TNPSC Thervupettagam

எண்டோசல்ஃபான் துயரம்: வேளாண் துறைக்கு ஒரு நிரந்தரப் படிப்பினை

April 1 , 2022 858 days 465 0
  • கேரளத்தின் காசர்கோடு பகுதியில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட 3,714 பேருக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 6,727 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 1,442 பேருக்கு ஏற்கெனவே தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது.
  • மேலும் 1,568 பேருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் பட்டியலில் எஞ்சியுள்ளவர்களைச் சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேரில் விசாரித்து, இழப்பீடு பெறுவதற்கான தகுதியை முடிவு செய்வார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வாயிலாக உடனடியாக இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக, எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையாய் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு இந்நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களை வகைபிரிப்பது குறித்தும் அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் இன்னும் முழுமையாகச் சென்றுசேராதது குறித்தும் அதிருப்தியும் நிலவுகிறது.
  • ‘மற்றையோர்’ எனக் குறிப்பிடப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாலேயே அரசு தற்போது அதை வழங்க முன்வந்துள்ளது.
  • ஏற்கெனவே அரசு பாதிக்கப்பட்டவர்களைக் குறித்த விவரங்களைச் சேகரித்துவிட்ட நிலையில், இழப்பீடு வழங்குவதற்கான அவர்களது தகுதியை மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் கேள்விகளை முன்வைக்கின்றன.
  • இந்த விவாதங்கள், எண்டோசல்ஃபான் பயன்பாட்டால் கேரளத்தில் நடந்த பெருந்துயரத்தை நினைவுபடுத்துகின்றன.
  • காசர்கோடு பகுதியில் முந்திரித் தோட்டங்களில் எண்பதுகள் தொடங்கி பயன்படுத்தப் பட்டு வந்த இந்தப் பூச்சிக்கொல்லியால் அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் விலங்குகளும் சருமப் பிரச்சினைகள், நரம்பியல் பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவந்தனர்.
  • 2001-ல் அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய், உடலமைப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது உள்ளிட்ட கடும் பாதிப்புகளுக்கு எண்டோசல்ஃபானே காரணம் எனக் கண்டறியப்பட்டு, அதன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
  • பழத் தோட்டங்கள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றிலும் இந்தப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், தடை விதிக்கப்பட்டாலும் சட்ட விரோதமான முறையில் அதைப் பயன்படுத்துவது தொடரவே செய்தது. கேரளத்தில் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும்கூட இந்தப் பூச்சிக்கொல்லி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது.
  • வேதிப்பொருட்களைத் தவிர்த்த வேளாண்மை வாய்ப்புகள் குறித்து தீவிரமாக இன்று விவாதிக்கப்பட்டாலும், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் வேதியுரங்களின் பயன்பாடு தவிர்க்கவியலாததாகத் தொடர்கிறது.
  • இவ்வேதிப்பொருட்கள் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலக்கின்றன. தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் விவசாயத்துக்காகப் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தே குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.
  • இப்பகுதிகளின் நீராதாரங்களில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகள் குறித்தும் அங்கு வசிப்பவர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். எண்டோசல்ஃபான் பெருந்துயரம் வேளாண், சுகாதாரத் துறைகளுக்கு ஒரு நிரந்தரமான படிப்பினை.

நன்றி: தி இந்து (01 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்