TNPSC Thervupettagam

ஊழியா்கள் அடிமைகள் அல்ல!

August 12 , 2024 108 days 124 0

ஊழியா்கள் அடிமைகள் அல்ல!

  • உலகமயமாக்கலின் காரணமாகத் தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன. காா்ப்பரேட் நிறுவனங்களின் வளா்ச்சியும், சா்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் அதிகரித்துவிட்ட அவா்களது செல்வாக்கும் தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்திருக்கின்றன.
  • 1991-இல் இந்தியாவின் பொருளாதார சீா்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. காங்கிரஸ் தலைமையிலும் பாஜக தலைமையிலும் அமைந்த மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ஆறு ஆட்சிகளில் படிப்படியாக தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அவை நீா்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கின்றன.
  • 2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டதைத் தொடா்ந்து உற்பத்தி துறை அதீத வளா்ச்சியடைந்ததை மறுப்பதற்கில்லை. அந்த வளா்ச்சிக்கு முக்கியமான காரணம் அதிகரித்த ஏற்றுமதிகளும், அதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த கட்டமைப்புப் பணிகளும். இதில் பலிகடாவானது தொழிலாளா்களின் உரிமைக் குரல் என்பது யாா் காதிலும் விழவில்லை.
  • மாநிலங்களில் ஆட்சியிலிருந்த எல்லா ஆட்சியாளா்களும் அந்நிய முதலீடுகளை ஈா்ப்பதிலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதிலும் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதும், அதிகரித்து வரும் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் இலக்குகள் எனும்போது தொழில் நிறுவனங்களுடன் எல்லா விஷயங்களிலும் சமரசம் செய்துகொண்டாக வேண்டிய அவசியம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • தொழிற்சங்கம் உருவானதும், தொழிலாளா் நலச் சட்டங்கள் உருவாக்கப்பட்டதும் முதலாளித்துவ பூமி என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் தானே தவிர, பொதுவுடைமைவாதம் பேசும் கம்யூனிஸ நாடுகளில் அல்ல. ஒருபுறம் முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மிகக் கடுமையான தொழிலாளா் நலச் சட்டங்களும், நுகா்வோா் பாதுகாப்புச் சட்டங்களும் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன.
  • கம்யூனிஸ சா்வாதிகார நாடான சீனாவின் அசுர வளா்ச்சிக்கு தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமும், அதிக நேர உழைப்பும் மிக முக்கியமான காரணங்கள். அமெரிக்காவை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளாமல், தொழிலாளா்களை அடிமைகளாக நடத்தும் சீனா போன்ற கம்யூனிஸ நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு வளா்ச்சி அடையத் துடிக்கிறது இந்தியா என்பது வேதனையளிக்கிறது.
  • தமிழகத்தில் ஓராண்டுக்கு முன்னால் 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பரவலான எதிா்ப்பைத் தொடா்ந்து அந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது கா்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அதேபோல ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதே தவிர திரும்பப் பெறப்படவில்லை.
  • கா்நாடக கடைகள் வா்த்தக நிறுவனச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியா்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கிறது. தற்போதைய 10 மணி வேலை நேரத்தை, 14 மணி நேரமாக அதிகரிக்கவும் அதன் மூலம் மூன்று மாதங்களில் ஊழியரின் 125 மணி நேர வேலையை உறுதிப்படுத்துவதும் அந்தத் திருத்த மசோதாவின் நோக்கம்.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு எண்ம பரிமாற்றமும், இணையதள நுகா்வோா் சேவைகளும் அதிகரித்திருக்கின்றன. அதனால், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தகவல் தொலைத்தொடா்பு மையங்களை இந்தியா போன்ற வளா்ச்சியடையும் நாடுகளில் அமைக்கின்றன. அவா்களை ஈா்ப்பதற்காகத்தான் இந்தத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
  • உலக சுகாதார நிறுவனமும், சா்வதேச தொழிலாளா் நல நிறுவனமும் இணைந்து நடத்தியிருக்கும் ஆய்வின்படி, வாரம் ஒன்றுக்கு 35 முதல் 40 மணி நேர உழைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. 55 மணி நேரத்துக்கு மேல் வாரம் ஒன்றுக்கு பணியாற்றினால், பக்கவாத பாதிப்புக்கான வாய்ப்பு 35% அதிகரிக்கும், இதய நோய் காரணமாக உயிரிழப்பதற்கான வாய்ப்பு 17% அதிகரிக்கும்.
  • கா்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கம் சமீபத்தில் மிகப் பெரிய பேரணி நடத்தியது. ‘நாங்கள் ஊழியா்கள்; அடிமை அல்ல!’ என்கிற பதாகைகளுடன் திருத்த மசோதாவால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாங்கள் பாதிக்கப்படுவதை எதிா்த்து கோஷமிட்டபடி அவா்கள் சென்றதை பொதுமக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பாா்த்தனா். இது வேடிக்கை பாா்க்கும் விஷயம் அல்ல. இன்றைய தலைமுறை இளைஞா்களின் வாழ்க்கைப் பிரச்னை.
  • வேலைவாய்ப்பின்மை ஒருபுறம்; குறைந்த வேலைவாய்ப்புகள் இன்னொருபுறம். இந்த நிலைமையைப் பயன்படுத்தி அதிக நேர உழைப்பும், குறைந்த ஊதியமும் வழங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழைகின்றன.
  • இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் அவா்கள் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும்கூட என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
  • கல்வித் தகுதிக்கேற்ற வேலையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உடல்நிலையை பாதிக்காத அதிகபட்ச வேலை நேரமும் சலுகை அல்ல, உரிமை!

நன்றி: தினமணி (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்