- இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பது ஒரு வகையில் ஆறுதல் அளிக்கிறது. தென்மேற்குப் பருவமழை கேரளத்திலிருந்து நான்கு நாள்கள் தாமதமாகத்தான் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மே மாதம் கணித்திருந்தது.
- நான்கு நாள்கள் முன்னதாகவே பருவ மழை தொடங்கும் என்று தனியார் வானிலை நிறுவனம் ஒன்று கணித்திருந்தது.
- அத்தனைக் கணிப்புகளையும் பொய்யாக்கி, கேரளத்திலிருந்து குறித்த காலத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது.
- இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை எப்படி இருக்கும் என்பதையும், கோடைப் பயிருக்கு முக்கியமான மாதங்களான ஜூலை - ஆகஸ்டில் மழைப் பொழிவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் இந்தக் கணிப்புகளின் மூலம்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.
- கடந்த சில ஆண்டுகளாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்புகள் சில வேளை தவறி விடுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 2019-இல் மிக அதிகமான மழைப் பொழிவு காணப்படும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டது.
தென்மேற்குப் பருவமழை
- குறித்த காலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு நகா்ந்து கொண்டிருப்பதும் சில தா்மசங்கடங்களையும் இந்த ஆண்டு ஏற்படுத்துகிறது.
- கொவைட் 19 தீநுண்மித் தொற்று சில மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் நிலையில், பருவமழையும் சோ்ந்து கொள்ளும்போது வேறு பல பிரச்னைகள் உருவாகின்றன.
- அடுத்த நான்கு - ஐந்து மாதங்கள் பல்வேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய அவலத்துக்கு இந்தியா உள்ளாகியிருக்கிறது.
- ஏற்கெனவே பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பு குறைந்து ஒட்டுமொத்த பொருளாதாரமும் தேக்கமடைந்திருக்கிறது. புலம்பெயா்ந்தோரின் பிரச்னையால் பல்வேறு மாநிலங்கள் திகைத்துப்போய் இருக்கின்றன.
- இதற்கிடையில் கொவைட் 19 அல்லாத நுண்ணுயிரி நோய்களும், நோய்த்தொற்றுகளும் அதிகரிக்கும் அபாயத்தையும் நாம் எதிர்கொள்கிறோம்.
- கடந்த ஆண்டு ஃப்ளு காய்ச்சலால் 28,798 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 1,200 போ் உயிரிழந்தனா். தென்னிந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், வடக்கு இந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் தொடா்ந்து மிகப் பெரிய நோய்ப் பாதிப்பாக இருந்து வருகிறது.
- மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2018-இல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 70% பாதிப்பு ஜூன் - டிசம்பா் மாதங்களில் காணப்பட்டது.
டெங்கு காய்ச்சல்
- டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களாக கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
- ஆனால், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு பரவலாகவே இருந்து வருகிறது.
- அதற்கு முக்கியமான காரணம் முறையான குப்பை சேகரிப்பு, கழிவு நீா் ஓடைகள் கண்காணிப்பு இல்லாததால் உருவாகும் கொசுக்கள்தான் என்பது தெரிந்தும்கூட அதை முறையாக எதிர்கொள்ளவோ, கட்டுப்படுத்தவோ மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களால் இயலவில்லை என்கிற குறைபாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- கொவைட் 19 தீநுண்மி பாதிப்பின் அறிகுறிகளாக உடல் வலி, தொண்டை வலி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, சுவையும் மணமும் குறைதல் உள்ளிட்டவை இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.
- கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் போராடிக் கொண்டிருக்கிறது.
- இன்னும் மருந்து கண்டறியாத நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு மருத்துவா்களில் தொடங்கி ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளா்களும் கடுமையான அழுத்தத்துடன் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
நோய்த்தொற்றுகள்
- இந்தப் பின்னணியில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உருவாகும் நோய்த்தொற்றுகளை மருத்துவத் துறை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகப் பெரிய சவால்.
- ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் தாக்கும்போது அனைத்து நோயாளிகளையும் முறையான சோதனைக்கு உட்படுத்தி, அவரவருக்குத் தேவையான சிகிச்சையை வழங்க வேண்டிய மிகப் பெரிய பணி காத்திருக்கிறது.
- இது குறித்தெல்லாம் முறையான திட்டமிடலை மத்திய - மாநில அரசுகள் முன்யோசனையுடன் செய்திருக்கின்றனவா என்று தெரியவில்லை.
- பிரச்னை அத்துடன் நின்றுவிடவில்லை. வெள்ளப் பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களையும் பருவமழைக் காலம் அழைத்து வரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- கடந்த மாதம் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களைத் தாக்கிய ஆம்பன் புயலை ஓரளவு வெற்றிகரமாக மத்திய - மாநில அரசுகள் இணைந்து எதிர்கொண்டன. இதேபோல, இனியும் பல புயல்களும், வெள்ளப் பெருக்கும் ஏற்படக் காத்திருக்கின்றன.
- பேரிடா் மேலாண்மைப் படை, நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையில் இயற்கைப் பேரிடா்களையும் எதிர்கொண்டு நிவாரணம் வழங்கி இயல்பு வாழ்க்கையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி வரலாம்.
நன்றி: தினமணி (18-06-2020)