TNPSC Thervupettagam

எது உண்மையான சமூக நீதி

November 11 , 2022 638 days 426 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது, 'பொருளாதார இடஒதுக்கீடு' என்ற பெயரில் ஆதிக்க சாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டுக் கொள்கை செல்லும் என்ற தீர்ப்பை அங்கீகரித்த போது வெளியான விமர்சனங்களில் நீதிநாயகம் கே.சந்துருவின் கருத்து எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது. “இத்தீர்ப்பின் மூலம் வகுப்பு என்னும் தரப்பை ஜாதி வென்றுள்ளது. இந்தத் தீர்ப்பு பிழையானது” எனக் கூறியிருந்தார் சந்துரு.
  • இந்தக் குழுவில் இடம்பெற்ற நீதிபதி பர்திவாலா, ‘இந்திய நாடு நாசமாகப் போனதற்குக் காரணமே ஊழலும், இடஒதுக்கீடும்தான்’ என்னும் விமர்சனத்தை முன்வைத்தவர்; அவர் இந்தக் குழுவில் இடம்பெற்றது திகைப்பை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்த சந்துரு அந்த ஒரு வரியின் மூலம் பல விஷயங்களை அம்பலத்துக்குக் கொண்டுவந்தார்.

தரவுகள் சொல்வது என்ன?

  • இந்திய மக்கள் இந்தத் தீர்ப்பை ஒட்டி கேட்டுக்கொண்ட கேள்விகளை சமூகவலைதளங்கள் வழி அறிய முடிந்தது. அவற்றில் ஒரு கேள்வி இது: "இந்த 5 பேர் நீதிபதி அமர்வில் முழுவதுமாக ஆதிக்க சாதிகளைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றதற்குப் பதிலாக, இந்தக் குழுவில், ஒரு தலித், ஒரு பழங்குடி, ஒரு பிற்படுத்தப்பட்டவர், ஒரு முற்பட்ட சாதிப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் என இந்தியச்  சமூகத்தின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குழு இருந்திருந்தால், இந்தத் தீர்ப்பு எப்படி வந்திருக்கும்?"
  • தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் கேள்வி அல்ல இது. மக்கள் இப்படியெல்லாமும் தங்களுக்கான ஆறுதலைத் தேடிக்கொள்கிறார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் அறிய வேண்டும்.
  • அரசு ஒரு திட்டத்தை முன்வைக்கையில், அந்தத் திட்டத்தின் நோக்கங்கள் என்ன என்பதும், அது நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதா என்பதும் சரிபார்க்கப்பட வேண்டும். நாட்டை நிர்வாகம் செய்யும் அரசு அதைச் செய்யத் தவறியதாக மக்கள் கருதினால், அவர்கள் நாட வேண்டிய இடம் நீதிமன்றம். இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தை அதிவேகத்தில் மாற்றியமைத்தது.
  • இந்த வேகம் ஏனைய சமூகங்கள் பயன் பெறும் ஒதுக்கீடுகளில் சாத்தியம் ஆகவில்லை. பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு என்ற பெயரில், தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களை விலக்கும், மறைமுகமாக முற்பட்ட சாதிகளைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ஒதுக்கீட்டை நியாயப்படுத்தும் ஒரு அம்சத்தையும் சாமானிய மக்களால் கண்டறிய முடியவில்லை.
  • அரசியல் தளம் இப்படி ஓர் அநீதி ஏற்பாட்டை உருவாக்கியதை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. உச்ச நீதிமன்றமும் அதை அங்கீகரித்தபோது அவர்கள் தங்களுக்குள்ளேயே இப்படியான கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலானார்கள். "அப்படியென்றால் தற்போது ஒன்றியக் கல்வி நிறுவனங்களில், அலுவலகங்களில், ஆதிக்க சாதியினரின் பங்கேற்பு குறைவாக உள்ளதா? அதற்கான தரவுகள் என்ன? துணைக் கேள்விகள்: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில், அலுவலகங்களில், ஆதிக்க சாதியினர் எவ்வளவு சதம் உள்ளனர். நாட்டில் ஆதிக்க  சாதியினரின் மக்கள்தொகை எவ்வளவு? இந்தக் கேள்விகளுக்கும் அரசு தரப்பில் உண்மையான தரவுகள் உள்ளனவா?"
  • தனியார் நலன் நாடும் குழுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிடும் தகவல்கள் வழியே பார்த்தால், நாட்டின் முக்கியமான கல்வி நிலையங்களான ஐஐடிகள், ஐஐஎம்களில்  ஆதிக்க சாதியினரின் பங்கேற்பு 60%-70% இடங்களுக்குக் குறைவாக இல்லை என்றே சொல்கின்றன. பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என இந்திய மக்கள்தொகையில் 70% வரை உள்ள இந்த மூன்று பிரிவுகளின் பிரதிநிதித்துவம் இந்த நிறுவனங்களில் 30%கூட இல்லை என்பதே நம் முன் உள்ள தரவுகள். எனில், ஆதிக்க சாதியினருக்கான தனி இடஒதுக்கீட்டுக்கான  அவசியம் என்ன?
  • ஏழை மக்கள் சதவீதம்கூட, மற்ற சாதிகளைவிட ஆதிக்க சாதி வகுப்புகளில்தான் மிகக் குறைவாக உள்ளது என்பதே பொதுவெளியில் கிடைக்கும் தரவு. குறிப்பாக தலித்துகள், பழங்குடி மக்களிடையே ஏழ்மை சதவீதம் மிக மிக அதிகம் என்பதை எல்லாத் தரவுகளுமே சொல்கின்றன. அப்படியெனில், ஆதிக்க சாதி ஏழைகளுக்கு மட்டும் ஏன் இந்தத் தனிப் பெருங்கருணை?

வரலாறு எத்தகையது?

  • ஆதிக்க சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் சொல்வது இதுதான். "தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், ஆதிக்க சாதிகளுக்கு இல்லை. எனவேதான், ஆதிக்க சாதிகளில் உள்ள ஏழைகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக இது" என்கிறார்கள். இடஒதுக்கீடு என்பது, இதுவரை கல்வியில், வேலைவாய்ப்பில் விடுபட்டுப்போன வகுப்பு மக்களை உள்ளே கொணர்வதற்கான ஒன்று. ஆனால், 20%-25% இருக்கும் ஆதிக்க சாதியினர், ஒன்றியக் கல்விவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே 60%-70% வரை இருப்பதைப் பல நிறுவனங்களின் தரவுகள் உறுதிபடுத்துகின்றன.
  • மேலும், அதே நிறுவனங்களில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் எளிய மக்களுக்கான சமூகரீதியிலான இடஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதையும் பல தரவுகள் சொல்கின்றன. ஓர் உதாரணமாகபிற்படுத்தப்பட்டவர்களுக்கான மருத்துவ உயர்கல்வியில் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டதும் தமிழக அரசியல் கட்சிகள் அதை இறுதியில் நீதிமன்றம் சென்று நடைமுறைப்படுத்த வைத்ததும் நம் கண் முன்னே உள்ள வரலாறு.
  • அப்படி இருக்க இது எப்படி? அதுவும் இந்த வேகம்... ஏனென்றால், பிற்படுத்தபட்ட மக்களுக்காக நியமிக்கப்பட்ட கலேல்கர் கமிஷன், பின்னர் மண்டல் கமிஷன் பரிந்துரைகளெல்லாம் எவ்வளவு நாட்கள் உறைபனிக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன என்ற  வரலாறு பலர் நினைவிலும் உள்ளது.
  • இந்த அநீதியான இடஒதுக்கீட்டை மேலும் கேலிக்கூத்தாக்குவது, பொருளாதார அளவுக்கான வரையறை. இந்த ஒதுக்கீடுகளுக்கான வருமானத் தகுதி வரையறை ரூ.8 லட்சம் என்பது. பல கோடி மக்களுக்கு இன்னும் ரூ.2 லட்சம் ஆண்டு வருமானம் சாத்தியம் ஆகவில்லை.

இந்த வருமான வரையறை சரியா?

  • நம் ஊரில் கல்வியின் தரம் நகரத்திலும், கிராமத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ரூ.8 லட்சம் வரை ஊதியமோ அல்லது லாபமோ ஈட்டும் ஆதிக்க சாதியினர் நகரத்தில் வசிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவர்கள் குழந்தைகள் வசதியான பள்ளிகளில் படிப்பார்கள். ரூ.1-ரூ.2 லட்சம் ஊதியம் ஈட்டும் ஆதிக்க சாதியினரின் குழந்தைகள் கிராமங்களில், அரசுப் பள்ளிகளில் அதிகம் படிப்பார்கள். இவர்களில் எவர் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெறும் என்பதை யூகிக்க புத்திசாலித்தனம் தேவையில்லை.
  • உண்மையிலேயே, இந்த அரசுக்கும் நீதிமன்றத்துக்கும், பொருளாதார நீதி வழங்குவது நோக்கம் எனில், ஏற்கெனவே இருக்கும் 50% இடஒதுக்கீட்டைத் தாண்டி, இந்த 10% இடஒதுக்கீட்டை உண்மையான ஏழைகளுக்கு (ரூ.2-ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு), சாதி வேறுபாடு பார்க்காமல் வழங்க வேண்டும். அதில் அனைத்து சாதி ஏழைகளும் பயன் அடையும் நிலையை உருவாக்க வேண்டும். நடக்குமா?

நன்றி: அருஞ்சொல் (11– 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்