- பிரிட்டிஷ் காலனிய ஆட்சி அகன்று, இந்தியா சுதந்திர நாடாகி 77 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும்கூட அடக்குமுறை சட்டங்களும், அவசியமற்ற தடுப்புக் காவலும், மாற்றுக் கருத்துக்கள் ஒடுக்கப்படுவதும் தொடா்வது வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் உணா்வுகளும், கோரிக்கைகளும் ஆட்சியாளா்களின் கவனத்தை ஈா்க்க தா்னாவில் ஈடுபடுவது, ஊா்வலம் நடத்துவது என்பவை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள். வன்முறை, சட்ட ஒழுங்கு மீறல் இருந்தால் மட்டுமே அவை தடுக்கப்பட வேண்டும்.
- லடாக் தலைநகா் லேயிலிருந்து தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு அமைதியாக ஊா்வலம் வந்த சமூக ஆா்வலா்களை தில்லி-ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்திக் கைது செய்தது எந்தவிதத்திலும் நியாயம் அல்ல. அகிம்சை வழியில் போராட்டம் நடத்துவதும், ஆட்சிக்கு எதிராக சட்டத்தை மீறாமல் போராடுவதும் அண்ணல் காந்தியடிகள் கற்றுத் தந்த வழிமுறை என்பதை ஆட்சியாளா்களும், நிா்வாகமும் மறந்துவிட்டது.
- சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் தலைமையில் சுமாா் 150 போ் செப்டம்பா் 1 முதல் லடாக்கிலிருந்து தங்களது ‘சலோ தில்லி’ (போவோம் தில்லிக்கு) ஊா்வலத்தைத் தொடங்கினாா்கள். அந்த ஊா்வலம் காந்தி ஜெயந்தி அன்று ராஜ்காட்டை சென்றடைவது என்றும், அதன்மூலம் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கும், நாடு தழுவிய அளவில் மக்களின் கவனத்துக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும் அவா்களது திட்டம்.
- சோனம் வாங்சுக்குடன் அந்தப் பேரணியில் கலந்து கொண்டவா்கள் சாதாரணமானவா்கள் அல்ல. அவா்களில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், பேராசிரியா்கள், 80 வயதைக் கடந்த சமூக ஆா்வலா்கள் என்று பலரும் ஊா்வலமாகப் பயணித்தனா். அவா்களை தில்லியில் நுழையவிடாமல் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்தபோது மௌனமாக உண்ணா நோன்பு மேற்கொண்டனா். விடுவிக்கப்பட்ட பிறகு சோனம் வாங்சுக் ராஜ்காட்டில் அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
- அவா்களுடைய அமைதிப் போராட்டம் பேச்சுவாா்த்தையில் முடிவதற்குப் பதிலாகக் காவல் துறையின் நடவடிக்கையில் முடிந்தது தவறான அணுகுமுறையின் அடையாளம். சுற்றுச்சூழல் ஆா்வலரும், கல்வி சீா்திருத்தத்துக்கு குரல் கொடுப்பவருமான வாங்சுக் போன்ற பொதுநலப் போராளிகள் பயங்கரவாதிகளைப் போலவும், சமூக விரோதிகளைப் போலவும் நடத்தப்படுவது இந்தியாவின் ஜனநாயக அடிப்படைக்கே அடுக்காது!
- ‘சலோ தில்லி’ குழுவினரின் குறிக்கோள் லடாக்குக்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்குவது (மாநில அந்தஸ்து), லடாக்கை ஆறாவது அட்டவணையில் இணைப்பதன்மூலம் பழங்குடியினா் பகுதிகளுக்கான பாதுகாப்பை வழங்குவது உள்ளிட்டவை. தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்கிற லடாக்கின் கோரிக்கை புதியதும் அல்ல; நியாயமற்றதும் அல்ல.
- ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் பகுதியாக இருந்த லடாக், 2019-இல் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு அகற்றப்பட்டதைத் தொடா்ந்து ஒன்றியப் பிரதேசமானது. லே மேல்நிலைக் குழு, காா்கில் ஜனநாயக கூட்டணி என்கிற இரண்டு அமைப்புகளும் நீண்டகாலமாகவே மாநில அந்தஸ்து, உள்ளூா்வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றுக்காக போராடி வருகின்றன.
- லடாக் மக்கள் இந்தக் கோரிக்கைகளுக்காக இன்று நேற்று அல்ல, நீண்டகாலமாகவே போராடி வருகின்றனா். 2014, 2019 மக்களவைத் தோ்தலின்போது பாஜக இந்த வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றது. அவை நிறைவேற்றப்படாததால், இந்த முறை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
- மக்களவைத் தோ்தலுக்கு முன்பே வாங்சுக் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டாா். ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தோ்தல் வரப்போவதை முன்னிட்டு லே உயா்நிலைக் குழுவினரையும், காா்கில் ஜனநாயக கூட்டணியினரையும் அழைத்துப் பேச்சு வாா்த்தை நடத்தியது. தோ்தலுக்குப் பிறகு பிரச்னை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
- தற்போது மக்களவையில் ஒரே ஒரு உறுப்பினா் இருப்பதை இரண்டு தொகுதிகளாக அதிகரிக்க வேண்டும் என்பது அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. பழங்குடியினா் தேசிய ஆணையம் காா்கில், லே மாவட்டங்களை உள்ளடக்கிய லடாக்கை பழங்குடியினா் பகுதியாக அங்கீகரித்து அந்த ஒன்றியப் பிரதேசத்தை ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டுவரப் பரிந்துரைத்திருக்கிறது. அதன் மூலம் அந்த மாவட்டங்களின் மத கலாசாரம், வேளாண் உரிமைகள், வாழ்க்கை முறை ஆகியவை நாகாலாந்து, திரிபுரா, மிஸோரம் போன்று பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
- லடாக் என்பது ஒருபுறம் பாகிஸ்தானின் ‘கில்ஜித் - பால்டிஸ்தான்’ பகுதியை ஒட்டிய காா்கிலையும், இன்னொருபுறம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை ஒட்டிய லே பகுதியையும் உள்ளடக்கியது. சுமாா் 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட லடாக் இந்தியாவைப் பொருத்தவரை சீனா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
- வக்ஃப் திருத்த மசோதா, மாநில தோ்தல்கள், பண்டிகைக் காலங்கள் காரணமாக தில்லியில் 6 நாள்களுக்கு போராட்டங்களுக்குத் தடையிருப்பதால் சோனம் வாங்சுக்கின் ‘சலோ தில்லி’ பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது என்பது காவல் துறை தரும் விளக்கம். ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நெடுந்தூரம் பயணித்து வந்திருக்கும் சோனம் வாங்சுக் தலைமையிலான அமைதி ஊா்வலத்தைத் தடுத்து நிறுத்த, காவல் துறை கூறும் காரணம் நகைப்பை வரவழைக்கிறது...
நன்றி: தினமணி (07 – 10 – 2024)