TNPSC Thervupettagam

எம்மெட் டில்லின் மரணமும் இன்றுவரை தொடரும் இனவெறியும்!

August 29 , 2020 1603 days 725 0
  • அது 1955-ம் ஆண்டு. அமெரிக்காவின் சிகாகோ நகரம். ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் சடலம் திறந்த சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது. அந்த உடலைப் பார்த்த பலர் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர். சிலர் அதிர்ச்சியில் மயங்கி விழுகின்றனர். ஆம், அது மனித உடல் என்று அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுவனின் பெயர் எம்மெட் டில்.
  • வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்ட கறுப்பின அப்பாவிகளில் அவனும் ஒருவன். ஆனால், அவனது கொடூர மரணமும், அந்த மரணத்துக்குக் கிடைக்காத நீதியும் அமெரிக்க வரலாற்றின் அவலப் பக்கங்களில் ஒன்றாக நிலைத்துவிட்டிருக்கின்றன.
  • சிகாகோ நகரைச் சேர்ந்த எம்மெட் டில்லுக்கு அப்போது 14 வயதுதான். 1955 ஆகஸ்ட் மாதம், கோடை விடுமுறைக்காக மிசிஸிபியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்தான்.
  • வட அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தின் சிகாகோ நகரில் வளர்ந்தவனான தன் மகன், தென் கோடியில் உள்ள மிசிஸிபி மாநிலத்தின் ஒரு சிறு நகரத்துக்குச் செல்வது குறித்து அவனது தாயாரான மாமீ டில்லுக்கு உறுத்தல் இருக்கவே செய்தது.
  • தெற்கில் இனவெறி அதிகம் என்பதை நன்றாக அறிந்திருந்த அவர், ‘வெள்ளையர்களிடம் அநாவசியமாகப் பேச வேண்டாம்; அவர்களது முகத்தை ஏறிட்டுப் பார்க்க வேண்டாம்என்றெல்லாம் எம்மெட்டிடம் சொல்லிவைத்திருந்தார்.
  • ஆனால், வெள்ளையின வெறி தன் மகனை முற்றிலுமாகத் தன்னிடமிருந்து பறித்துவிடும் என்பதை அந்த அப்பாவித் தாய் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெள்ளையின வெறி

  • மனி (Money) எனும் சிறுநகரத்தில் இருந்த ஒரு பல்பொருள் அங்காடிக்குத் தன் உறவினர்களுடன் சென்றிருந்தான் எம்மெட்.
  • அங்கு சில பொருட்களை வாங்கிவிட்டுத் திரும்பும்போது தன்னைப் பார்த்து எம்மெட் விசிலடித்ததாகவும், ஆபாசமாக நடந்துகொண்டதாகவும் கல்லாவில் இருந்த கரோலின் பிரையான்ட் எனும் பெண் புகார் சொன்னாள்.
  • ஓரிரு நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 28 அதிகாலை 2 மணிக்கு அவளது கணவரும் அங்காடியின் உரிமையாளருமான ராய் ப்ரையான்ட், தனது உறவினர் ஜே.டபிள்யூ.மைலமுடன் எம்மெட்டின் தாத்தா வீட்டுக்குள் புகுந்தார். தூங்கிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கட்டிப்போட்டு, தங்கள் வேனின் பின்புறம் வைத்துக் கடத்திச் சென்றனர் இருவரும்.
  • சக மனிதனை, அதுவும் 14 வயதேயான பாலகனை அவர்கள் சித்திரவதை செய்து கொன்ற விதத்தைப் பிற்பாடு அறிந்து உறைந்து நின்றது அமெரிக்கா.
  • அவனது நாக்கு பிடுங்கப்பட்டிருந்தது. ஒரு கண்ணைக் காணவில்லை. மற்றொரு கண் பிடுங்கப்பட்டு கன்னத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. உடல் முழுவதும் காயங்கள். இத்தனைக் கொடுமைக்குப் பிறகும் அவனின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்ட அந்த வெறியர்கள், அருகில் உள்ள தல்லாஹட்சி ஆற்றில் சடலத்தை வீசியெறிந்தனர்.
  • மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர்தான் எம்மெட்டின் உடலைக் கண்டார். அவன் அணிந்திருந்த மோதிரத்தை வைத்துத்தான் அவனது குடும்பத்தினராலேயே அவனை அடையாளம் காண முடிந்தது.
  • ராய் ப்ரையான்ட்டும், ஜே.டபிள்யூ.மைலமும் கைதுசெய்யப்பட்டு நீதிக்கு முன்னர் நிறுத்தப்பட்டனர். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து நடந்த நீதிமன்ற விசாரணையில் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.
  • உண்மையில் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெள்ளையினத்தவர்கள் நிரம்பிய நீதிமன்றம், சில மணிநேர விசாரணையிலேயே அவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் எனும் முடிவுக்கு வந்தது.

ஓர் அன்னையின் கண்ணீர்

  • தனது மகனின் கொடூர மரணத்தால் நிலைகுலைந்திருந்த மாமீ டில், தென் மாநில மண்ணில் தனது மகன் புதைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எம்மெட்டின் உடலைச் சிகாகோவுக்குக் கொண்டுவந்தார். சி
  • காகோவில் எம்மெட்டின் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு, புறநகர்ப் பகுதியான ஆல்ஸிப்பில் உள்ள பர் ஓக் மயானத்தில் அவனது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையை வெளியுலகின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தீர்மானத்துடன் இருந்தார் மாமீ டில். உருக்குலைக்கப்பட்ட எம்மெட்டின் சடலம் வெளியில் தெரியும் வகையில், சவப்பெட்டியைத் திறந்த நிலையிலேயே வைத்து இறுதி ஊர்வலத்தை நடத்தினார்.
  • என் மகனுக்கு நேர்ந்ததை மக்களே பார்த்துக்கொள்ளட்டும்என்று அறிவித்தார். கறுப்பினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
  • உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருந்த அந்த உடலைப் பார்த்தபோது அவர்களுக்குத் தங்களையே பார்த்துக்கொண்டதுபோல்தான் இருந்தது.
  • கறுப்பினத்தவர்கள் நடத்திவந்த ஜெட்’, ‘சிகாகோ டிஃபெண்டர்ஆகிய பத்திரிகைகள், புன்னகை முகத்துடன் இருக்கும் எம்மெட் டில்லின் பழைய படத்தையும், அவனது சடலத்தின் படத்தையும் அருகருகே பிரசுரித்தன.
  • அதைப் பார்த்த பலரும் தாங்க முடியாத துயரத்திலும் கோபத்திலும் ஆழ்ந்தனர். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இதுபோல ஏராளமான படுகொலைகள் நடந்திருக்கின்றன. எனினும், எம்மெட் கொல்லப்பட்ட விதமும், கொலையாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்ட விடுதலையும் கறுப்பின மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தின.

சிவில் உரிமை இயக்கத்தின் உத்வேகம்

  • 1955 நவம்பரில் அலபாமா மாநிலத்தின் மன்ட்கோமரியில் உள்ள டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலயத்தில், எம்மெட்டின் மரணம் குறித்து, சிவில் உரிமைச் செயற்பாட்டாளரும் புகழ்பெற்ற மருத்துவருமான டி.ஆர்.எம்.ஹோவர்டு உரையாற்றினார்.
  • எம்மெட்டைக் கொன்ற வெள்ளையர்கள் தண்டனையின்றித் தப்பியதை மனக்குமுறலுடன் எடுத்துரைத்தார். எம்மெட்டின் மரணம் குறித்த பல்வேறு தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் அவர்தான்.
  • அந்தத் தேவாலயத்தின் போதகராக இருந்தவர் 26 வயதேயான மார்ட்டின் லூதர் கிங். சிவில் உரிமை இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுக்க மார்ட்டின் லூதர் கிங்குக்கு உத்வேகம் தந்த நிகழ்வுகளில் ஒன்று அது.
  • தேவாலயத்தின் இருக்கைகளில் அமர்ந்து அந்த உரையைக் கேட்ட ரோஸா பார்க்ஸ் எனும் கறுப்பினப் பெண்ணின் மனதுக்குள்ளும் தீக்கனல் கொழுந்துவிட்டிருந்தது.
  • சில நாட்களுக்குப் பின்னர், (1955 டிசம்பர் 1), மன்ட்கோமரி நகரப் பேருந்தில் வெள்ளையினப் பயணிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ரோஸா பார்க்ஸ், அந்த இருக்கையை ஒரு வெள்ளையினப் பயணிக்கு விட்டுத்தருமாறு ஓட்டுநர் விடுத்த ஆணையைப் புறக்கணித்தார்.
  • பெரும் சர்ச்சையாக வெடித்த அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்துகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் கறுப்பின மக்கள் குதித்தனர்.
  • சிவில் உரிமை இயக்கம் மேலும் உத்வேகம் பெற்றது. பேருந்தில் இன அடிப்படையில் இருக்கை ஒதுக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • வெள்ளையினத்தைச் சேர்ந்தவருக்கு இருக்கையை விட்டுத்தர மறுத்த கணத்தில், தன் மனதில் இருந்தது எம்மெட்டின் நினைவுகள்தான் என்று பதிவு செய்திருக்கிறார் ரோஸா பார்க்ஸ்.
  • கறுப்பினத்தைச் சேர்ந்த கலைஞர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் எம்மெட்டின் மரணம் குறித்த தகவல்கள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மறுக்கப்பட்ட நீதி

  • கறுப்பின மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உத்வேகத்தை எம்மெட்டின் மரணம் தந்திருந்தாலும், அவனது படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
  • தனது மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு, சட்ட அமைப்புகளின் கதவுகளை இறுதிவரை தட்டிக்கொண்டே இருந்தார் மாமீ டில். ஆனால், 2003-ல் அவர் மறையும் வரை அவருக்கு நீதி கிடைக்கவேயில்லை.
  • எம்மெட் மீது பொய்ப் புகார் கொடுத்து அவனது உயிர் பறிபோகக் காரணமாக இருந்த கரோலின் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார். அவன் மீதான புகாரில் பல அபாண்டமான பொய்களை இட்டுக்கட்டிச் சொன்னதைப் பின்னாளில் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், அதுகுறித்த எந்தக் குற்றவுணர்வும் அவரிடம் இல்லை.
  • அமெரிக்காவில் இனவெறி அடிப்படையிலான குற்றங்கள் எம்மெட்டின் மரணத்துடன் நின்றுவிடவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில் வெள்ளையினக் காவலர்களால் கொல்லப்பட்ட ஜார்க் ஃப்ளாய்டு, சில நாட்களுக்கு முன்னர் விஸ்கான்ஸின் மாநிலத்தில் தன் குழந்தைகளின் கண் முன்னாலேயே வெள்ளையினக் காவலரால் சுடப்பட்டு, முடமாகிக் கிடக்கும் ஜேக்கப் ப்ளேக் என அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது!
  • (ஆகஸ்ட் 28 – எம்மெட் டில் நினைவுதினம்)

நன்றி: தி இந்து (29-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்