TNPSC Thervupettagam

எப்படி எழுதுவது?

August 14 , 2024 152 days 138 0

எப்படி எழுதுவது?

  • ‘எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுங்களேன் ஆர்வெல்’ என்று கேட்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள். எப்போதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமல்ல, தோன்றாத பொழுதுகளிலும் அமர்ந்து எழுதுங்கள்.
  • கதை, கவிதை, அரசியல், அறிவியல் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. யாருக்கு எழுதுவது, எதற்கு எழுதுவது, என்ன பயன் என்று எல்லாம் யோசிக்காமல் எழுதிக்கொண்டே இருங்கள். உங்கள் நண்பருக்காகவோ ஆசிரியருக்காகவோ அம்மாவுக்காகவோ அப்பாவுக்காகவோ அல்ல, உங்களுக்கே உங்களுக்காக எழுதுங்கள். ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் எனும் கனவோடு அல்ல, ‘எப்போது எழுத ஆரம்பித்தேனோ அப்போதே எழுத்தாளன் ஆகிவிட்டேனாக்கும்’ எனும் உறுதியான நம்பிக்கையோடு எழுதுங்கள்.
  • சிரிப்பவர்களை, கிண்டல் செய்பவர்களை, எதிர்ப்பவர்களைக் கண்டும் காணாமல் நகர்ந்துவிடுங்கள். எனது முதல் கவிதையை நான் நான்கு வயதில் எழுதினேன். புலி பற்றிய கவிதை. ஏன் புலி? தெரியாது. ஏதாவது உயிரிர்க் காட்சிச் சாலையில் அதை நான் பார்த்திருக்கலாம். அல்லது யாராவது ஒருவர் புலி பொம்மை வாங்கி வந்து எனக்கு விளையாடக் கொடுத்திருக்கலாம். ஏதாவது ஒரு புத்தகத்தில் புலியின் உருவத்தைப் பார்த்திருக்கலாம். எப்படியோ அந்த உருவம் என் மனதுக்குள் நுழைந்துவிட்டது. வரி, வரியான அதன் மஞ்சள் தோல் என்னை ஈர்த்திருக்கலாம். என் கையிலும் காலிலும் ஏன் அழகான கோடுகள் இல்லை என்று நினைத்து ஏங்கியிருக்கலாம். இந்தக் குட்டிப் புலியை ஏன் கூண்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று கவலைப்பட்டிருக்கலாம். நாய், பூனை மாதிரி ஏன் யாரும் வீட்டில் புலி வளர்க்கவில்லை என்று யோசித்திருக்கலாம்.
  • கவிதை நினைவில்லை. ஆனால், புலியின் பல் நாற்காலிபோல் இருந்தது என்னும் வரி மட்டும் என் நினைவில் தங்கி இருக்கிறது. நான்கு பக்கமும் நீண்டிருக்கும் நாற்காலியின் கால்களைப் புலியின் பற்களாக நான் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தை எப்படிக் கற்பனை செய்கிறது என்பதை மட்டுமல்ல, எப்போது கற்பனை செய்யத் தொடங்குகிறது என்பதையும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ‘ஆ, எப்படி மின்னுகிறது பார்’ என்று மின்னலைக் கண்டு வியக்கும் ஒரு குழந்தை நாளை என்னவாக வேண்டுமானாலும் வரலாம். நான் கண்ட அற்புதத்தைத் தவறவிடக் கூடாது, மின்னலை எப்படியாவது கைப்பற்றிச் சொற்களுக்குள் அடக்கிவிட வேண்டும் என்று நினைக்கும் ஒரு குழந்தையால் எழுத்தாளராக மட்டுமே வர முடியும்.
  • மகிழ்ச்சி என்பது எதையும் ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது.
  • - ஜார்ஜ் ஆர்வெல், புகழ்பெற்ற எழுத்தாளர்
  • நான் எழுத்தாளன் ஆனதுஎனது முதல் புத்தகம் வெளிவந்த போது அல்ல. என் மூளையில் தோன்றிய கற்பனையை விரல்கள் வழியே தாளில் இறக்கிவைத்த அந்தத் தருணத்தில்தான். என் கற்பனை வளர, வளர நான் எழுதும் தாள்கள் பெருக ஆரம்பித்தன. வாசிக்கும் புத்தகங்கள் பெருகத் தொடங்கின. கவிதையில் தொடங்கி கதை, கட்டுரை என்று விரித்துக்கொண்டே சென்றேன். என் எழுத்து எனக்குப் பிடித்துப்போனது. என் கவிதை நான் விரும்பி வாசித்த கவிஞர்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்தது. நான் ரசித்து வாசித்த கதைகளில் நிறைந்திருந்த அதே மணம், அதே சுவை என் கதைகளிலும் மிகுந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நடை என் கட்டுரைகளிலும் அழுத்தமாகப் படிந்திருந்ததைக் கண்டபோது ‘ஆ, நான் மெய்யாகவே எழுத்தாளன் ஆகிவிட்டேன்’ என்று துள்ளிக் குதித்தேன்.
  • இல்லை, நான் இன்னும் எழுத்தாளன் ஆகவில்லை. அந்தத் திசை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறேன், அவ்வளவுதான் என்பதை உணர்வதற்கு எனக்கு நீண்ட காலம் பிடித்தது. அந்த உணர்வு தோன்றியபோது என் துள்ளல் அடங்கிப் போனது. அதுவரை எழுதிக் குவித்த அனைத்தையும் எடுத்து இன்னொருமுறை பொறுமையாக வாசித்தபோது, என் குறைகளை எல்லாம் உணர்ந்துகொண்டேன்.
  • அவரைப் போலவோ இவரைப் போலவோ அல்ல, என் எழுத்து என்னுடையதைப் போல் இருக்க வேண்டும். அங்கிருந்தும் இங்கிருந்தும் பெற்ற வரிகளை அல்ல, நான் எழுதுபவை என் வரிகளாக இருக்க வேண்டும். என் கட்டுரையில், என் கதையில், என் அரசியலில் என் மனம்தான் நிறைந்திருக்க வேண்டும். என் கரங்கள் என் உணர்வுகளையே பதிவு செய்ய வேண்டும். நான் எழுதிய எல்லாவற்றிலும் நான் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைவிட, என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கத்தான் எனக்கு நீண்ட காலம் பிடித்தது.
  • நான் தெரிந்துகொண்டது இதைத்தான். அழகாக எழுதுவதைவிட, அறிவுபூர்வமாக எழுதுவதைவிட முக்கியமானது உண்மையாக எழுதுவது. நான் எனக்கு உண்மையாக இருக்கும்போது என் எழுத்து என்னைப் போல் இருக்கும். நான் என் சமூகத்துக்கு உண்மையாக இருக்கும்போது என் எழுத்தில் கூர்மை கூடும். நான் யார் பக்கம் நிற்கிறேன், எதை ஆதரிக்கிறேன், யாருக்காக எழுதுகிறேன் என்னும் தெளிவைப் பெறும்போது என் எழுத்தில் உறுதிகூடும். நான் அச்சமற்றவனாக இருக்கும்போது, என் எழுத்தில் உண்மை சேரும். என் உலகை என் கண்களால் மட்டும் கண்டு நான் எழுதும்போது என் எழுத்தில் உலகம் தெரியும். என் கற்பனை என்னுடையதாக மட்டும் இருக்கும்போது என் கதையில் உயிர் தோன்றும்.
  • ஒரு நாற்காலியில் புலியின் பற்களை என்னால் மீண்டும் காண முடியும்போது நான் எழுத்தாளனாக மாறி இருப்பேன்!

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்