- இன்றைக்கு இந்திய விஞ்ஞானிகள் அடிப்படை ஆய்வுகள் முதல் பயன்பாட்டுத் தொழில்நுட்ப உலகத் தர ஆய்வுகள் வரை முனைப்புடன் ஈடுபட்டு வெற்றியும் ஈட்டிவருகின்றனர். சந்திரயான்-3, ஆதித்யா எல்1, ககன்யான், மீள் பயன்பாடு செய்யக்கூடிய புஷ்பக் விண்கலம் என நீளும் பட்டியலே அதற்குச் சான்று.
- ஏழை நாடான இந்தியா, அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட வேண்டுமா என மேலை நாடுகள் கேள்வி எழுப்பிய சூழலிலும் அறிவியலோடு கைகோத்தால்தான் இந்தியா சொந்தக் காலில் நின்று முன்னேற முடியும் என்னும் தொலைநோக்குப் பார்வையோடு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவாக்கிய அறிவியல் நிறுவனங்கள் அளித்துவரும் பலன்கள்தான் இவை.
- இவற்றின் தொடர்ச்சியாக நான்காம் தொழில்நுட்பப் புரட்சி, காலநிலை மாற்றம் முதலிய சவால்களை எதிர்கொள்ள இந்திய அறிவியல் தன்னைப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆனால், அறிவியல் வளர்ச்சியில் இன்றைய அரசு முழுமையான அக்கறையை வெளிப்படுத்துகிறதா?
- போதாமைகள்: 2011-12 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.76% அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கடுத்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல அறிவிப்புகள் செய்யப்பட்டாலும், 2020-21இல் வெறும் 0.64%ஆக குறைந்துவிட்டது. ஒப்பீட்டளவில் சீனா 2.4%, பிரேசில் 1.3% நிதியை ஒதுக்குகின்றன. குறிப்பாக, சீனா ஆண்டுக்குத் தலைக்கு 413.4 டாலர் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக்குச் செலவுசெய்கிறது; பிரேசில் 197.9 டாலர், தென் ஆப்ரிக்கா 88.7 டாலர்; ஆனால், இந்தியாவோ வெறும் 42 டாலர்.
- அதேபோல மனிதவளமும் நிறுவனங்களும் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியம். ஆய்வுகளை மேற்கொள்ளத் திறன்மிக்க நபர்களும், அவர்களைப் பயிற்றுவித்து வளர்த்தெடுக்க உயர் கல்வி நிறுவனங்களும் தேவை. இந்தியாவில் 2009இல் 10 லட்சம் பேருக்கு 164 பேர் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த எண்ணிக்கை 2020இல் 262 என ஏறத்தாழ இரண்டு மடங்கு கூடியுள்ளது.
- இதே காலகட்டத்தில் சீனாவில் இந்த எண்ணிக்கை 2009இல் 863இலிருந்து 2020இல் 1,585ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை நம்மைவிடக் கூடுதலாக 383ஆக இருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் 484, பிரேசிலில் 888. மூன்றாம் உலக நாடுகளில் முன்னணியில் இருந்த நாம், இன்று பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான அளவு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தும் வகையில், எந்தப் புதிய ஆய்வு நிறுவனங்களும் உருவாக்கப்படவில்லை.
- உயர் கல்வி நிறுவனங்களின் நிலை: சுமார் 40,000 உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும், அவற்றில் வெகு சொற்ப நிறுவனங்களே ஆய்வுகளில் ஈடுபடும் வசதியைக் கொண்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான் தரத்தில் முதலிடம் என லண்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) தரப்பட்டியல் கூறுகிறது.
- ஆனால் நிதி நெருக்கடி, பல்கலைக்கழக ஜனநாயகத்துக்கு நெருக்கடி எனக் கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். இந்தியாவில் பல உயர் கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்துவருகின்றன. மறுபுறம் சீனாவோ உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களை அடுத்தடுத்துக் கட்டமைத்துவருகிறது. சீனாவின் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஸ்டெம் (STEM) உயர் கல்வி சார்ந்த முனைப்பைத் தொடங்கியுள்ளன.
- முடக்கப்படும் ஆய்வுகள்: இந்தியாவில் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் வழியே ஆய்வு நிதி உதவிசெய்யும் ஏற்பாட்டை மாற்றி, ஒருமுகப்படுத்தப்பட்டு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) என்னும் ஒரே ஒரு அமைப்பு வழியே ஆய்வுத் திட்டங்களைச் செயல்படுத்த 2019இல் அரசு முடிவெடுத்தது. 2021 பட்ஜெட்டில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆனால், அதற்கென எந்த நிர்வாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 2023இல் வெறும் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது ரூ.50,000 கோடி நிதியில் பெரும் பங்கைத் தனியார் நிறுவனங்கள் தரும் என அரசு கைவிரித்துவிட்டது.
- ஒரு சில தனிநபர்கள் தமது விருப்பத்தின் பேரில் அறிவியல் ஆய்வுக்கு நன்கொடை அளித்ததைத் தவிர, இந்தியத் தனியார் நிறுவனங்கள் ஆய்வு முதலீட்டைச் செய்வதில்லை. இந்தத் திட்டம் முழு வடிவம் பெற்று செயல்படத் தொடங்காத நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்களுக்கு நிதி சீராக வருவதில்லை.
- ஒரு சில அறிவியலாளர்கள் தவிர, நிர்வாகம் முழுவதும் அரசு அதிகாரிகளைக் கொண்டுள்ள அமைப்பாக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளில் ஈடுபடும் உயர் கல்வி - ஆய்வு நிறுவனங்கள் தழைக்க சுயாட்சியும் கருத்துச் சுதந்திரமும் அவசியம். ஆனால், அதிகாரிகளின் தலையீடு, மையத்திலிருந்து நேரடிக் கட்டுப்பாடு போன்றவை அதிகரித்துவருகின்றன.
- பொக்ரான் அணுகுண்டு வெடிப்பின்போது பல ஆய்வாளர்கள் தங்களது கருத்து வேறுபாட்டை வெளியிட்டபோது, ‘விமர்சனப் பார்வை என்பது அறிவியல் ஆய்வுக்கு ஆக்ஸிஜன் போல’ எனக் கூறி, அன்றைய அரசு அறிவியல் ஆலோசகர் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க அனுமதி தரவில்லை.
- ஆனால், இன்று தாங்கள் எதிர்பார்த்தபடி களநிலையும் தரவுகளும் இல்லை என்கிறபோது, தகவல் திரட்டும் நிறுவனத் தலைவரை அதிரடி நீக்கம் செய்தது; ஜோஷிமட் பகுதியில் நிலம் சரிந்தபோது அது குறித்து வெளிப்படையாகத் தகவல்களை அளிக்கக் கூடாது என வாய்ப்பூட்டு போடப்பட்டது; ‘ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் அரசு ஊழியர்களே; எனவே அவர்கள் மீதும் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் பொருந்தும்’ எனக் கூறி அரசின் அறிவியல் கொள்கைகளை விமர்சிக்கும் ஆய்வாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது எனப் பல பிரச்சினைகள் தற்போது உள்ளன.
- எப்படி மீள்வது? - ஆய்விதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளில் 2012இல் வெறும் 3.7% மட்டுமே இந்திய ஆய்வாளர்களின் பங்களிப்பாக இருந்தது; இது 2022இல் 6.2%ஆக உயர்ந்து, உலகின் நான்காவது அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடும் நாடாக உருவாகியுள்ளது. எனினும் அமெரிக்கா (13.7%), சீனா (26.9%) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பின்தங்கியுள்ளோம்.
- மேலும் எண்ணிக்கை கூடியிருந்தாலும், அவற்றின் தரம் குறைந்துள்ளது. 2017 முதல் 2021 வரை, இந்தியாவின் 15% ஆராய்ச்சிகள் மட்டுமே இந்த உயர்நிலை இதழ்களில் மேற்கோள்களைப் பெற்றுள்ளன. நமக்கும் பின்னே இருந்த சீனா வெகுவேகமாக முந்திச் சென்று, இன்று அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வெகு விரைவில் அமெரிக்காவை விஞ்சிவிடும் எனக் கருதப்படுகிறது.
- எனினும், கடந்த பல பத்தாண்டுகளாகப் போடப்பட்ட அஸ்திவாரத்தில் நிலைத்து நிற்கும் பல உயர் கல்வி நிறுவனங்கள், இத்தகைய சவால்களைத் தாண்டி உருவாக்கி அனுப்பும் மாணவ-மாணவியருக்கு மேலை நாடுகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்காவின் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ-மாணவியரில் 29% பேர் இந்தியர்கள்.
- இந்நிலையில், அடுத்து அமையவிருக்கும் அரசு, இளம் மாணவ-மாணவியரின் உயர் கல்வியை உறுதிப்படுத்தி, ஆய்வு வசதிகளை விரிவுபடுத்தி, தேவையான நிதி, அறிவியல் வேலைவாய்ப்பை அதிகரித்து, அச்சுறுத்தல் இல்லாத சுதந்திரச் சிந்தனை சூழலை உருவாக்கிட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 04 – 2024)