- ஒரு நாற்காலியை ஓர் அறையிலிருந்து இன்னோர் அறைக்கு நகர்த்தி வருவதுபோல்; ஒரு பேனாவை மேஜையில் இருந்து எடுத்துச் சட்டைப் பையில் வைப்பதுபோல்; ஒரு பூவைப் பறித்து ஜாடியில் செருகி வைப்பதுபோல் ஒரு சொல்லை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்த முடியாது.
- உன்னாலுமா ராமானுஜன் என்றால் ஆம், என்னாலும் தான். ஒரு மொழியில் அமர்ந்திருக்கும் ஒரு சொல்லை இன்னோர் மொழிக்குக் கொண்டு செல்வது எளிதல்ல. ஏன், சாத்தியமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆவதற்கு என்னென்ன எல்லாம் செய்தேன் தெரியுமா? சில சொற்கள் சமர்த்துக் குழந்தைகள்.
- செல்லக்குட்டி, வெல்லக்கட்டி என்று கன்னத்தைப் பிடித்து அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டிக் கொஞ்சினால், தாவி வந்து மடியில் அமர்ந்துகொள்ளும். சில சொற்கள் கிட்டே வரும்போதே முகத்தைத் திருப்பிக்கொள்ளும். ‘நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னைப் பார்த்தால் உனக்கே பாவமாக இல்லையா? இந்த ஒருமுறை மட்டும் தயவுசெய்து வந்தால் என்ன’ என்று மனம் உருகி ஒரு நாள், இரண்டு நாள் தொடர்ந்து கெஞ்சினால் போனால் போகட்டும் என்று அசைந்து கொடுக்கும்.
- கடுவன் பூனைச் சொற்கள் என்று சில இருக்கின்றன. அழகாக இருக்கும். அடர்த்தியாக இருக்கும். ஆனால் முகம் என்னவோ எப்போதும் உர்ரென்று இருக்கும். கிட்டே போனால் கூர்மையான நகங்களை நம் பக்கமாக நீட்டி நன்றாகச் சீறும். ‘யார் நீ? என்ன வேண்டும்? என்ன துணிச்சல் இருந்தால் என்னை நோக்கி வருவாய்? நான் யார் தெரியுமா? என் அருமை பெருமை புரியுமா? போ, இடத்தைவிட்டுக் கிளம்பு!’ அதுவும் நகராது.
- நம்மையும் நகர விடாது. தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல், படிக்க முடியாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ‘மியாய் மியாவ்’ என்று மனதுக்குள் உட்கார்ந்து கத்திக்கொண்டே இருக்கும். இவற்றை வரவழைப்பதற்குள் உயிர் போய், உயிர் வந்துவிடும்.
- உரைநடைகூடப் பரவாயில்லை. கொஞ்சியும் கெஞ்சியும் கொண்டு வந்துவிடக்கூடிய குழந்தைகள். கவிதை இருக்கிறது, பாருங்கள். முழுக்க, முழுக்க கடுவன்கள் மட்டுமே நிறைந்திருக்கும் நிலம் அது. எவ்வளவு அழகோ அவ்வளவு கடினம். எவ்வளவு ஆழமோ, எவ்வளவு அடர்த்தியோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்மைப் பெயர்த்து எடுத்துவிடும். சங்க இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்வதற்கு நான் திணறிய திணறல் எனக்கு மட்டும்தான் தெரியும். தமிழில் வாசிக்க அவ்வளவு இனிமையாக இருக்கும். ஆங்கிலத்துக்கு நகர்த்த ஆரம்பித்தால் உடலும் உலகும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்துவிடும்.
- ஒரு தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்துக்கு எடுத்துச்செல்வது என்பது வெறும் மொழி தொடர்பானது மட்டுமல்ல. யாருக்கு எல்லாம் இந்த இரண்டு மொழிகளும் தெரியுமோ அவர்கள் எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஆகிவிட முடியாது. மொழியில் புலமை வேண்டும், ஆம். ஆனால் அது மட்டும் போதாது. எந்த நிலத்தில் இருந்து ஒரு சொல்லை நாம் எடுக்கிறோமோ அந்த நிலத்தை நாம் அறிய வேண்டும். அந்த நிலத்தில் வாழும் மனிதர்களை நாம் நெருங்க வேண்டும்.
- அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கற்க வேண்டும். அவர்களுடைய கனவுகளை, வலிகளை, இன்பங்களை, எதிர்பார்ப்புகளை, சிந்தனைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களுடைய பறவைகளோடும் விலங்குகளோடும் பூச்சிகளோடும் பழக வேண்டும். அவர்களுடைய மலை, கடல், ஆறு, மரம், செடி, மலர் அனைத்தும் நம்முடையவை ஆக வேண்டும்.
- எடுத்துச் செல்ல வேண்டிய மொழிக்கும் இது பொருந்தும். ஆங்கில நிலம். ஆங்கில வாழ்க்கை. ஆங்கிலக் கலை. ஆங்கிலக் கனவுகள். ஆங்கிலப் பறவைகள், விலங்குகள், தாவரங்கள். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு சொல்லிலும் ஒரு வரலாறு வாழ்கிறது. ஒரு பண்பாடு வாழ்கிறது. ஒரு கனவு வாழ்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல் தோன்றிய நிலத்தின் மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணின் ஒரு துளியைக்கூடச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அள்ளி இன்னொரு நிலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
- ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதுக்கு. ஒரு பண்பாட்டில் இருந்து இன்னொரு பண்பாட்டுக்கு. ஒரு வரலாற்றில் இருந்து இன்னொரு வரலாற்றுக்கு. ஓர் உலகில் இருந்து இன்னோர் உலகுக்கு. அதே அழகு. அதே கனம். அதே வாசம். அதே உணர்வு. அதே மகிழ்ச்சி. அதே துக்கம். அதே ஏக்கம். அதே வலி. ஓர் இதயத்திலிருந்து இன்னோர் இதயத்துக்குச் சென்றாக வேண்டும். நேர்மையாகவும் அழகாகவும்.
- பார்க்க மிக எளிதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு சொல்லும் கனமானது. அந்தக் கனத்தைச் சுமந்துசெல்லும் வலுவை ஒரு மொழிபெயர்ப்பாளர் பெற வேண்டும். அந்த வலு எப்படிக் கிடைக்கும்? நிறைய படிப்பதன் மூலம். நிறைய கற்பதன் மூலம். நிறைய ரசிப்பதன் மூலம். மனத்தை முடிந்த அளவுக்கு அகலமாகத் திறந்து வைத்திருப்பதன் மூலம். மற்ற பண்பாடுகளோடு, மற்ற நம்பிக்கைகளோடு, மற்ற நிலங்களோடு தொடர்ந்து உரையாடுவதன் மூலம். ஆர்வத்தோடு எதையும் எப்போதும் தேடிக்கொண்டே இருப்பதன் மூலம்.
- நிறைய, நிறைய உழைப்பதன் மூலம். எண்ணற்ற பிழைகள் செய்வதன் மூலம். அந்தப் பிழைகள் அனைத்திலிருந்தும் பாடம் படித்துக்கொள்வதன் மூலம். பலவிதமான அனுபவங்களைப் பெறுவதன் மூலம். புதிது புதிதாகக் கற்று மூளையைத் துடிதுடிப்பாக வைத்திருப்பதன் மூலம். அன்போடும் கருணையோடும் உலகை அணைத்துக் கொள்வதன் மூலம். மொழிபெயர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் அது சுமந்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நேர்மையாக இருப்பதன் மூலம். நாமும் நம் பணியும் எளிமையாக இருப்பதன் மூலம்.
- மைசூரில் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய 5 மொழிகளை ஆராய்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு பெருமளவில் முயற்சி செய்திருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2024)