TNPSC Thervupettagam

எதிரி நம்மைப் பாராட்டினால்...

July 12 , 2024 184 days 304 0
  • "உலகப் பிரச்னைகள் அனைத்துக்குமான தீர்வு இந்தியாவில் உள்ளது' என்று பிரதமர் மோடி கூறினால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால், இதுபோன்ற கருத்தை சீன அதிபர் கூறினால், வியக்காமல் இருக்க முடியாது. இப்படியோரு வியப்பை ஏற்படுத்தும் உரையை அண்மையில் நிகழ்த்தினார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
  • கடந்த மாத இறுதியில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பஞ்சசீலக் கொள்கையின் 70-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும், சீன பிரதமராக இருந்த சூ என்லாய்க்கும் இடையே 1954-ஆம் ஆண்டு ஏற்பட்டு, அடுத்த ஆண்டு பல்வேறு ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்ற பாண்டூங் மாநாட்டில் ஏற்கப்பட்ட பஞ்சசீலக் கொள்கையை மேற்கோள்காட்டி சீன அதிபர் பேசினார். இப்போது உலகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பஞ்சசீலக் கொள்கை தீர்வாக அமையும் என்றார்.
  • நேரு கட்டமைத்த சிறப்புமிக்க வெளியுறவுக் கொள்கையை முதலில் ஏற்றுக் கொண்ட இந்தியாவும் சீனாவும் இப்போது இணக்கமற்ற நாடுகள் என்பதே உண்மை.
  • பிற நாடுகளுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்ற நேருவின் தொலைநோக்குப் பார்வையில் அமைந்தது தான் பஞ்சசீலக் கொள்கை.
  • அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும். எந்த நாடும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது. பலம்வாய்ந்த நாடுகள் பலம் குறைந்த நாடுகளை துன்புறுத்தக் கூடாது. அனைத்து நாடுகளும் சமாதான நலவாழ்வு வாழ வேண்டும். தேவையான அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவ வேண்டும் என்பவைதான் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படை.
  • இதைவிட சிறப்பான வெளியுறவுக் கொள்கை இருக்க முடியாது. இதனை ஏற்றதாகக் கூறிய சீனா, 1962-ஆம் ஆண்டிலேயே அதனைக் காற்றில் பறக்கவிட்டு, நம் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்தது. இதன் மூலம் இருநாட்டு உறவு சீர்கெட்டது. இன்று வரை உலகின் மிகவும் சிக்கலான எல்லைப் பிரச்னையாக நீடிக்கிறது.
  • இந்த விஷயத்தில் சீன தரப்பு கூறும் நியாயம் வேறு மாதிரியானது. சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்கியபோது தப்பி வந்த தலாய் லாமா உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததன் மூலம் இந்தியா பஞ்சசீலக் கொள்கையை முதலில் மீறியது என்பதே அந்தக் குற்றச்சாட்டு. ஆனால் திபெத்தின் இறையாண்மையை மீறி சீனா பலவந்தமாக அதனைக் கைப்பற்றியது என்பதே உண்மை.
  • பல ராணுவ வீரர்களின் உயிர், மிகப்பெரிய அளவிலான எல்லை நிலப்பரப்பு என பெரும் விலையைக் கொடுத்து வெளியுறவுக் கொள்கையில் பாடத்தைக் கற்றுக் கொண்டது இந்தியா. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில், முக்கியமாக அண்டை நாடுகள் விஷயத்தில், நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும்போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே சீனா இந்தியாவுக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
  • தனது உரையில் சீனாவின் எதிர்கால நோக்கங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசினார் ஷி ஜின்பிங்.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சீனாவுக்கு நல்ல நட்புறவு இல்லை. ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவை தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடாகவே அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் பார்க்கின்றன.
  • எனவே, தனக்கென மிகப்பெரிய நட்பு நாடுகள் கூட்டமைப்பை "குளோபல் செüத்' என்ற பெயரில் உருவாக்கும் முயற்சியில் உள்ளது சீனா. இதன் மூலம் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளை ஒருங்கிணைத்து தனக்கு ஆதரவான கூட்டமைப்பை உருவாக்க சீனா உத்தேசித்துள்ளது.
  • "குளோபல் செüத்' ஆய்வு மையம் அமைப்பது, "குளோபல் செüத்' இளம் தலைவர்கள் திட்டம், "குளோபல் செüத்' நாடுகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர்களை சீனாவுக்கு அழைத்து வந்து பயிற்சி அளிப்பது, கல்வி நிதியுதவி அளிப்பது என பல அறிவிப்புகளை பஞ்சசீலக் கொள்கை ஆண்டு விழாவில் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
  • இந்த கூட்டமைப்பில் மிகப்பெரிய அண்டை நாடான இந்தியாவை இணைக்கும் எண்ணம் சீனாவுக்கு எழ வாய்ப்பில்லை. ஏனெனில், கூட்டமைப்பை தனக்கு எதிரான நாடுகளுக்கு (இந்தியா உள்பட) எதிராகப் பயன்படுத்திக் கொள்வதே சீனாவின் மறைமுகத் திட்டம். கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பிரச்னைக்குப் பிறகு சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றபோது உடனடியாக கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், 2024 தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் தவிர்த்தார். சீன பிரதமர், வெளியுறவு அமைச்சகம் சார்பில் மட்டுமே வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
  • வளரும், வளர்ச்சி குறைந்த நாடுகளை தனது ஆதரவாளர்களாக மாற்ற நேருவின் பஞ்சசீலக் கொள்கையை முன்வைத்து அரவணைப்பாக கரங்களை நீட்டியுள்ளார் ஷி ஜின்பிங். அதில் எத்தனை நாடுகள் அகப்படும் என்பது தெரியவில்லை.
  • இந்தியாவைப் போலவே நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது சீனா. சன் யாட்-சன், மா சே துங் என பல இடதுசாரி சிந்தனைத் தலைவர்கள் தோன்றிய நாடு. எனினும், பிற நாடுகளை அரவணைப்பதில் நேருவின் கொள்கையை முன்வைத்துதான் சீன அதிபர் பேச வேண்டியுள்ளது என்று எண்ணி நாம் பெருமைப்படலாம்.
  • மா சேதுங் கூறிய வாக்கியம் ஒன்றும் நினைவுக்கு வந்துபோகிறது. "எதிரி நம்மை குற்றஞ்சாட்டினால் நாம் சரியாக செயல்படுகிறோம் என்று அர்த்தம்; அதே நேரத்தில் எதிரி நம்மைப் பாராட்டினால் நாம் தவறு செய்துள்ளோம் என அர்த்தம்' என்பதுதான் அது!

நன்றி: தினமணி (12 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்