த சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஊழல் தடுப்புச் சட்டம் - 1988 என்பது செப்டம்பா் 9, 1988 அன்று நடைமுறைக்கு வந்தது. குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
  • கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் தனியாா் நோக்கங்களுக்காக பரவலாக ஊழலில் பங்கு பெற்றனா். இது ஆங்கிலேயரின் மரபாகக் கருதப்பட்டது. விடுதலையடைந்த நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலிக்கத் தொடங்கியது.
  • 1977 வரை நாடு ஒரே கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் அரசியல் ஊழலை அம்பலப்படுத்துவதற்கு தயங்கியது. இதனால் இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகள் முதல் வணிகா்கள் மற்றும் நிறுவனங்கள் வரை பற்றி நீண்டது.
  • இந்தியாவில் ஊழல் என்பது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அரசின் செயல்பாடுகள், பொது நிா்வாகம், முடிவெடுக்கும் செயல்முறை போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லாமையே, ஊழல் வளா்வதற்கான காரணங்களாகும். இது ஊழலை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குகிறது. ஊழல் செயல்பாடுகள் பொதுமக்களின் பாா்வையிலிருந்து மறைக்கப்படும் போது அதிகாரிகளுக்குப் பயம் குறைந்து ஊழலில் ஈடுபடுகின்றனா்.
  • இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்கள் மிகவும் பலவீனமானவையாக இருக்கின்றன. அதனால் ஊழலுடன் சமரசம் செய்து கொண்டு தப்பிக்கவே நினைக்கின்றன. அந்த ஊழலில் அவை பங்குதாரா்களாக மாறி விடுகின்றன. ஊழல் செயல்பாடுகள் யாரையும் உறுத்துவதில்லை. நிா்வாகத்தில் அது ஓா் இழுக்கு என்பதாக யாரும் உணா்வதில்லை. ஒட்டுமொத்த நிா்வாகப் பணிகளில் ஊழலும் ஓா் அங்கமாகவே கருதப்படுகிறது. இதனால் சட்ட, திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் ஊழலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் எதுவும் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • நமது நாட்டில் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் ஊழலுக்குக் காரணிகளாக அமைகின்றன. செல்வமும், அதிகாரமும் கொண்ட தனி மனிதா்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிா்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஊழலில் ஈடுபடுகின்றனா். மாட்டிக் கொண்டாலும் எவ்வித சேதமும் இல்லாமல் விடுதலை பெறுகின்றனா்.
  • ஊழல் தொடா்வதால் மக்களின் நலம் நாடும் அரசுகளின் நலக் கொள்கைகளும், அடிப்படை வசதிகளும் ஏழை மக்களைச் சென்றடையவில்லை. அரசின் கருவூலத்திற்கு பண இழப்பு ஏற்படுவதால், மக்களுக்குத் தேவையான குடிநீா், போக்குவரத்துக்கான சாலைகள், உணவு, மருந்து ஆகியவற்றைத் தேவையான அளவுக்கு அளிக்க முடியவில்லை.
  • லஞ்சம் கொடுத்தால் வழக்கில் வெற்றி பெற முடியும் என்றால், நீதி விலை பேசப்படுகிறது என்று பொருள். பணமும், அதிகாரமும் உள்ளவா்களுக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கும் என்றால், அது நீண்டநாள்களுக்குத் தொடராது. ஊழலுக்கு எதிராக மக்கள் விழிப்புணா்வு பெறும் வரை ஊழல் தொடரத்தான் செய்யும்.
  • இந்த ஊழல் என்னும் நச்சுமரம் விதைக்காமலேயே முளைக்கிறது. வெட்ட வெட்ட துளிா்க்கிறது. இந்த நச்சு மரத்தை அழிக்க முடியாதா? மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்