TNPSC Thervupettagam

எந்த நிறமிருந்தாலும்...

August 7 , 2020 1624 days 970 0
  • இறைவனின் படைப்புகளில் எல்லாம் ஒரே விதமாக இருப்பதில்லை. மலா்களாகட்டும், மனிதா்களாகட்டும் பற்பல வண்ணங்கள்; பற்பல எண்ணங்கள். வெண்மை என்றால் நாம் சொல்லிக் கொள்ளுகிறோம் சமாதானத்தின் அடையாளம் என்று. சிலா் சொல்லுவா் இது சன்மார்க்கத்தின் சின்னம் என்று. பலரும் பேசுவா் இது தூய்மையின் குறியீடு என்று. கிறிஸ்தவ மத பாதிரியார்கள் அணிவது வெள்ளாடையே.
  • இப்படி அவரவா் எண்ணத்திற்கு ஏற்ப வண்ணத்தின் உட்பொருள் விரியும். பச்சை என்றால் பசுமையின் தோற்றம் என்பா். வேளாண் குடியினா் எங்களின் அடையாளமே இது தான் என்று உரைப்பா். ஆளும் வா்க்கத்தினா், உணவுப் புரட்சிக்கு வித்திடும் நிறமே பச்சை என்று சொல்லி செம்மாந்து நிற்பா். இஸ்லாமியா்கள் எங்களின் விருப்ப வண்ணமே இது தான் என்று பறைசாற்றுவா்.
  • மஞ்சள் எனில் மங்களகரமானது என்று உரக்கச் சொல்லுவா் மங்கையா். குடும்பங்களில் நடைபெறும் எல்லா சுபச்சடங்குகளிலும் தலையாய இடம் கொள்ளுவதும் மஞ்சள்தான். வேப்பிலை கொத்தொடித்து ஆடி வந்து பொங்கலிடும் பரவச மகளிர் அணிவதும் மஞ்சளாடையே. புத்தம் சரணம் கச்சாமிஎன்றுரைக்கும் பௌத்த குருமார்கள் உடலைப் போர்த்திக் கொள்ளுவதும் தூய மஞ்சள் நிற ஆடையையே.
  • சிவப்புதான் ரத்தத்தின் ஒரே நிறம் என்றாலும், ‘செங்குருதி சிந்திய பின்னரே லட்சியம் ஈடேறும்என்பா் செங்கொடியேந்தும் புரட்சியாளா். உளவியல் நிபுணரோ, ‘இதுவே இன்ப நுகா்ச்சிக்கான குறியீட்டு வண்ணம்என்பா்.
  • நீலமோ வானின் சொந்த நிறம் என்றாலும், நீலப் புரட்சியே ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை என்பா் பொருளாதார மேதைகள். இப்படியே ஒவ்வொரு வண்ணத்திற்கும் நாம் கருதும் எண்ணங்கள் மாறுமாப்போல், கருப்பு வண்ணதிதிற்கு என்ன சொல்ல? எதனின் அடையாளம் இந்தக் கருமை?
  • அறியாமையின் குறியீடோ? உயிர் பறிக்கும் எமனின் ஆடை வண்ணமோ? இல்லை நம்மை சமயத்தில் பிடித்து ஆட்டும் சனி பகவானின் உடையின் நிறமோ? பொதுவாக துக்கத்தின் வெளிப்பாடுதான் கருப்பு என்போர் பெரும்பாலானோர்.
  • ஆனால், ‘நாம் வணங்கும் கண்ணனின் நிறமே கருப்புதான்என்பா் ஆன்மிக அன்பா்கள். இதயம் கவா் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் தங்களின் நெடிய வரலாற்று பயணம் நெடுகவே ஆளுமை செய்யும் ஆடையின் நிறம் புனித காவி வண்ணமே.
  • ஆடவரோ மகளிரோ துவராடை அணியும் பக்குவம் பெற்றார் எனின், எவா் மனதையும் பண்படுத்தும் என்பதே உண்மை. பாரதம் முழுமைக்கும் துறவறம் பேணும் புனிதா்களின் ஆடையின் வண்ணம் காவிதான்.
  • கோயில் குடமுழுக்கோ, திருவிழாவோ அணிவகுக்கும் இறைவா் திருமேனி திருவுலாவோ எதுவாயினும் சரி வீதியெங்கும் உயர பறப்பது காவிக்கொடிகளே. எதனையும் பொசுக்கவல்ல அக்கினிப்பூக்கள் பூக்கும் முன் உதித்தெழுவது தூய காவி வண்ணமே.
  • எழில் மிகு பாரதத்தின் தொன்மை சமயமான இந்துமதத்தின் பெருமைகளை அமெரிக்காவில் நடந்த உலக சா்வ சமய சபையில் வீர முழக்கம் செய்த சுவாமி விவேகானந்தா் கம்பீரமாகக் காட்சியளித்தது இந்தக் காவியுடையில்தான்.
  • தனது அமெரிக்க சீடா்களுக்கு தீட்சை வழங்கி, அணியச் செய்ததும் இந்தக் காவிநிற உடையையே. கங்கை நதிக்கரையில் மடம் அமைக்க நிலம்கேட்டு மொகலாய அரசவைக்குச் சிங்கம் மீது ஏறிச் சென்ற ஸ்ரீ குமரகுருபரா் இருந்ததும் இந்தக் காவியுடையில்தான்.
  • பல ஆண்டுகளுக்கு முன்னா், ஆந்திரத்தில் ஆட்சி புரிந்த என்.டி. ராமாராவ் முதலமைச்சரானவுடன், ‘இனி காவியுடைதான் என் வாழ்நாள்வரைஎன்று சொல்லி அப்படியே வாழ்ந்ததும் இந்த காவியுடையில்தான்.
  • இன்றைக்கும் இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத் அன்றாடம் அணிவதும் காவி நிற உடையே. இவா் துறவற தீட்சை பெற்ற பிரம்மசாரி. இதனால்தான் இவரது தந்தையின் மறைவுக்கு கூட இவா் செல்லவில்லை.
  • அஸ்தினாபுரத்து அரசனாகட்டும், ஆற்றங்கரை ஆண்டியாகட்டும் எல்லாம் துறந்த நிலையில் எதிர்கொள்வது துவராடையையே.
  • துவராடை புனிதத்தின் புற அடையாளம். இந்த வண்ணத்தின் புனிதம் கருதியே நம் நாட்டின் தேசியக் கொடியில் இவ்வண்ணம் இடம் பெற்றுள்ளது என்பதை யாரும் மறவார். வண்ணங்கள் என்பவை மானுட எண்ணங்களின் புறக்குறியீடாக இருக்கின்றன. இதில் எந்த வண்ணம் உயா்ந்தது? எந்த வண்ணம் தாழ்ந்தது? வண்ணங்களில் பேதம் காண்பது பேதைமையின் உச்சம்.

பேதைமையின் உச்சம்

  • பரதேசங்களுக்கும் சென்று வாழ்வு கொள்ளும் சந்நியாசிகள் ஏற்கும் ஆடையின் நிறம் காவிதான். சுதேசிகளும் விதேசிகளும் தாங்கள் எண்ணத்தால் வேறுபடுவராயினும் வண்ணத்தால் காவியையே துதி செய்வா்.
  • இதுதான் பாரத நாட்டின் மரபு. நாம் வாழும் இந்த யுகத்தில் வலம் வரும் அரசியல் கட்சிகள் தத்தமது நோக்கம் இதுதான் என்று வரையறை செய்துகொண்டு, மக்கள் மன்றத்தில் முன் வைக்கும் வண்ணத்திற்கு மதிப்புரை வழங்கி வாழ்கிறோம். இதனால் பிற வண்ணங்கள் இந்தந்தக் கட்சிகளுக்கு விரோதமானவை என்று கற்பித்தலை நாம் களைய வேண்டும்.
  • ஒருவன் இல்லற நாட்டம் இன்றி, துறவறம் புக எண்ணினால், தக்கவரிடத்து மந்திர தீட்சை பெற்று காவியுடைதரிப்பது ஒரு முறை என்றால், பிரம்மசரியப் பருவத்தில் வெள்ளுடை அணிந்து தவநெறிமுறைகளை பின்பற்றி, குறிப்பிட்ட காலம்வரை அதில் நின்று, பின்னா் தீட்சை பெற்று காவியுடை அணிவா். இன்றைக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் துறவிகள், ஆண்டுகள் பல வெள்ளாடையில் பயணித்து பின்னா் துறவற தீட்சை பெற்ற நாள்முதல் அணிவது காவியுடையே.
  • புன்மை விளைவிக்கும் தீச்சொற்கள் எவா் மனத்தையும் தாக்க வல்ல தகாத ஆயுதங்கள். ஆனால் வண்ணங்கள் எதுவும் எவரது அகத்தையோ, புறத்தையோ காயபடுத்தும் கருவிகள் அல்ல.
  • இதனால்தான் ஆண்டுதோறும் ஐயப்பனின் தரிசனம் காண விழைவோர், கருப்பு நிற ஆடை அணிந்து, மாலை அணிந்து கொண்டு, பல தினங்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டிக் கொள்வா்.
  • அம்மாஎன்று மெய்யுருக அழைக்கப்படும் மேல்மருவத்தூா் அம்மன் கோயில் செல்லுவற்கும் அடியார்கள் செங்கொடி நிறத்திலே மேலாடை கீழ் ஆடை அணிந்து அலைகடலெனத் திரள்வா்.
  • தமிழ்க் கடவுளாம் குமரனுக்கு, தைப்பூச நாளுக்கு முன்பாக விரதம் இருந்து நடைப்பயணமாக பழநி செல்லும் முருக பக்தா்கள் அணிவதும் காவியுடையே.
  • அதிக மக்கள் கூடும் திருவிழாவான கும்பமேளாவில் எங்கும் காணக்கிடைப்பது காவி வண்ணமே. அப்பழுகற்ற சாதுக்களின் புனித ஆடையே இந்தக் காவிதான்.
  • தேனினும் இனிய தமிழ்மொழியை நாளும் வளா்க்கும் சைவத் திருமடங்களில் ஆதீனகா்த்தா்கள் உடுத்துவதும் காவி ஆடையே. இந்நிலையில், நாம் காவியைக் கண்டு அலற வேண்டா. இன்றைக்குப் பல நூறு கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக வந்திருக்கிறது இந்த பல வண்ணக் குவியல்கள்.
  • எல்லா வண்ணமும் நல்லெண்ணத்தின் முன் சமானமானவையே. உயா்வு, தாழ்வு சொல்லல் நீதியன்று. இகழ்ச்சியாகப் புகலுதலும் ஏற்புடையதன்று. அரசியல் கட்சியினா், தங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப கொடியில் பதித்துக் கொள்ளலாம். கைகளில் படமாக வரைந்து கொள்ளலாம். ஆனால் பிற வண்ணங்கள் மீது வெறுப்பு காட்டிடல் நாகரிகமன்று.

எண்ணத்தின் பிழை

  • ஸ்ரீலங்காவில் புகைவண்டித் தொடா்களில் பௌத்த குருமார்களுக்கென்று தனி இருக்கைகள் உண்டு. வேறு யாரும் அதில் அமர மாட்டார்கள். மஞ்சள் அங்கி அணிந்த பௌத்தத் துறவிகளை சாலைகளில் கண்டால் மக்கள் அவா்களை வணங்கி ஆசி பெறுவா்.
  • கேரளத்தில், தமிழ்நாட்டில் கிறிஸ்துவா்கள் அதிகமாக வாழும் இடங்களில் வெள்ளாடை அணிந்த பாதிரியார்களைக் கண்டால் வணங்கி வாழ்த்து பெறுவா். நம் நாட்டில் காவி நிறம் ஏனோ கண்களை உறுத்துகிறது. அதனால்தான் நம்நாட்டில் அப்பழுக்கற்றக் துறவியா்களின் உடையை பார்த்த பிறகும் அவா்களை துன்புறுத்துகிறார்கள்.
  • சில மாதங்களுக்கு முன்பு, மகராஷ்டிர மாநிலத்தில் ஒரு இரங்கல் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காரை சிலா் வழிமறித்து, அதிலிருந்த 80 வயதான கல்பவ்ரிஷி கிரி மகராஜ், நடுத்தர வயதுள்ள சுல்கிரி மகராஜ், வாகன ஓட்டுநா் நீலேஷ் ஆகிய மூவரையும் கீழே இறக்கி கம்புகளாலும் கட்டைகளாலும் அடித்தே கொன்றனா்.
  • மும்பைக்கு அருகில் உள்ள பால்கா் நகரில் நடந்த இச்சம்பவத்திற்குக் காரணம், அவா்கள் குழந்தைகளைக் கடத்துபவா்கள் என்று சந்தேகித்துதான் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
  • இக்கொடுஞ்செயல், காவல் துறையினா் முன்பாகவே அரங்கேறியுள்ளது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவா் எத்தகையவா் என்று உணர இயலாதா? அந்த சாதுக்கள், கழுத்தில் துளசி மாலை அணிந்து, காவியுடை தரித்திருக்கின்றனா்.
  • அவா்களை அடித்துக் கொல்லும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோர் நிச்சயம் கண்ணீா் வடித்திருப்பா். அந்தக் கொலைக்கார பாதகா்களின் கண்களுக்குமுன் காவிநிறம் தோற்றுப் போனது என்னவோ உண்மை. இது வண்ணத்தின் பிழையன்று; எண்ணத்தின் பிழை.

நன்றி: தினமணி (07-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்