TNPSC Thervupettagam

எதிர்பார்ப்பு பொய்க்கிறது!

June 29 , 2024 2 days 21 0
  • குடியரசுத் தலைவர் உரை பிரச்னை எதுவும் இன்றி நிகழ்ந்தபோது, 18-ஆவது மக்களவையில் அணுகுமுறை மாற்றம் ஏற்படக்கூடும் என்கிற மின்னல் கீற்று நம்பிக்கை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் வலிமை பெறும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. அவையெல்லாம் பொய்த்திருக்கின்றன
  • குடியரசுத் தலைவர் உரை, ஆளுநர் உரை நிகழும்போதும், அதைத் தொடர்ந்து அந்த உரைகள் மீது விவாதம் நடைபெறும்போதும் சில அடிப்படை மரபுகள் பின்பற்றப்படுவது வழக்கம். குடியரசுத் தலைவர், ஆளுநர் உரைகளின்போது வெளிநடப்பு செய்வது, கோஷமிடுவது, எதிர்ப்புத் தெரிவிப்பது போன்றவை நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தவறான செயல்பாடுகள். 18-ஆவது மக்களவையில் குடியரசுத் தலைவர் உரையின்போது எந்தவிதமான குறுக்கீடோ எதிர்ப்போ எழவில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெறாமல் தடைபட்டிருக்கிறது.
  • எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கியமான பிரச்னைகளை விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரும் உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு, வேறு பிரச்னைகளை விவாதிக்க இந்தியாவில் என்றில்லை, எந்தவொரு நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதில்லை. அதனால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது விவாதம் நடத்தப்பட இருப்பதால் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததில் தவறு காண முடியவில்லை.
  • குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதத்தின் மீது எதிர்க் கட்சிகள் எந்த விவகாரத்தை எழுப்பினாலும் அரசு தரப்பு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் நீட் தேர்வு குறித்த பிரச்னை குடியரசுத் தலைவர் உரையிலேயே இடம் பெற்றிருக்கும் நிலையில், அதுகுறித்து விவாதிக்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. அதை விடுத்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கும் முன்பே நீட் விவகாரத்தை விவாதிக்கக் கோரும் எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தை விதண்டாவாதம் என்றுதான் விமர்சிக்கத் தோன்றுகிறது.
  • எதிர்க்கட்சித் தலைவர் என்பதுதான் முதன்முதலாக ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டிருக்கும் அதிகாரப் பதவி. 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 18-ஆவது மக்களவையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்துக்கு உரியவராக ஒருவர் நியமனம் பெற்றிருக்கிறார். ராகுல் காந்திக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது. அவர் அரசியலில் களமிறங்கிய கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் காந்தி வகிக்கும் முதலாவது அரசியல் சாசனப் பதவியும் இதுதான்.
  • இதுவரையிலும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தலைமைப் பண்புடன் செயல்படும் அரசியல்வாதியாக தன்னை ராகுல் காந்தி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, பொறுப்புகளை சுமப்பதில் தயக்கம் காட்டுபவராகத்தான் அவர் தோற்றமளித்தார். இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மூலம் அந்தப் பதவிக்கே உரித்தான கௌரவத்துக்குத் தகுந்தவராகத் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • இதுவரையில் அமைந்த 18 மக்களவைகளில், 9 மக்களவைகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவிக்கு உரியவராக யாரும் இருக்கவில்லை. 1950-இல் அவைத் தலைவரின் வழிகாட்டுதல் படி, அவையின் மொத்த உறுப்பினர்களில் 10% உறுப்பினர்களுக்கும் அதிகமாக உறுப்பினர் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே ஒரு கட்சி எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறுகிறது. அதன் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.
  • மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுப்படி அவரை 'காத்திருப்பு பிரதமர்' என்று அழைப்பார்கள். ஆளும்கட்சி பெரும்பான்மை இழந்தால் மாற்று அரசு அமைக்க அவர்தான் அழைக்கப்படுவார். அது மட்டுமல்ல, 'வெஸ்ட்மின்ஸ்டர்' முறை எனப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வழக்கப்படி 'காத்திருப்பு பிரதமர்” தனது கட்சி உறுப்பினர்களை வைத்து 'நிழல் அமைச்சரவை' உருவாக்குவது வழக்கம்.
  • இந்தியாவில் அதுபோல 'நிழல் அமைச்சரவை' நாடாளுமன்றத் திலும், சட்டப்பேரவைகளிலும் அமைக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கான பணிகள், உரிமைகள், சலுகைகள் குறித்த விதிமுறைகளோ வரைமுறைகளோ இல்லையென்றாலும், ஒரு பிரதமர் அல்லது முதல்வருக்கு வழங்கப்படுவது போன்ற முக்கியத்துவமும், மரியாதையும் அவருக்கு அவையில் உண்டு.
  • நாடாளுமன்ற மரபுகளைப் பின்பற்றி, விவாதங்களின் அடிப்படையில் ஆளும்கட்சியின் தவறுகளைத் தட்டிக்கேட்டு, தன்னை ‘நிழல் பிரதமராக’ நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ராகுல் காந்திக்கு உண்டு. கூச்சல், குழப்பத்தின் அடிப்படையில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பிரதமராகிவிட முடியாது என்பதை அவர் உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியின் கௌரவத்தையும், முக்கியத்துவத்தையும் உயர்த்திப் பிடிப்பதன் மூலம்தான் ராகுல் காந்தி தன்னை பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று நிரூபிக்க முடியும். அவை நடவடிக்கைகளை முடக்குவது அவர் வகிக்கும் புதிய பதவிக்குப் பெருமை சேர்க்காது.
  • சுதந்திர இந்தியாவில் அடல் பிகாரி வாஜ்பாயைத் தவிர, எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த யாரும் பிரதமர்கள் ஆனதில்லை. பிரதமர்கள் வேண்டுமானால் (ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ்) எதிர்க்கட்சித் தலைவர்களாகி இருக்கின்றனர்!

நன்றி: தினமணி (29 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்