- சமையல் எண்ணெய் உற்பத்தியில் சுயசார்பை எட்டுவதற்காக ரூ.11,040 கோடி மதிப்பிலான ‘தேசிய சமையல் எண்ணெய்த் திட்டம்-பனை எண்ணெய்’ என்ற திட்டத்தைப் பிரதமர் ஆகஸ்ட் 9, 2021 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
- சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துவருவது அரசுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதும், தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் ஆண்டுக்கு ரூ.60,000 கோடி முதல் ரூ.70,000 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணியைச் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இழக்க அரசு விரும்பாததும்தான் இதற்குக் காரணம்.
- புதிய திட்டத்தின் கீழ், பனை எண்ணெய்ப் பயிரின் பரப்பளவை அதிகரித்து, வரும் 2025-26 ஆண்டில் 10 லட்சம் ஹெக்டேர் என்ற இலக்கை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.
- நமது சமையல் எண்ணெய்ப் பிரச்சினைகளைத் தீர்க்க இத்திட்டம் உதவுமா? எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கப் பனை எண்ணெய் அல்லாத மாற்று வழிகள் உள்ளனவா?
திகைப்பூட்டும் போக்குகள்
- பசுமைப் புரட்சியின் மிகப் பெரிய தோல்விகளில் எண்ணெய் வித்துப் பயிர்களும் அடங்கும். நிலக்கடலை, கடுகு, எள், சோயாபீன், சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயிரிடப்பட்டுவருகின்றன.
- எண்ணெய் வித்துக்களின் மொத்தப் பரப்பளவு பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதிகரித்திருந்தாலும், அது 1990-91-க்குப் பிறகு கிட்டத்தட்ட தேங்கிவிட்டது. 1990-93-ல் மொத்த எண்ணெய் வித்துக்களின் சராசரிப் பரப்பளவு 25.09 மில்லியன் ஹெக்டேர்கள் (மிஹெ), இது 2017-20-ல் கிட்டத்தட்ட அதே (25.45 மிஹெ) நிலையில் உள்ளது.
- முக்கிய பயிர்களில், சோயாபீன் மட்டுமே பரப்பளவில் 3.18 மிஹெ-லிருந்து 11.18 மிஹெ ஆக அதிகரித்துள்ளது.
- நெல், கோதுமைப் பயிர்களின் மகசூலில் ஏற்பட்ட பெரிய வளர்ச்சி, எண்ணெய் வித்துப் பயிர்களில் அடைய முடியவில்லை.
- எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த 1986-ல் தொடங்கப்பட்ட ‘எண்ணெய் வித்துகளுக்கான தொழில்நுட்பத் திட்டம்’ என்ற திட்டமும், மகசூலை அதிகரிக்கப் பெரிய அளவில் உதவவில்லை.
தோல்விக்கான காரணங்கள்
- பசுமைப் புரட்சிப் பயிர் முறையைக் கணிசமாக மாற்றியமைத்து, லாபமுள்ள பயிரைத் தேர்ந்தெடுத்து விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு வழிவகைசெய்து கொடுத்தது.
- 1964-65 மற்றும் 2019-20க்கு இடையில், நெல் மற்றும் கோதுமை அல்லாத உணவுப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு பல காரணங்களால், 44.35 மிஹெ-லிருந்து 24.02 மிஹெ ஆகக் குறைந்துவிட்டது.
- இந்த உணவு தானியப் பயிர்கள் பெரும்பாலும் எண்ணெய் வித்துப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மானாவாரி நிலத்தில் பயிரிடப்படுகின்றன.
- விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஏன் முன்வரவில்லை? இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு அச்சமயத்தில் கவர்ச்சிகரமான ‘குறைந்தபட்ச ஆதரவு விலைகள்’ (எம்.எஸ்.பி.) அறிவிக்கப்படவில்லை.
- இரண்டு, இப்பயிர்கள் அரசு நிறுவனங்களால் குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகளை ஈர்க்கவில்லை.
- 1990-91 முதல் இப்பயிர்களுக்கு எம்.எஸ்.பி.யை அதிகரிக்க அரசு தொடங்கியது. 1990-91 மற்றும் 2020-21க்கும் இடையில், இப்பயிர்களுக்கான எம்.எஸ்.பி. 8 முதல் 10 மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
- நிலக்கடலைக்கான ஒரு குவிண்டால் எம்.எஸ்.பி. ரூ.580-லிருந்து ரூ.5,275 ஆகவும், சூரியகாந்தி பயிருக்கு ரூ.600-லிருந்து ரூ.5,885 ஆகவும், சோயாபீன் விலை ரூ.350-லிருந்து ரூ.3,880 ஆகவும், கடுகின் விலை ரூ.600-லிருந்து ரூ.4,650 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இன்னும் சொல்லப்போனால், இந்த அளவு எம்.எஸ்.பி. அதிகரிப்பு நெல், கோதுமைக்குக்கூட அறிவிக்கப்படவில்லை.
- எம்.எஸ்.பி. உயர்த்தி அறிவிக்கப்பட்ட பிறகும் ஏன் விவசாயிகளை இது ஈர்க்கவில்லை என்ற கேள்வி எழலாம்? இதற்கு முதல் காரணம், குறைவான கொள்முதல்.
- எண்ணெய் வித்துக்களுக்கு அதிக எம்.எஸ்.பி. அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பயிர்களின் சந்தை விலைகள் எம்.எஸ்.பி.க்கும் கீழே நிலவுவதால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகள் ஆதரவு விலையைப் பெற முடியவில்லை.
- உதாரணமாக, 2020-21 ஆண்டுக்கான வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் விலைக் கொள்கை அறிக்கையின்படி, அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், 80-93% நாட்களில் குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலக்கடலையின் சந்தை விலை எம்.எஸ்.பி.யைவிட மிகவும் குறைவாக நிலவியதாகக் கூறப்பட்டுள்ளது. இதே நிலைமை மற்ற பயிர்களிலும் நிலவுவதாகப் பதிவாகியுள்ளது.
நடவடிக்கைகள்
- சந்தை விலை எம்.எஸ்.பி.யைவிடக் குறைவதற்கு முக்கியக் காரணம், அரசால் செய்யப்படும் குறைவான கொள்முதல்.
- வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் கரீப் 2020-21 அறிக்கையின்படி, 2018-19ம் ஆண்டில் சுமார் 7.2 லட்சம் டன் நிலக்கடலையும், 19.5 ஆயிரம் டன் சோயாபீன் மட்டுமே அரசு நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன.
- அதாவது, இந்த இரண்டு பயிர்களின் மொத்த உற்பத்தியில் முறையே 8.70% மற்றும் 0.1% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- இது என்ன சொல்கிறது? விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிர்களை எம்.எஸ்.பி.க்கும் கீழே தனியார் சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கொள்முதல் முறை விவசாயிகளை எப்படி ஈர்க்கும்?
- பனை எண்ணெய்த் திட்டம் எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்றாலும், நம் நாட்டுக்குச் சொந்தமற்ற ஒரு பயிரை ஊக்குவிக்க இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? மேலும், பனை எண்ணெய்ப் பயிரின் அறுவடைக் காலம் அதிகமாக இருப்பதால், குறு மற்றும் சிறு விவசாயிகளை அதிகம் கொண்டுள்ள நாட்டில் இத்திட்டம் இவர்களுக்கு நன்மை பயக்கும?
- நமது பாரம்பரிய எண்ணெய் வித்துப் பயிர்கள் அதிக ஊட்டச்சத்துக்களும் மருத்துவக் குணங்களும் கொண்டவை.
- கொள்முதல் வசதி மற்றும் உரிய விலை கிடைக்காமல் பல ஆண்டுகளாக எண்ணெய் வித்துப் பயிரிடும் விவசாயிகள் போராடுகின்றனர்.
- எனவே, மொத்த எண்ணெய் வித்து உற்பத்தியில் ஆதார விலையுடன் குறைந்தபட்சம் 20-30% வரை கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தால், குறுகிய காலத்தில் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 - 09 - 2021)