TNPSC Thervupettagam

எதிா்பாா்ப்புகளும் குறைபாடுகளும்!

January 4 , 2025 6 days 77 0

எதிா்பாா்ப்புகளும் குறைபாடுகளும்!

  • விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன விளையாட்டு நிா்வாக மசோதாவும், விளையாட்டுத் தீா்ப்பாயமும். விளையாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்த மசோதா பதிவேற்றம் செய்யப்பட்டு அது குறித்த ஆலோசனைகளும் பெறப்பட்டிருக்கின்றன.
  • இந்த மசோதாவில் வரவேற்புக்குரிய பல மாற்றங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில கருத்துகள் பரந்துபட்ட விவாதத்துக்கு உரியவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • விளையாட்டுத் துறை எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயம் விடைகாணக் கூடும். விளையாட்டு அமைப்புகளை (ஃபெடரேஷன்) கண்காணிப்பதற்காக விளையாட்டு ஒழுங்காற்று ஆணையம் அமைப்பது மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னொரு முடிவு. அந்த ஆணையம் தேசிய ஒலிம்பிக் கமிட்டி, தேசிய விளையாட்டு அமைப்புகள் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறை தொடா்பான அனைத்து அமைப்புகளையும் கண்காணிக்கும் அதிகாரம் படைத்ததாக அமையும்.
  • விளையாட்டுத் துறையைச் சாா்ந்த அனைத்து தரப்பினருக்கு மத்தியிலும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், முறையான நிா்வாகத்தை உறுதிப்படுத்தவும் விளையாட்டு ஒழுங்காற்று ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கும். அதேநேரத்தில் தேசிய ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட எல்லா விளையாட்டு அமைப்புகளும் ஒழுங்காற்று ஆணையத்தில் இணைய வேண்டும் என்று மசோதா தெரிவிக்கிறது.
  • சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி, தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் நிா்வாகத்தில் எந்தவித அரசு தலையீடும் இருக்கக் கூடாது. அப்படியிருக்கும்போது, ஒழுங்காற்று ஆணையம் விளையாட்டு அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கும் என்கிற விமா்சனங்கள் எழுப்பப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • விளையாட்டுத் துறையின் நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், புதிய விளையாட்டு நிா்வாக மசோதா வழிவகுக்கும் என்று நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். போட்டிகளுக்கு வீரா்களைத் தோ்ந்தெடுப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகள் விமா்சனத்துக்கு உள்ளாகி, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன. நீதிமன்ற தீா்ப்பு வருவதற்கு மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகிறது. புதிதாக உருவாக்கப்படும் விளையாட்டுத் தீா்ப்பாயம் இந்தப் பிரச்னைக்கு விடைகாணும் என்கிறது அந்த மசோதா.
  • ஏனைய தீா்ப்பாயங்களைப்போல அல்லாமல், விளையாட்டுத் தீா்ப்பாயம் என்பது விளையாட்டுத் துறையின் பிரச்னைகளுக்கு முடிவுகாணும் நீதிமன்றங்களாக உருவெடுக்கும் என்கிறது மசோதா. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. விளையாட்டுத் தீா்ப்பாயம் போன்ற உயா்நிலை அமைப்பு ஏற்படும்போது அதற்கு ஒரு முடிவு ஏற்படும்.
  • இந்த மசோதாவின் கீழ் வரும் எல்லா குடிமையியல் வழக்குகளும் தீா்ப்பாயத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்படுகின்றன. தேசிய ஒலிம்பிக் கமிட்டி, தேசிய விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை தொடா்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளும் மசோதா சட்டமாகும்போது தீா்ப்பாயத்தின் அதிகார வரம்புக்குள் வரும்.
  • விளையாட்டுத் துறை தொடா்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களிலும், உயா்நீதிமன்றங்களிலும் காணப்படுகின்றன. அவற்றுக்கு நீதிமன்றங்களில் விரைவான தீா்வு கிடைப்பதில்லை. தீா்ப்பாயம் அந்த வழக்குகளை விரைந்து கையாள்வதும், தீா்ப்பு வழங்குவதும் நியமிக்கப்படும் நீதிபதிகளின் கையில்தான் இருக்கின்றன.
  • விளையாட்டு அமைப்புகளின் நிா்வாகிகள் அதிகபட்சமாக 16 ஆண்டுகள் பதவியில் தொடரலாம் என்கிறது மசோதா. இப்போதைய 12 ஆண்டுகள் பதவிக்காலத்தை, மேலும் 4 ஆண்டுகள் அதிகரித்திருப்பது ஏன் என்பது புரியவில்லை. நிா்வாகிகள் 70 வயதைக் கடந்தாலும், தோ்ந்தெடுக்கப்பட்ட காலம் முழுமையடையும் வரை பதவியில் தொடரலாம் என்கிற மாற்றமும் விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • முன்மொழியப்பட்டிருக்கும் புதிய விதிமுறைப்படி, செயலாளரும் பொருளாளரும் தொடா்ந்து இரண்டு நான்காண்டு (8 ஆண்டுகள்) பதவிக்காலத்தை வகிக்கலாம் என்றும், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நான்காண்டுகள் பதவி வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைப்படி, நிா்வாகிகள் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் தொடா்ந்து பதவி வகிக்கலாம். அப்படியிருக்கும்போது, ஏன் இந்த மாற்றம் என்பது விளங்கவில்லை.
  • விளையாட்டு அமைப்புகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிக அளவில் காணப்படுவதுதான் பல பிரச்னைகளுக்கும் காரணம். நிா்வாக கமிட்டியில் அந்த அமைப்பு தொடா்பான விளையாட்டு வீரா்கள் 10% காணப்பட வேண்டும் என்கிற புதிய மசோதாவின் விதிமுறை வரவேற்புக்குரியது. விளையாட்டு அமைப்புகளில் துறை சாா்ந்தவா்களின் குரல் இனிமேல் உயரும் என்பது மிகப் பெரிய ஆறுதல்.
  • பள்ளிக்கூடங்களில் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதும், விளையாட்டு வீரா்கள் இளம் வயதிலேயே அடையாளம் காணப்பட்டு அவா்களது திறமையை மேம்படுத்த வழிகோலுவது மசோதாவில் காணப்படும் ஆக்கபூா்வ அறிவிப்புகள்.
  • விளையாட்டுச் சட்டம் 2001-க்கு மாற்றாக புதிய தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்டம் அமையும். இதன் மூலம் விளையாட்டுத் துறையின் நிா்வாகத்தில் அரசியல் தலையீடு அகற்றப்பட்டு, அது முறைப்படுத்தப்படும் என்று எதிா்பாா்ப்போம்.

நன்றி: தினமணி (04 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்