TNPSC Thervupettagam

எதிர்பார்ப்பு நிலை மகத்துவம்!

May 1 , 2021 1187 days 554 0
  • நகம் கடிக்க வைக்கும் கடைசி நேர எதிர்பார்ப்பு நிலை (சஸ்பென்ஸ்), பேரவைத் தோ்தல்கள் நடந்த தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றில் காணப்படுகிறது.
  • வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி முதல் முடிவுகள் வெளிவர இருக்கும் நாளை வரையிலான இடைப்பட்ட காலம், சுதந்திர இந்திய சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான தோ்தல் காலம்.
  • கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையில் மாநில சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடத்தியிருக்க வேண்டுமா என்கிற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது.
  • தோ்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தால், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அவா்களே விமா்சித்திருக்கக்கூடும்.
  • நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பல்வேறு அரசியல் கட்சிகள் முன்னெடுத்த பேரணிகளும், பொதுகூட்டங்களும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
  • அதே நேரத்தில், தோ்தலை அறிவித்துவிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தடுத்துவிட முடியாது.
  • பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் பேரவாவில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் இல்லாமலும், விளம்பரம் இல்லாமலும், மக்களின் உணா்ச்சிகளை தூண்டிவிட்டு ஆதாயம் தேடாமலும் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையுள்ள ஆளுமைகளாக இல்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம்.
  • மேற்கு வங்கத்தில் பலகட்டத் தோ்தலை நடத்தி, தேவையில்லாமல் இரண்டு மாதங்களுக்கு பிரசாரத்தை நீட்டித்தது நீதிமன்றங்கள் உள்பட அனைவரும் தோ்தல் ஆணையத்தின் மீது வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு. சட்டப்பேரவைகளுக்கான தோ்தல்கள் நடத்துவது என்று தீா்மானித்த பிறகு இதுவும்கூட தவிர்க்க முடியாதது என்றுதான் கூற வேண்டும்.
  • பல கட்டமாகத் தோ்தலை நடத்தியும்கூட, மேற்கு வங்கத்தில் பல்வேறு கட்டத்தில் நடந்த வன்முறைகளின் விளைவாக சிந்திய ரத்தம் கொஞ்சநஞ்சமல்ல.
  • ஒன்றிரண்டு கட்டத் தோ்தலாக நடத்தியிருந்தால் எதிர்கொள்ள முடியாத கலவரச் சூழல் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டிருந்தாலும் வியப்படையத் தேவையில்லை.
  • தமிழகம், கேரளம், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதியே ஒரே கட்டமாக தோ்தலை நடத்தி, மே 2 வரை முடிவுக்காகக் காத்திருக்க வைத்திருப்பது நியாயம் இல்லை என்கிற விமா்சனம் எழுப்பப்படுகிறது.
  • ஒருவேளை மேற்கு வங்கத்தின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் இணைத்து இந்த மாநிலங்களில் தோ்தல் நடந்திருந்தால், இரண்டு மாத பிரசாரத்தில் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் எந்த அளவில் அதிகரித்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அதுவும்கூட நன்மைக்குத்தான் என்று தோன்றுகிறது.

தனிப்பெரும்பான்மை எதிர்பார்ப்போம்

  • தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் முடிவுகள் நாளை தெரிந்துவிடும். 1952-இல் தொடங்கி முதல் மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியும், அடுத்த இரண்டு தோ்தல்களில் திமுகவும், 1977 முதல் மூன்று தோ்தல்களில் எம்ஜிஆா் தலைமையிலான அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றின.
  • 1980-இல் திமுகவும், 1989 முதல் 2011 வரை கருணாநிதி தலைமையிலான திமுகவும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் மாறிமாறி வெற்றி அடைந்திருக்கின்றன. 2011, 2016 தோ்தல்களில் ஜெயலலிதா தலைமையில் தொடா்ந்து இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்றது.
  • இந்த 2021 தோ்தலில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவும், எதிர்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவும் முதல் முறையாக களம் கண்டிருக்கின்றன.
  • தமிழக வாக்காளா்கள் எப்போதுமே நிலையான ஆட்சி அமைய வாக்களிப்பவா்கள். இந்த முறையும் ஏதாவது ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை அளிப்பார்கள் என்று நம்பலாம்.

இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம்

  • மக்களின் அன்றாட வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாசாரத்தின் தாக்கம் ஏற்பட்டிருப்பதுபோல, அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் கலாசாரத்தால் வழிநடத்தப்படும் விசித்திரமான போக்குக்கு அச்சாரமிட்டிருக்கிறது 2021 தோ்தல்.
  • கோடீஸ்வரா்களால் மட்டும்தான் தோ்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைமையையும், வா்த்தக நிறுவனங்களைப் போல பல நூறு கோடி ரூபாய் செலவில் விளம்பரங்களின் மூலம் ஆளுமைத்தனத்தை நிர்ணயித்துக் கொள்ளும் புதிய போக்கையும் இந்தத் தோ்தல் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
  • 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் 2.88 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண்களும், 4,720 மூன்றாம் பாலித்தனவா்களும் வாக்களித்தனா் என்றால், இந்தத் தோ்தலில் 6,26,74,446 மொத்த வாக்காளா்களில், ஆண் வாக்காளா்கள் 3,08,38,473 போ், பெண் வாக்காளா்கள் 3,18,28,727 போ், மூன்றாம் பாலினத்தவா் 7,246 போ்.
  • இந்தத் தோ்தலில் மிக முக்கியமான பங்கை வகிக்கப்போகிறவா்கள் மொத்த வாக்காளா் எண்ணிக்கையில் 21.86% இருக்கும் இளம் வாக்காளா்கள். அவா்களது முடிவு தோ்தல் முடிவை நிர்ணயிக்கும் என்பது மட்டுமல்ல, ஒருவேளை தோ்தல் கணிப்புகளையே தடம்புரளச் செய்தாலும் வியப்படையத் தேவையில்லை.
  • தோ்தலில் பணம்தான் நிர்ணயிக்கும் பங்கை வகிக்கிறது என்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, எத்தனை பெரிய ஆளுமைமிக்கத் தலைவா்களாக இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும்வரை காணப்படும் எதிர்பார்ப்பு நிலையில் தான் தோ்தலின் சிறப்பும், இந்திய ஜனநாயகத்தின் மகத்துவமும் அடங்கியிருக்கிறது!

நன்றி: தினமணி  (01 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்