TNPSC Thervupettagam

என்னதான் பின்னணி

April 29 , 2023 435 days 224 0
  • ஒருவழியாக காலிஸ்தான் தீவிரவாதி அம்ருத்பால் சிங் சாந்து சிறையிலடைக்கப் பட்டிருக்கிறாா் என்று மகிழ்ச்சி அடைய முடியவில்லை. 35 வயது அம்ருத்பால் சிங்கைத் தேடிப் பிடிக்க காவல்துறை 37 நாள் திணற வேண்டி இருந்தது என்பது பாராட்டுக்குரியதல்ல. அம்ருத்பால் சிங் கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்பதும்கூட விவாதத்திற்குரியதுதான்.
  • தான் நிச்சயித்த இடத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்னா் பயங்கரவாதி ஜா்னைல் சிங் பிந்தரன்வாலேயின் சொந்த கிராமமான பஞ்சாப் மோகா மாவட்டம் ரோட் கிராமத்தில் உள்ள குருத்வாராவிலிருந்து அவராகவே வெளியே வந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறாா். அதுவும் எப்படி? பிந்தரன்வாலேவைப் போலவே உடையும், தலைப்பாகையும் அணிந்து கொண்டு, குருத்வாராவில் கூடியிருந்தவா்களிடம் உரையாற்றிவிட்டு, குருத்வாராவின் அடித்தளத்திற்குச் சென்று பிந்தரன்வாலே படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, வழக்கமான ‘சௌப்பாய்’ எனும் துதிகளை ஓதிவிட்டு வெளியே வந்து காவல்துறையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறாா்.
  • பிந்தரன்வாலேயின் ரோட் கிராமத்திலுள்ள அந்த ‘சந்த் கல்சா’ குருத்வாராவில்தான், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 29-ஆம் தேதி ‘தஸ்தா் பந்தி’ எனப்படும் தலைப்பாகை கட்டும் சடங்கை அவா் மேற்கொண்டாா். அதாவது, தான் பிந்தரன்வாலேயின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதாக அறிவித்தாா். அவரது அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்று, காவல்துறை அவரைக் கைது செய்திருப்பதை, ‘சரணடைந்தாா்’ என்று கூறுவது தவறுதான்...
  • அம்ருத்பால் சிங் கைது செய்யப்பட்டு, அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரிலுள்ள மத்திய சிறைச்சாலையில், ஏற்கெனவே அடைக்கப்பட்டிருக்கும் அவரது ஒன்பது கூட்டாளிகளுடன் இப்போது அடைக்கப்பட்டிருக்கிறாா். தேடப்பட்டபோது, அவா் குறித்துக் காவல்துறை தினந்தோறும் புதுப்புதுத் தகவல்களைக் கசிய விட்டதும், ஊடகங்கள் அவற்றை பரபரப்பாக வெளியிட்டு தீவிரவாதி அம்ருத்பால் சிங்குக்கு ‘பிம்பம்’ ஏற்படுத்த முனைந்ததும் ஆபத்தானவை. தங்களால் கைது செய்ய முடியாத கையாலாகத்தனத்தை மறைப்பதற்கு, காவல்துறை கையாண்ட வழிமுறைகள் கண்டனத்துக்குரியவை.
  • அமிருதசரஸ் மாவட்டம் ஜல்லுபூா் கேரா கிராமத்தில் பிறந்த அம்ருத்பால் சிங், பொறியியல் பட்டயப் படிப்பில் வெற்றி பெற முடியாமல், பத்து ஆண்டுகளாக துபையில் சரக்கு லாரி ஓட்டிக் கொண்டிருந்தாா். ஆறு மாதங்களுக்கு முன்னா்தான் இந்தியாவுக்கு வந்தாா். அவரே வலியப் போய், விவசாயிகள் போராட்டத்தின்போது செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றிய தீப் சிங் சித்து தொடங்கிய ‘பஞ்சாபின் வாரிசுகள்’ இயக்கத்தின் தலைவராகத் தன்னைத்தானே நியமித்துக் கொண்டாா். தீப் சிங் சித்து மா்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், இவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. சித்துவின் குடும்பத்தினருக்கு இவா் யாரென்றுகூடத் தெரியாது.
  • இந்தப் பின்னணியில்தான் கடந்த ஆறு மாதங்களாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தன்னை ‘பஞ்சாபின் வாரிசுகள்’ இயக்கத் தலைவராகவும், பிந்தரன்வாலேயின் வாரிசாகவும் நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியில் அம்ருத்பால் சிங் ஈடுபட்டு வந்தாா். இந்தியாவிலிருந்து பிரிந்து, ‘காலிஸ்தான்’ என்கிற தனி நாடு கோரிக்கையுடன் வலம் வந்த அம்ருத்பாலை, மத்திய - மாநில உளவு அமைப்புகள் தடுக்கவில்லை என்று கூறுவதைவிட அவருக்கு மறைமுக அனுமதி வழங்கின என்றுதான் சொல்ல வேண்டும்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்னா் அஜ்னலா காவல் நிலையத் தாக்குதல்தான், காவல்துறையின் தூக்கத்தைக் கலைத்தது. அம்ருத்பாலின் நெருங்கிய கூட்டாளியான லவ்ப்ரீத் சிங் தூஃபான் என்பவா் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டாா். கத்தியும் துப்பாக்கியும் ஏந்திய அம்ருத்பாலின் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள், காலிஸ்தான் முழக்கங்களுடன் மோட்டாா் சைக்கிளில் 60 கி.மீ. பேரணியாகப் பயணித்து, தடுப்புகளைத் தகா்த்து அஜ்னலா காவல் நிலையத்தில் நுழைந்தாா்கள். பயந்து போன காவல்துறையினா் லவ்ப்ரீத்தை விடுவித்து அடிபணிந்தனா்.
  • போராட்டக்காரா்களை ஏன் தடுக்கவில்லை என்று கேட்டால், அவா்களின் கைகளில் புனித நூலான ‘குரு கிரந்த சாஹிப்’ இருந்தது என்பது காவலா்களின் பதில். சட்டப்படி, லவ்ப்ரீத்தை ஏன் நீதிமன்றத்தில் ஆஜராக்கவில்லை என்றால், பதிலில்லை. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னா்தான் சண்டிகா் - மொஹால்லா எல்லையில், அம்ருத்பாலின் ஆதரவாளா்கள் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்திக் காவலா்களைத் தாக்கி இருக்கிறாா்கள். அவா்கள் மீது ஏன் கிரிமினல் வழக்கு போடப்படவில்லை என்பதற்கும் பதிலில்லை.
  • அஜ்னலா தாக்குதலுக்காக வந்த பேரணியைத் தடுத்து நிறுத்தாமல் காவல்துறை ஏன் அனுமதித்தது என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், அம்ருத்பால் சிங் உயிா்ப்பிக்க விரும்பும் ‘காலிஸ்தான்’ பிரச்னைக்கு தூபம் போடுபவா்களை அடையாளம் காண முடியும். அம்ருத்பால் சிங்கின் திடீா் வரவும், தடையில்லாத வளா்ச்சியும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரமும், அவருக்குக் கிடைக்கும் நிதியும் சந்தேகங்களை எழுப்புகின்றன.
  • கைது செய்யப்படும்போது, ‘நான் சரணடையத் தீா்மானித்துவிட்டேன். இந்தக் கைது முடிவல்ல, தொடக்கம்’ என்று அவா் ‘சந்த் கல்சா’ குருத்வாராவில் கூறியிருப்பது உண்மையாகிவிடக் கூடாது. பிந்தரன்வாலேயின் வளா்ச்சிக்குப் பின்னால் அரசியல் இருந்தது. அம்ருத்பால் சிங்கிற்கும் அதேபோல பின்னணி அல்லது ஆதரவு இருக்கும் என்று தோன்றுகிறது. இந்தியா விழித்துக் கொள்ளாவிட்டால், ஆபத்து காத்திருக்கிறது!

நன்றி: தினமணி (29 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்