TNPSC Thervupettagam

எங்கே தவறவிடுகிறோம்?

August 14 , 2024 6 hrs 0 min 6 0

எங்கே தவறவிடுகிறோம்?

  • மூன்று ஆண்டு​களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்​திருந்த நேரம். வெற்றிக் கொண்டாட்​டங்​களில் இந்தியா திளைத்​திருந்தது. நவீன ஒலிம்பிக் வரலாற்றில் முதன்​ முறை​யாகத் தடகளப் பிரிவில் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா.
  • மட்டுமில்​லாமல் 2 வெள்ளி, 4 வெண்கலம் என ஒரே ஒலிம்​பிக்கில் அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. இவ்வளவுக்கும் கோவிட்-19 என்கிற மிகப் பெரிய தொற்று ​நோ​யுடன் உலகம் போராடிக் கொண்டிருந்த காலக்​கட்டம் அது. இதோ பாரிஸ் ஒலிம்பிக் போட்டி முடிந்​து​விட்டது. ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 6 பேர் நூலிழையில் வெண்கலப் பதக்கங்​களைத் தவறவிட்​டுள்​ளனர்.
  • கென்யா, உஸ்பெகிஸ்​தான், கஸகஸ்​தான், சீன தைபே, கியூபா, அசர்பைஜான், போரினால் பாதிக்​கப்​பட்​டுள்ள உக்ரைன் எனப் பல சிறிய நாடுகள் இந்த ஒலிம்​பிக்கில் நம்மைவிட அதிக எண்ணிக்​கையில் பதக்கங்களை வென்றுள்ளன. 140 கோடி மக்கள்​தொகையைக் கொண்ட இந்தியாவோ 6 பதக்கங்​களுடன் 71ஆவது இடத்தைப் பிடித்​துள்ளது.
  • 128 ஆண்டு நவீன ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவால் 41 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்​துள்ளது. ஒலிம்​பிக்கின் 32 வகை விளையாட்​டு​களில் வெறும் 8 பிரிவு​களில் வெல்லப்​பட்டவை இவை. நாம் தவறவிடும் புள்ளி எது?

முரண்​களின் கலவை:

  • இந்த முறை 4ஆவது இடத்தைப் பல வீரர்​/வீராங்​க​னைகள் பெற்றிருந்த நிலையில், இந்திய பேட்மின்டன் வீரர் லக்ஷயா சென்னின் பயிற்​சி​யாளராகச் செயல்பட்ட மூத்த பேட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோன் வீரர், வீராங்​க​னைகளைக் கடுமையாக விமர்​சித்​திருக்​கிறார். ‘அரசு கேட்டதெல்லாம் கொடுத்தது, ஆனால் வீரர், வீராங்​க​னைகள் உரிய வகையில் பதக்கம் வெல்ல முயலவில்லை’ என்று அவர் குற்றஞ்​சாட்​டி​யிருக்​கிறார்.
  • இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்காக டாப்ஸ் - டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்​தின்கீழ் ரூ.470 கோடியை மத்திய அரசு செலவழித்தது. அதேநேரம் பணம், வெளிநாட்டுப் பயிற்​சி​யாளர்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே பதக்கங்களை அறுவடை செய்து​விடு​வதில்லை. ஒரு விளையாட்டை நாம் எப்படிப் பார்க்​கிறோம் என்பதும்கூட இதில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும் என்பதைப் புரிந்து​கொள்ள வேண்டியிருக்​கிறது.
  • ஐபிஎல் என்னும் தனியார் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஒரே ஒரு போட்டித் தொடரில் மட்டும் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். சிறப்பாக விளையாடு​பவர்கள் இந்திய அணிக்கும் தேர்வுசெய்​யப்​படு​வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு ஐசிசி வழங்கிய பரிசுத்தொகை ரூ.20 கோடி, பிசிசிஐ அறிவித்த சிறப்புப் பரிசுத்தொகை ரூ.125 கோடி.
  • கிரிக்கெட் போன்று இல்லாமல், பணம் கொழிக்காத ஒரு விளையாட்டை அதன் மீதான தீராத காதலால்தான் ஒரு வீரர்​/வீராங்கனை நம் நாட்டில் தேர்ந்​தெடுக்​கிறார். ஒருவகையில் இது தண்டனைதான். நாம் யாரைக் கொண்டாடு​கிறோம், தூக்கிப் பிடிக்​கிறோம்? திரைப்பட நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள். இன்றைக்கு அதுவும் நீர்த்​துப்போய் சமூகஊடகப் பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்​கி​யுள்​ளனர். இந்தப் பின்னணியில் பதக்கம் வெல்லாத ஒரு ஒலிம்பிக் வீரர்​/வீராங்​க​னையோ, அவர் பங்கேற்கும் விளையாட்டோ சமூகத்தில் மதிப்பைப் பெறுவது கனவில்​கூடச் சாத்தி​யமில்லை.

பெரும் தடைகள்:

  • உண்மையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒலிம்பிக் விளையாட்​டு​களைத் தேர்ந்தெடுப்​பவர்​களுக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் சமூக வெகுமதி​களும் நம் நாட்டில் தற்போது கிடைக்​கிறதா, எதிர்​காலத்​திலாவது கிடைக்​குமா? இவ்வளவு செலவு செய்திருக்​கிறோம், ஏன் பதக்கம் வெல்ல​வில்லை என்று கேட்பது நுழைவுத் தேர்வு​களில் வெற்றி​பெற்றே ஆக வேண்டும் என்று மாணவர்​களுக்குப் பெற்றோர் உளவியல் நெருக்​கடியை ஏற்படுத்து​வதைப் போன்றிருக்​கிறது.
  • தனிநபராக முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்​ராவின் கருத்து​களுக்கு இந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்​கிறது. ‘ஒலிம்​பிக்கில் பங்கேற்கத் தகுதி பெறுவதற்கான பாதை மிகவும் கடினமானது. பெரும் தடைகளைக் கடந்து ஒலிம்​பிக்கில் ஒருவர் பங்கேற்பதே வெற்றி, பதக்கம் வெல்வது இரண்டாம்​பட்​சம்​தான்’ என்கிறார் அவர்.
  • ரியோ ஒலிம்​பிக்கைப் போல் 2021 டோக்கியோ ஒலிம்​பிக்​கிலும் பல தங்கப் பதக்கங்கள் வெல்வார் என அமெரிக்க ஜிம்னாஸ்​டிக்ஸ் முகமான சிமோன் பைல்ஸ் எதிர்​பார்க்​கப்​பட்​டார். ஆனால், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றிருந்த நிலையில், அடுத்த போட்டிகளி​லிருந்து விலகினார். அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் அவரது முடிவை மதித்து ஏற்றுக்​கொண்டது.
  • போட்டி​யி​லிருந்து அவர் விலகியதற்குக் காரணம், உடலுக்கும் மனதுக்கும் இடையிலான ஒருங்​கிணைப்பை ஜிம்னாஸ்​டிக்ஸ் வீரர்​/வீராங்​க​னைகளால் பேண முடியாத ‘ட்விஸ்​டீஸ்’ எனும் உளவியல் சிக்கல். இந்தச் சிக்கலிலிருந்து மீண்டுவந்த சிமோன் பைல்ஸ் இந்த முறை 3 தங்கப் பதக்கங்களை வென்றிருக்​கிறார். அவரை இயந்திரத்​தனமாக நடத்தாத அமெரிக்க ஒலிம்பிக் சங்கத்​துக்கும் இதில் பங்கிருக்​கிறது.

கற்பனைக்கு எட்டாத முயற்சி:

  • உண்மை​யில், நமது வீரர்​/வீராங்​க​னைகள் பலர் உயிரைக் கொடுத்​துதான் ஒலிம்பிக் போன்ற உச்சப் போட்டிகளில் பங்கேற்​கிறார்கள். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டின் 100 கிராம் எடை வித்தியாசம் காரணமாகத் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோன பிறகே, ஒரே இரவில் 2-3 கிலோ எடையைக் குறைக்க அவர்கள் எப்படி​யெல்லாம் பாடுபடு​கிறார்கள் என்பது குறித்து நமக்குத் தெரிய​வரு​கிறது.
  • தீவிரமான காயங்கள், அறுவை சிகிச்​சைகள், பிரிஜ் பூஷண் சரண்சிங்கின் பாலியல் சித்ரவதைக்கு எதிரான போராட்டம், பயிற்சிகள் குறைந்தது, உடல் எடை அதிகரித்தது போன்ற பல பெருந்​தடைகளைத் தாண்டியே வினேஷ் பாரிஸ் சென்றுசேர்ந்​தார். ‘எல்லா வீராங்​க​னைகளாலும் இவை அனைத்​தையும் கடந்துவிட முடியாது. வினேஷ் ஒரு திடமான போராளியாக இருந்​த​தால்தான் பாரிஸ் போனார்’ என்று அவரது பயிற்​சி​யாளர் வோல்லர் அகோஸ் குறிப்​பிட்​டிருந்​தார்.
  • மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல், குத்துச்​சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் உள்ளிட்டோர் ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக உடல் எடையைக் கட்டுப்​பாட்டில் வைக்க நாம் கற்பனை செய்ய முடியாத பிரம்மப் பிரயத்​தனங்​களில் ஈடுபடு​கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் பட்டினி கிடந்து நேர்முரணாக உடல் வலுவை வெளிப்​படுத்தும் போட்டிகளில் பங்கேற்​கிறார்கள். பிறகு எப்படி எதிராளி​யுடன் போட்டிகளில் மோதுவதற்கான ஆற்றல் அவர்களுக்குக் கிடைக்​கும்?

தேவை புதிய பாதை:

  • இப்படி நமது வீரர்​/வீராங்​க​னைகள் விளையாட்​டுக்​காகத் தங்களால் இயன்ற வகைகளில் எல்லாம் போராடவே செய்கிறார்கள். அதேநேரம், நாடு விடுதலை பெற்ற காலத்​திலிருந்தே விளையாட்டுத் துறை அடிமட்டம் வரை திட்ட​மிட்டு வளர்த்​தெடுக்​கப்​பட​வில்லை. 2012 லண்டன் ஒலிம்​பிக்​கில்தான் 6 பதக்கங்கள் என்கிற நிலையை இந்தியா எட்டியது. சமீப ஆண்டுகளாக பிராய்லர் பண்ணை​கள்​போலச் சில முயற்சி​களைச் செய்து​விட்டு, ஒலிம்​பிக்கில் பதக்கம் வென்றே ஆக வேண்டும் என்று எதிர்​பார்ப்பது எப்படிச் சரி?
  • முதல்​கட்​டமாக, அரசும் நமது சமூகமும் விளையாட்டை ஒரு பண்பாடாக வளர்த்​தெடுக்க வேண்டிய தேவை இருக்​கிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்கள் இன்றைக்கு இந்தியா​வில்தான் இருக்​கிறார்கள். ஆக்கபூர்வமான வழியில் அவர்களது உடல், உள்ளத் திறன்களை நெறிப்​படுத்​தவும் பயன்படுத்​தவும் நம்மிடம் உள்ள திட்டங்கள் என்ன? உடற்ப​யிற்சிக் கல்வி என்பது பள்ளி​களில் சடங்காகவே இருக்​கிறது.
  • உடலைப் பேணுவது, விளையாட்டு மூலமாக ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு என்பது நமது சமூகத்தில் ஒரு முக்கிய அம்சமாக வளர்த்​தெடுக்​கப்​பட​வில்லை. உலகிலேயே இந்தியா​வில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். 10-14 வயதில் உள்ள இந்தியக் குழந்தை​களில் பாதிப் பேருக்கு நீரிழிவு நோய் வரலாம் என ‘ஜர்னல் ஜாமா’ வலைப்​பின்னலில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்​கிறது. உடலுக்கு எந்த வகையிலும் வேலை கொடுக்காத தலைமுறைகளை நமது அரசும் சமூகங்​களும் உருவாக்​கிவரு​கின்றன.
  • இதெற்​கெல்லாம் தீர்வாக, சர்வதேசத் தரத்திலான உள்கட்​டமைப்பு வசதிகள், சர்வதேசப் பயிற்​சி​யாளர்கள், அரசியல் தலையீடு அற்ற விளையாட்டு அமைப்புகள் போன்றவை நாடு முழுவதும் அவசியம். அரசு முதலீடுகள் மட்டுமில்​லாமல், கார்பரேட் நிறுவனங்களை விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளிலும் விளையாட்டு வீரர்​/வீராங்​க​னைகளுக்கும் ஸ்பான்சர் செய்ய வைக்க வேண்டும்.
  • இந்திய ஹாக்கி அணிக்குக் கடந்த 6 ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து​வருவது ஒடிஷா மாநில அரசு. காரணம், ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அடிப்​படையில் ஒரு ஹாக்கி வீரர் என்பதே. இந்திய ஹாக்கி அணி கடந்த இரண்டு ஒலிம்​பிக் போட்​டிகளில் ப​தக்கம்​ வென்​றதற்கு ஒடிஷாவும் ஒரு மறைமுகக் காரணம். அடுத்த 12 ஆண்​டு​களில் ரூ.434 கோடியை ஹாக்கி ஸ்​பான்​சர்​ஷிப்​புக்கு ஒடிஷா செலவிட இருக்​கிறது. இதுபோல் ஒவ்வொரு விளை​யாட்​டை​யும் ஒரு மாநிலமோ, கார்​பரேட் நிறுவனமோ ஏன்​ தத்​தெடு​த்​துக்​கொள்​ளக்​ கூடாது?

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்