TNPSC Thervupettagam

எப்படி இருக்கிறது இந்தியப் பணியாளர்களின் நிலை

October 2 , 2023 460 days 318 0
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு மாற்றம் ஆகியவை பற்றியும், பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இவற்றின் மூலம் எவ்வாறு பலன்கள் கிடைத்தன உள்ளிட்டவை குறித்தும் ‘இந்தியப் பணியாளர்களின் நிலை 2023’ [State of Working India 2023 (SWI)] அறிக்கை அறியத் தருகிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நீண்ட காலப் பார்வையை (1983-84 முதல் 2021-22 வரை) முன்வைக்கிறது. அறிக்கை யின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
  • அறிக்கையின் சுருக்கம்: வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் வளர்ச்சி செயல்முறைகளின் நிலையான மாதிரிகளை இந்திய வளர்ச்சி அனுபவம் பின்பற்றவில்லை என்பதை விரிவான-வலுவான தரவுப் பகுப்பாய்வு மூலம் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • விவசாயத்திலிருந்து நவீன உற்பத்திக்குப் பொருளாதாரம் மாறிவருவதைக் குறிப்பது ‘கட்டமைப்பு மாற்றக் கோட்பாடு’ ஆகும்; பொருளாதாரம் வளரும்போது சேவைத் துறைக்கு மாறுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் முற்போக்கான கட்டங்களைக் குறிக்கிறது. இதைப் பார்ப்பதற்கான மற்றொரு வழி, எத்தனை சதவீதத் தொழிலாளர்கள் சுயதொழில் அல்லது சாதாரண வேலையிலிருந்து சம்பளம் பெறும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள் என்பதை மதிப்பிடுவது.
  • இந்த அறிக்கை, இந்தியாவின் கட்டமைப்பு மாற்றத்தின் அனுபவத்தில் இந்தச் செயல்முறைகள் எவ்வாறு வெளிப்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வேலையில்லா வளர்ச்சி

  • பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிக வளர்ச்சி, வேலைவாய்ப்பின் அதிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மாறாக, இந்தியப் பொருளாதாரம் வேலையில்லா வளர்ச்சியுடன் (jobless growth) மெதுவான கட்டமைப்பு மாற்றத்துடன் கூடிய புதிரான கலவையை வழங்குகிறது.
  • இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும் இடையே மிகவும் பலவீனமான எதிர்மறை உறவு உள்ளது (தொடர்பு குணகம் - 0.11). வளர்ந்துவரும் பிற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில், வளரும் நாடுகளுக்கான சராசரித் தொடர்புக் குணகம் 0.3 ஆகும்; அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கும் இடையே சராசரியாக நேர்மறையான உறவு உள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியின் எந்த மட்டத்திலும், ஒரு குறிப்பிட்ட துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடைய பங்கில் ஏற்படும் சதவீத மாற்றத்தின் மூலம் இந்தத் தொடர்புகளை நாம் ஆராயலாம். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகும்பட்சத்தில், வேலைவாய்ப்புத் துறையின் பங்கு எப்படி மாறுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.
  • அகில இந்திய அளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகும்போது, விவசாய வேலைவாய்ப்பு -15.5% குறைவதைக் காண்கிறோம். அதே நேரத்தில், உற்பத்தித் துறையில் 0.99%, கட்டுமானத் துறையில் 6.45%, பாரம்பரிய சேவைகளில் 5%, நவீன சேவைகளில் 3.58% என வேலைவாய்ப்பு மாற்றம் உள்ளது. மொத்த-சில்லறை விற்பனை, போக்குவரத்து போன்ற துறைகளை உள்ளடக்கியது பாரம்பரிய சேவை. அதேபோல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியது நவீன சேவை.
  • இந்திய வளர்ச்சி அனுபவத்தில், பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பாக மாறாததற்கு ஒரு காரணம் உற்பத்தித் துறையின் பலவீனமான வளர்ச்சியே. மேலும், விவசாயத்தைவிட்டு வெளியேறும் தொழிலாளர்களை இங்கு உள்வாங்குவது உற்பத்தித் துறை அல்ல; கட்டுமானம், பாரம்பரிய-நவீன சேவைத் துறைகள்தான்; இந்த வகையில், இந்தியாவின் கட்டமைப்பு மாற்ற செயல்முறை வேறுபட்டிருக்கிறது.
  • ஆனால், பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம் இங்கெல்லாம் கட்டுமானத் துறை முதலிடத்தில் உள்ளது; அதைத் தொடர்ந்து பாரம்பரிய-நவீன சேவைகள் உள்ளன. அதேவேளை மகாராஷ்டிரம், டெல்லி, கோவா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை நவீன சேவைகளுக்கான முன்னணிப் பகுதிகளாக உள்ளன.
  • கர்நாடகத்தில், நவீன சேவைகளும் குஜராத்தில் உற்பத்தித் துறையும் முன்னணியில் உள்ளன. கேரளத்தில், கட்டுமானத்துக்கு அடுத்தபடியாக நவீன சேவைகள் உள்ளன. சாதி அடிப்படையில் பார்த்தால், கட்டுமானத் துறையில் பட்டியல் சாதித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர், உயர் சாதியினர் ஆகியோர் பாரம்பரிய-நவீன சேவைகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
  • உற்பத்தித் துறைகளுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் ஈடுபடும் வேலையின் தன்மையின் அடிப்படையில் கட்டமைப்பு மாற்றத்தைப் பார்த்தால், வளர்ந்த நாடுகளுடனான வேறுபாடு தெளிவாகத் தெரியும். நிலையான கட்டமைப்பு மாற்றக் கோட்பாடு - வளர்ந்த நாடுகளின் அனுபவத்துக்கு மாறாக, இந்தியாவில் விவசாயத்தைவிட்டு வெளியேறும் தொழிலாளர்கள், முறைசாரா வேலைகளுக்கும் பாரம்பரிய சேவைகளுக்கும் செல்கிறார்கள்.

தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம்

  • நீண்ட காலக் கண்ணோட்டத்தைப் பெற, தலைமுறைகளுக்கு இடையேயான இயக்கம் பற்றிய பகுப்பாய்வு உதவுகிறது. 2004-2018க்கு இடைப்பட்ட காலத்தில், தந்தையின் வேலையினுடைய தன்மையை மகனின் வேலையினுடைய தன்மையுடன் ஒப்பிடலாம். 2004இல், தமிழ்நாட்டில் 72% தந்தை-மகன் இணைகள் சாதாரண கூலிவேலையில் இருந்தனர். ஆனால் 2018இல் அது 43%ஆகக் குறைந்துள்ளது.
  • மறுபுறம், பிஹாரில் சாதாரணத் தொழிலாளர் வேலையின் சதவீதம், 2004இல் 96%ஆக இருந்தது, 2018இல் 82%ஆக மிக மெதுவாகவே குறைந்துள்ளது. இந்தியாவில் கட்டமைப்பு மாற்றத்தின் ஒட்டுமொத்த வேகம், மாநில அளவிலான அனுபவங்களில், பரந்த வேறுபாடுகளுடன் மெதுவாகவே நடந்துள்ளது.

பாலினப் பார்வை

  • விவசாயத்தில் பெண்களின் வேலை வீழ்ச்சிக்குக் காரணங்களாக இயந்திரமயமாக்கல், குடும்பத்தில் ஒரு பராமரிப்பாளராக பெண்களின் பங்கை பாலின விதிமுறைகள் வரையறுப்பது ஆகியவை முன்வைக்கப்படுகின்றன.
  • 2004-2017க்கு இடையில் விவசாயத்தில் ஆண்களின் பங்களிப்பும் வீழ்ச்சியடைந்தது. ஆனால், அது விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பின் அதிகரிப் பால் ஈடுசெய்யப்பட்டது. ஆனால், பெண்களுக்கு அப்படி நேரவில்லை. 2004-2011 இடையே விவசாயம் அல்லாத வேலைகள் அதிகரித்தன. ஆனால், அது விவசாய வேலைகளின் வீழ்ச்சியை ஈடுசெய்யவில்லை. மொத்தத்தில், 2004 முதல் 2017 வரையிலான காலகட்டத்தைப் பார்த்தால், 2011இலிருந்து 2017க்குள் இரண்டு வகையான வேலைவாய்ப்புகளும் முற்றிலும் குறைந்துவிட்டன. விவசாயத்தைவிட்டு வெளியேறும் பெண்கள், ஊதியமற்ற வீட்டுவேலைக்குச் சென்றனர் அல்லது சுயதொழிலில் ஈடுபட்டனர்.
  • இது ஒட்டுமொத்த இந்தியாவின் தரவு. இதில் பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கிராமப்புறப் பெண்கள் கல்வியில் நுழைவதன் மூலம் (4.96%) பெண்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதை (-4.78%) ஈடுகட்டுவதில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது. இருப்பினும், பிஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கல்வியைவிட வீட்டுவேலைகளிலேயே பெண்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள். உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில், கிராமப்புறப் பெண்கள் விவசாயத்திலிருந்து வெளியேறும் சதவீதத்தைவிட (-10.9%) ஊதியம் இல்லாத வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்களின் சதவீதம் (11.2%) அதிகம்.
  • இ.ப.நி. 2023 அறிக்கையின் விரிவான ஆய்வு, இந்தியாவில் உள்ள கட்டமைப்பு மாற்றத்தின் நீண்ட கால வளர்ச்சிப் பாதை, நிலையான கட்டமைப்பு மாற்றக் கோட்பாடு, வளர்ச்சியடைந்த நாடுகளின் அனுபவம் சார்ந்த கணிப்புகளிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும், தரவுகள் சார்ந்த விரிவான-வலுவான பகுப்பாய்வு மூலம் பாலினம், சாதி, மதம் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கு இத்தகைய பாதையால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த அறிக்கை தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; வளர்ச்சிக் கொள்கை விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும், அறிக்கையின் விரிவான தரவுப் பகுப்பாய்வு பொருளியல் மாணவர்களுக்குச் சிறந்த கற்பித்தல் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்