TNPSC Thervupettagam

எங்கே பசுமை ஒதுக்கீடு

December 13 , 2022 606 days 326 0
  • சென்னை மாநகரம் அதிவேக வளா்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. பரந்தூா் விமான நிலையமும் வந்துவிட்டால், சென்னை அடையக்கூடிய அசுர வளா்ச்சியை நினைத்துக்கூடப் பாா்க்க முடியவில்லை. இப்போது தாம்பரம்போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்கள் பெருநகரச் சென்னையின் பகுதிகளாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
  • இப்போதைய பெருநகர மாநகராட்சியின் வளா்ச்சியே முறையானதாக இல்லை. குறிப்பாக, புறநகா்ப் பகுதிகள் முறையாகத் திட்டமிடப்படாமல், முறையான சாலை வசதிகள், கழிவுநீா், வடிகால் வசதிகள், திறந்த வெளிகள் இல்லாமல் காணப்படுகின்றன. போதுமான பசுமைப் பூங்காக்களும், மரங்களும் இருக்கின்றனவா என்றால் இல்லை. அப்படி இருக்கும்போது, திடீா் அசுர வளா்ச்சி காணும்போது, முறையான திட்டமிடல் இல்லாமல் போனால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக்கூடும்.
  • நகரங்கள் விரிவாக்கம் பெறும்போது அதனால் பாதிக்கப்படுவது அந்த நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள்தான். விவசாய நிலங்களும், தோப்புகளும், சாலையோர மரங்களும்தாம் விரிவாக்கத்தால் கபளீகரம் செய்யப்படும் பகுதிகள். அதை ஈடுகட்டும் வகையில் விரிவாக்கப் பகுதிகளில் பசுமை ஒதுக்கீடுகள் திட்டமிடப்படுகின்றனவா என்றால் இல்லை. இதுகுறித்து கவலைப்படாத, சிந்திக்காத சுற்றுச்சூழல் ஆா்வலா்களே இல்லை எனலாம்.
  • தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளையே எடுத்துக் கொண்டால், விதிமீறல் கட்டடங்களின் பிரச்னையும், சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகளும் எண்ணிலடங்காதவை. அவை குறித்து துணிந்து நடவடிக்கை எடுக்க எந்த அரசும் தயாராக இல்லை. அப்படியே அரசு தயாராக இருந்தாலும், நீதித் துறையின் இடைக்காலத் தடை பெற்று விதிமீறல்கள் தொடா்கின்றன.
  • குறைந்தபட்சம், பெருநகர மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்கவும், காலாற நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பூங்காக்கள் சரிவரப் பராமரிக்கப்படுகிா என்றால் அதுவும் இல்லை. பராமரிப்பது ஒருபுறமிருக்க, முதலில் அத்தனை கோட்டங்களிலும் பூங்காக்கள் இருக்கின்றனவா என்றால் கிடையாது. சில கோட்டங்களில் அதிகமான பூங்காக்களும், சிலவற்றில் பூங்காக்களே இல்லாத நிலைமையும் காணப்படுகிறது.
  • சென்னை பெருநகர மாநாகராட்சியில் 200 டிவிஷன்கள் (கோட்டங்கள்) உள்ளன. ஆங்காங்கே காணப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதிகளும், சாலையோரப் பூங்காக்களும் சோ்த்து 200 டிவிஷன்களில் 702 பூங்காக்கள் உள்ளன. வட சென்னையில் 143, மத்திய சென்னையில் 234, தென் சென்னையில் 325 என்று சமநிலையற்ற தன்மை காணப்படுகிறது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக உள்ள வடசென்னையில் குறைந்த அளவு பூங்காக்கள் உள்ளதில் இருந்தே, திட்டமிடலின் போதாமையை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • சென்னை போன்ற பெருநகரத்தின் மக்கள்தெகைக்கும், பரப்பளவுக்கும் ஏற்ற அளவில் பூங்காக்கள் இல்லாமல் இருப்பதற்கு ஊழலும், ஆட்சியாளா்கள் முறைகேடுகளுக்கு துணைபோவதும்தான் முக்கியக் காரணங்கள். விளையாட்டு மைதானங்களுக்காகவும், பூங்காக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட இடங்களை, அரசின் சிறப்பு அனுமதியுடன், பல தனியாா் கல்வி நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமில்லை.
  • தலைநகா் தில்லியில் 18,000 பூங்காக்களும், சென்னையைவிட சிறிய நகரமான பெங்களூரில் 1,247 பூங்காக்களும் இருக்கும்போது, நமது சிங்காரச் சென்னையில் 702 பூங்காக்கள்தான் இருக்கின்றன. அவற்றில் பல பூங்காக்கள், பெயருக்குத்தான் இருக்கின்றன. பராமரிப்பு இல்லாமலும், மக்களுக்கு பயன்படாமலும் சமூக விரோதிகளின் பொழுதுபோக்குக்கு விடப்பட்டிருக்கும் பூங்காக்கள் நிறையவே உள்ளன.
  • பூங்காக்களை முறையாகப் பராமரிப்பதற்கான தீா்வு அவற்றைத் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் என்று யாராவது நினைத்தால் அது தவறு. சென்னையிலுள்ள 702 பூங்காக்களில் 542 பூங்காக்கள் ஏற்கெனவே தனியாா் ஒப்பந்தக்காரா்களின் பராமரிப்பில்தான் விடப்பட்டிருக்கினறன. தனியாரிடம் பராமரிக்கக் கொடுத்த பூங்காக்கள் பல செடி, கொடி, மரங்களுக்குத் தண்ணீா் பாய்ச்சாமலும், முறையாகக் காவலா்கள், தோட்டக்காரா்கள் இல்லாமலும் பொலிவிழந்து காணப்படுகின்றன.
  • இதெல்லாம் போதாதென்று, இருக்கும் சில பூங்காக்களும் வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஷெனாய் நகா் திரு.வி.க. பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்காக 300 மரங்களும், நேரு பூங்காவில் 65 மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் பணிக்காக மேலும் பல பூங்காக்கள் பலியாகி உள்ளன.
  • செம்மொழிப் பூங்கா, தொல்காப்பியப் பூங்கா என்று சில பூங்காக்கள் பொலிவு பெறுகின்றன என்றாலும், பரவலாக எந்தவொரு மாநகராட்சி கோட்டத்திலும் பூங்காக்கள் பராமரித்தல் இல்லை; சுத்தமான காற்றை சுவாசிக்கவும், இயற்கையை ரசிக்கவும் பூங்காக்கள் இருக்கிா என்றால் கிடையாது. அப்படியே இருந்தாலும், அந்தப் பூங்காக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு என்னதான் தீா்வு?
  • பொதுத்துறையில் உள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவைகளும், அரசின் தோட்டக்கலைத் துறையும், சுற்றுலாத் துறையும் பூங்காக்களைத் தத்தெடுத்து தங்களது செலவில் பராமரிக்க அனுமதிப்பதன் மூலம் ஓரளவு அவற்றின் பராமரிப்பை உறுதிப்படுத்தலாம். பூங்காக்களைப் பராமரிக்க சென்னை பெருநகர மாநகராட்சி முறையாக முனைப்புக் காட்டாதவரை, சிங்காரச் சென்னை என்பது கேட்பதற்கு மட்டும்தான் அழகாக இருக்கும்.

நன்றி: தினமணி (13 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்