TNPSC Thervupettagam

என்னதான் நினைக்கிறார் ஷி

July 13 , 2020 1474 days 653 0
  • லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் இந்தியா மேலும் நெருக்கமாவதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வழிகோலினார் என்றால் இப்போது இந்தியாவின் நட்பு வட்டத்திலிருந்து விலகி சீனாவுக்கு நெருக்கமாக நினைத்த பூடானை மீண்டும் இந்தியாவின் ஆதரவை நாட வைத்திருக்கிறார் அவர்.

  • கடந்த மே மாதம் முதலே தனது எதேச்சதிகார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது சீனா. இந்தியாவின் கிழக்கில் லடாக்கையொட்டிய பகுதிகளில் தனது துருப்புகளை அதிகரித்து ஆக்கிரமிப்புக்கான அடிப்படை வேலைகளைத் தொடங்கிவிட்டிருந்தது.

  • நாம் சற்று ஏமாந்திருந்தால் நிலைமை மிக மிக மோசமாக மாறியிருக்கும். இப்போதுகூட இந்திய எல்லையில் எத்தனை கி.மீ. சீனாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பது தெரியவில்லை.

சாக்டெங் வனவிலங்கு சரணாலயம்

  • கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு படைகளுக்கும் இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்காலிக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.

  • இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட கையோடு இப்போது சீனாவின் பார்வை பூடானை நோக்கித் திரும்பியிருக்கிறது. கிழக்கு பூடானில் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் தன்னுடைய எல்லைக்குள்பட்டது என்று புதிதாக உரிமை கோரி தன்னுடைய விரிவாக்கப் பேராசையை வெளிப்படுத்தியிருக்கிறது.

  • இதுவரை மேற்கு பூடான், வட மத்திய பூடான் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களைத்தான் சீனா சொந்தம் கொண்டாடி வந்தது.

  • இப்போது புதிதாக மூன்றாவதாக ஒரு பகுதியையும் சீனாவுக்கும் பூடானுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு உள்படுத்தியிருக்கிறது. சீனா இப்படியொரு உரிமை கோரலை முன்வைக்கும் என்று சற்றும் எதிர்பாராத பூடான் அரசு அதிர்ந்துபோய் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறது.

  • சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தின் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து விரிவாக்கம் செய்வதற்காக அமெரிக்காவிலுள்ள சர்வதேச சூழலியல் அமைப்பிடம் நிதியுதவி கோரியிருக்கிறது பூடான் அரசு. பூடானின் அந்தக் கோரிக்கை குறித்து கேள்விப்பட்டதும் சீனா அதை எதிர்த்து குரலெழுப்பியிருக்கிறது.

  • சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் சீனாவுக்கும் பூடானுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைக்குள்பட்ட பகுதியென்றும், அதற்கு நிதியுதவி அளிக்கக்கூடாதென்றும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது சீன அரசு.

  • சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் குறித்து இருதரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தனது எதிர்ப்பில் தெரிவித்திருக்கிறது சீனா.

  • சீனாவின் உரிமை கோரலை பூடான் நிராகரித்திருக்கிறது. இதுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் குறித்துப் பேசப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது பூடான் அரசு.

  • சாக்டெங் பகுதி பூடானின் இறையாண்மைக்கு உள்பட்டது என்றும் அதற்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் பூடான் தெளிவுபடுத்தியிருக்கிறது.

  • சீனாவின் சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் குறித்த உரிமை கோரலை, இமயமலைப் பகுதியில் சீனாவின் எல்லை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவும் கவலைப்பட்டாக வேண்டும்

  • சீனாவின் இந்த உரிமை கோரல் குறித்து இந்தியாவும் கவலைப்பட்டாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அடிப்படையில் பூடான் இந்தியாவின் இணைபிரிக்க முடியாத நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட பூடானின் பாதுகாப்பு இந்தியாவின் இறையாண்மைக்கும் மிக மிக அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

  • சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையொட்டிய பகுதி. அருணாசலப் பிரதேசத்தையொட்டிய இந்திய - சீன எல்லையில் சுமார் 90,000 சதுர கி.மீ. பரப்பை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

  • அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் புனித பௌத்த மடாலயம் சாக்டெங் சரணாலயத்தையொட்டி இருக்கிறது. சாக்டெங்கை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் தவாங் மடாலயத்தை வருங்காலத்தில் கைப்பற்றுவதும்கூட சீனாவின் எண்ணமாக இருக்கலாம்.

  • லடாக்கில் மட்டுமல்லாமல் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சிக்கிமின் சில பகுதிகளிலும்கூட, இந்திய எல்லைக்குள் சீனா நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.

  • அருணாசலப் பிரதேச எல்லையையொட்டிய பகுதிகளில் சீன ராணுவத்தின் படைக் குவிப்பு சமீப காலமாக கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் மேற்குப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் அதேவேளையில் பூடான், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள சீனா திட்டமிட்டால் வியப்படைய ஒன்றுமில்லை.

  • இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் 2014 முதலே நாம் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறோம். நமது ராணுவப் படைபலத்தையும் தயார் நிலையில்தான் வைத்திருக்கிறோம். பூடான் சில தவறுகளைச் செய்திருக்கிறது.

  • தவாங் மடாலயத்துக்கு அருகிலுள்ள லும்லாவிலிருந்து கிழக்கு பூடானை இணைக்கும் சாலைப் பணிக்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்காமல் பூடான் அரசு இழுத்தடித்து வருகிறது.

  • அந்தச் சாலை அமையுமானால் இந்தியத் துருப்புகளை விரைந்து பூடானின் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லவும், இந்தியா மீதோ, கிழக்கு பூடான் மீதோ சீனா ஆக்கிரமிப்பு நடத்தினால் அதை எதிர்கொள்ளவும் முடியும்.

  • இனிமேலாவது சீனாவின் ஆக்கிரமிப்பு எண்ணத்தைப் புரிந்துகொண்டு தில்லியுடன் இணைந்து பூடான் செயல்பட்டாக வேண்டும். சீனாவின் சாக்டெங் உரிமை கோரல் அதற்கு வழிகோலும் என்று நம்பலாம்.

நன்றி: தினமணி (13-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்