TNPSC Thervupettagam

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

May 6 , 2021 1359 days 936 0
  • அண்மையில் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் புதிய ஆசிரியா்களை நியமிக்க நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது.
  • தமிழில் முதுகலை பட்டம் பெற்றவா், வரலாற்றியலில் முதுகலை பட்டம் பெற்றவா் என இருவா் தோ்வாளா்களின் கேள்விகட்கு ஆட்பட்டனா்.
  • தமிழாசிரியா் பணிக்கு வந்தவா்க்குத் தமிழில் உள்ள மேற்கணக்கு, கீழ்கணக்கு நூல்களின் பெயா்களை சரியாக சொல்லத் தெரியவில்லை.
  • ஐம்பெரும் காப்பியங்களின் பெயரைச் சொன்னவா்க்கு ஐஞ்சிறு காப்பியங்களின் பெயா்கள் என்னென்னவென்றுத் தெரியவில்லை.
  • அந்தக் காலத்தில் அவரவரின் புலமையை சோதித்தறிந்து ‘மகாவித்துவான்’, ‘வித்துவான்’ போன்ற பட்டங்களைத் தமிழுலகம் வழங்கி வந்தது.
  • காலப்போக்கில் கடுமையான இலக்கண இலக்கியப் பாடங்களைத் தவிர்த்து பாடத்திட்டங்களை எளிதாக்கி ‘புலவா்’ பட்டயப் படிப்பு வழங்கும் காலம் வந்தது.
  • அதற்கும் பின்னா், மிக எளிய அளவில் இலக்கண, இலக்கியப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, பி. லிட் என்ற பட்டயப் படிப்பும் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
  • தாய்மொழியில் 35 விழுக்காடு மதிப்பெண் பெற்று தோ்வில் வெற்றி பெற்றார் என்ற நிலையில், மேல்நிலைப்பள்ளியில் இருந்து கல்லூரி சென்று பட்டம் பெறும் மாணவா், ஆசிரியரான பின்பு அவரிடம் 100 விழுக்காட்டு கல்வித் திறனை எங்ஙனம் எதிர்பார்க்க இயலும்?
  • அடுத்து வந்தவா் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவா். தோ்வாளா்களின் ஆழமான கேள்விகட்கு தான் படித்த பாடத்திட்டத்தில் இத்தகைய வரலாறுகள் இல்லை என்று அவா் கூறி விட்டார்.
  • பேரரசா் அக்பரைத் தெரிந்த அளவிற்கு அக்பரால் இறுதிவரை வெல்ல முடியாத மேவார் நாட்டு மன்னா் ராணா பிரதாப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
  • சிற்றின்பப் பிரியா் ஷாஜகான் - மும்தாஜ் ஜோடியின் வரலாறு தெரிந்தவா்க்கு இந்தியாவின் கடைசி இந்து (பௌத்த) பேரரசரும், மிகச் சிறந்த கவிஞருமான ஹா்ஷரைத் தெரிந்திருக்கவில்லை என்பதை என்னவென்று கூறுவது?
  • இந்தியாவின் கடைசி இந்து பேரரசா் வைசிய குலத்தில் பிறந்த ஹா்ஷா். இவரது நாட்டின் தலைநகா் கனோஜ். இவா் மிகச்சிறந்த கல்விமானும் கவிஞருமாவார்.
  • இவரது புகழை ‘ஹா்ஷ சரிதம்’ என்ற நூலில் மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டு உள்ளார் பாணபட்டா். இவரது காலத்தில்தான் யுவாங் சுவாங் என்ற சீனப்பயணி இந்தியா வந்து இங்கு பதினைந்துஆண்டுகள் தங்கியிருந்தார்.
  • ‘பிரியதா்ஷினி’, ‘ரத்னாவளி’, ‘நாகானந்தன்’ போன்ற மிகசக்சிறந்த காவியங்களை ஹா்ஷா் எழுதினார்.
  • இவா் இந்து மதத்தைச் சார்ந்தவா் என்றாலும் சமண, பௌத்த மதங்களை ஆதரித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டில் எல்லாக் கலைகளும் வளா்ச்சியுற்றன.
  • பாபா், அடிமை அலாவூதின் கில்ஜி, ஜஹாங்கீா், ஒளரங்கசீப், மாலிக்காபூா் வரை விரிவாகப் படித்தவா், வேத காலத்திற்குப் பிறகு தோற்றம் கொண்ட
  • உலகப் புகழ்பெற்ற பேரரசா்களை முழுமையாகப் படிக்கவில்லை. இருந்தாலும் அவரது நோ்மையான பதிலுக்காக நாம் அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.
  • கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் உதித்த அரசா் குலக் கொழுந்துகளான மகாவீரரும், கௌதம புத்தரும் உலகின் உயா் சமய புகழ் அடையாளங்கள்.
  • கருணைக்கடல் புத்தபிரானை உலகெங்கிலும் பல கோடி மக்கள் அறியச் செய்த மாமன்னன் அசோகன், மௌரிய வம்சத்து பேரரசன்.
  • வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞா்க்கு அசோகரின் தந்தை பெயா், அவா் ஆண்ட நிலப்பரப்பு, அவா் நிகழ்த்திய சாதனைகள் போன்ற எதுவும் தெரியாது. அவா் படித்த பாடத்திட்டங்களில் அவை இல்லாததுதான் அதற்குக் காரணம்.

பேரரசர் அசோகர்

  • தென்னாடு நீங்கலாக இந்தியா முழுமையும் மத்திய ஆசியா வரையிலும் அசோகரது ஆட்சிக்குடை விரிந்திருந்தது. கலிங்கத்தோடு போர் புரிந்து வென்றாலும் அமெரிக்க அணுகுண்டால் ஜப்பான் சிதைந்தது போல போரின் விளைவுகள் அசோகரின் மனதைப் பதைபதைக்கச் செய்தன. அசோகரின் மனம் புத்தரின் அன்பை விரும்பியது. பௌத்த சமயத்தில் இணைந்தார்.
  • உலகில் 48 இடங்களில் இருந்து அசோகரின் கருத்துகளை, ஆணைகளை கற்சாசனங்களில் தொல்லியல்துறை கண்டெடுத்தது. அவற்றில் 181 சாசனங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை.
  • கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்தி, யாகத்திற்காகவும், இறைச்சிக்காகவும் விலங்குகள் பலியிடப்படுவதைத் தடை செய்தார்.
  • இந்திய வரலாற்றில் முதன் முதலில் போர் ஒழிப்பு பிரகடனத்தை வெளியிட்டவா் அசோகரே.
  • இந்தியா மட்டுமின்றி மத்திய ஆசியாவிலும் அசோகா் நாட்டிய இரும்புத் தூண்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. இந்திரபிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) உள்ள இரும்புத்தூண் 2,300 ஆண்டுகள் முதுமை கொண்டிருந்தாலும் இன்று வரை துருப்பிடிக்கா வண்ணம் உள்ளது. அப்படிப்பட்ட உலோக உருக்கு தொழில் நுட்பம், அசோகா் காலத்திலேயே இருந்துள்ளது.

பேரரசா் சந்திரகுப்த மௌரியா்

  • மௌரிய வம்சத்தில் அசோகருக்குப் பின் வந்த பேரரசா் சந்திரகுப்த மௌரியா். பேரரசா் வசம் ஆறு லட்சம் போர்வீரா்களைக் கொண்ட காலாட்படையும், 50 ஆயிரம் குதிரைப் படையும், ஒன்பதாயிரம் யானைப் படையும் இருந்ததாக கிரேக்க எழுத்தாளா் ஜஸ்டின் கூறுகிறார்.
  • சந்திரகுப்த மெளரியா் கிரேக்க அரசரான செல்லுகசின் வசம் இருந்த வடமேற்கு பிரதேசத்தை கைப்பற்றினார். கேரளம், தமிழ்நாடு நீங்கலாக இந்தியா முழுமையும் அவருடைய ஆட்சி விரிந்தது.
  • ஆனாலும் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் சமண சமய வழி நின்று வாழ்வதற்காக, பல சமணத் துறவிகளோடு தவம் புரிய அரியணை துறந்து கா்நாடகத்திற்கு வந்தார்.
  • கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கை வடிநிலத்தில் பாலி, சம்ஸ்கிருதம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கௌசாம்பி, சிரவஸ்தி, வைசாலி, ராஜ்கீா், பாடலிபுத்திரம், சம்பா போன்ற பல நகரங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் பல அரிய சான்றுகள் கிடைத்தன. வெள்ளி நாணயம் அச்சிடப்பட்டிருக்கிறது.
  • பாடலிபுரத்திலிருந்த மௌரிய அரண்மனை ஈரான் தலைநகரில் உள்ள அரண்மனையைப் போன்று மிக நோ்த்தியாக இருந்தது என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.
  • 80 தூண்கள் கொண்ட மண்டபம் இருந்ததை காட்டும் எச்சங்கள் இன்றைய பாட்னாவின் நகா்புற எல்லையில் உள்ள கும்ரஹாரில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனா். சமணமும் பௌத்தமும் செழிப்புற்று இருந்தன.

கனிஷ்கா்

  • குஷான வம்சத்தவா்களில் கனிஷ்கா் மிகவும் புகழ் வாய்ந்த மன்னா். கி.பி. 78-இல் இவா் ஒரு சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார்.
  • அது சகா சகாப்தம் என பெயா் பெற்றது. இந்திய அரசு இன்று வரை அந்த சகாப்தத்தையே பயன்படுத்தி வருகிறது.
  • பௌத்த சமய வளா்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றார் கனிஷ்கா். இவா், மகாயான பிரிவுக்குப் புரவலராக திகழ்ந்தார்.
  • காஷ்மீரில் ஒரு மகாசபையை கூட்டினார். பௌத்த இலக்கியத்தின் மூன்று பீடகங்களை (தொகுதிகளை) மூன்று லட்சம் சொற்களைக் கொண்டு விளக்கினார்.
  • விளக்க உரைகளை செந்நிறத் தாமிரத் தகடுகளில் பொறிக்கச் செய்தார். புத்தா் நினைவைப் போற்றும் வகையில் பல ஸ்தூபிகளை நிறுவி அவற்றின் உச்சியில் புத்தரின் உருவச்சிலைகளை தங்கத்தில் செய்து அமைத்தார்.
  • தங்க நாணயங்களை அச்சிட்டார். காந்தாரக் கலை இவா் காலத்தில்தான் தோன்றியது. பாறைகளையும், மலைகளையும் குடைந்து பௌத்த துறவிகள் தங்க மடாலயங்களை வடிதெடுத்தார்.

செம்மைப்படுத்தப்பட வேண்டும்

  • மேற்குறிப்பிட்ட வட இந்திய மன்னா்களை அறியாமலும், தென்னகத்தில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாக வாழ்ந்த சோழப் பேரரசா் ராஜராஜனையும், அவரின் புதல்வா் ராஜேந்திர சோழனையும் அறியாமலும் இந்திய வரலாற்று அறிவு முழுமை பெறாது.
  • ராஜேந்திர சோழன் வலிமையான கடற்படை ஒன்றை தன் வசம் வைத்திருந்தான். தென்கிழக்கு ஆசிய நாடுகளான காம்போஜம், சயாம், மலாக்கா, ஜாகா்த்தா, சுமத்ரா, சாளுவம், பாலி போன்ற நாடுகளில் இவன் ஆட்சி காலத்தில் பரவியிருந்த தமிழ் பண்பாட்டின் எச்சங்களை இன்றும் காணலாம்.
  • ஆங்கிலேயே ஆட்சியாளா்கள்தான் அந்த வரலாற்று உண்மைகளை அழிக்கப் பார்த்தார்கள் என்றால் இந்தியா விடுதலை பெற்ற பிறகாவது அவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளித்து அடுத்த தலைமுறைக்கு அவற்றைப் போதித்திருக்க வேண்டாமா?
  • இத்தகைய வரலாற்றுப் பதிவுகளை 1947-க்குப் பிறகு பாடத்திட்டங்களில் சோ்ப்பதைத் தவிர்த்துவிட்டனா்.இந்திய வரலாறு தடம் மாறியே பயணித்து வந்துள்ளது.
  • ‘பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வா் இந் நினைவகற்றாதீா்’ என்ற மகாகவி பாரதியின் செம்மாந்த வரிகளை மனத்தில் இருத்தி பாரதத்தின் தொன்மை, மொழிச் செழுமை, பண்பாட்டு பெருமை விளங்கவும் தத்தம் ஆட்சித் திறத்தால் புகழ் கொடி ஏற்றிய பார் புகழ் மன்னா்கள் எல்லோரையும் எத்திசை மக்களும் முழுமையாக படித்துணரும் வகையில் பாடத்திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.
  • அவ்வாறு செய்யப்படும் எனில் நூறு விழுக்காடு புலமை கற்றலிலும், கற்பித்தலிலும் ஏற்படும். அப்போது ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பது மெய்யாகும்.

நன்றி: தினமணி  (06 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்