- நீண்ட நாள்களாக உயர்த்தப்படாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக அதிகரிக்கப் பட்டு வருகிறது.
- அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல், டீசல் விலை 80 காசுகள் உயர்த்தப் பட்டுள்ளது. இது அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்றாவது விலை உயர்வு.
வரிவிதிப்பில் மாற்றம் தேவை!
- இதையடுத்து, தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.01-லிருந்து 97.81-ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.88.27-லிருந்து ரூ.89.07-ஆகவும் உயர்ந்துள்ளது.
- கடந்த மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது.
- அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை ரூ.2.40 அதிகரித்துள்ளது. எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
- உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கத் தொடங்கியபோது, கச்சா எண்ணெய் விலை மளமள வென உயர்ந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சமீபத்தில் 139 அமெரிக்க டாலரைத் தொட்டது.
- இதைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் தாக்கம்தான் அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனலாம்.
- உக்ரைன் - ரஷியா போர் மேலும் நீடிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 டாலரை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஏற்கெனவே எண்ணெய் சந்தை வட்டாரங்கள் கணித்துள்ளன.
- மேலும், எப்படி இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை 75 டாலருக்கு கீழ் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. உக்ரைன் - ரஷியா போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது.
- ஆசியா, நிகர எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. எனவே, மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றôகவும் உள்ளது.
- ரஷியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ளது. இதனால், எந்த ஒரு நிலையான விலை உயர்வுகளும் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- தென் கொரியாவில், எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், பணவீக்கம் ஏற்கெனவே அதன் மத்திய வங்கியின் இலக்கை மீறிவிட்டது.
- தாய்லாந்து, தன் பணவீக்கம் கடந்த மாதம் 2008-க்குப் பிறகு மிக உயர்ந்தûதக் கண்டது. பிலிப்பின்ஸூம், இந்தோனேசியாவும் விளிம்பில் உள்ளன.
- இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியை நம்பி உள்ளது. இதுவே நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாகவும் அமைந்துள்ளது.
- அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால், அது இந்திய சந்தைகளிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- இதனால், ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படும். டாலருக்கு நிகரான ரூபாய் 80 என்ற அளவைத் தொடவில்லை என்றாலும், தற்போது ரூ.76க்கு அருகே உள்ளது.
- பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணெய் நிறுவனங்களின் கையை காலை பிடித்தது மத்திய அரசு.
- இதனால், தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இப்போது முடிவுகள் வெளியாகிவிட்டன.
- பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வின் பாதிப்பு பணவீக்கத்துக்கு வழி வகுக்கிறது.
- இரும்பு, எஃகு, கண்ணாடி போன்ற பல்வேறு பொருள்களின் மூலப் பொருள்களின் விலை இடைவிடாமல் அதிகரித்து வருதையும் காண்கிறோம்.
- கட்டுமான நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மூலப்பொருள்கள் வாங்குவதை நிறுத்தப் போவதாகவும், இடுப்பொருள் செலவுகள் அதிகமாக இருப்பதால், கட்டுமானப் பணியை நிறுத்தப் போவதாகவும் ஏற்கெனவே எச்சரித்துள்ளன.
- மேலும், உக்ரைன் - ரஷியா போர், பொருள்களை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் பதுக்கி வைப்பதற்கும், விலையை உயர்த்துவதற்கும் எளிதான சாக்காக மாறிவிட்டது என்று கட்டடத் தொழிலாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
- இந்த நிலையில், பொருள்களின் விலையை விழிப்புடன் கண்காத்து நுகர்வோரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
- கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலர் உயரும்போதும், பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பகிறது என்று எண்ணெய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், வரும் நாள்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.20 வரை உயரக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இது ஏழைகளை அச்சுறுத்தும் செய்தி.
- விலை உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து முன்டியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல் சில்லறை விலையில் மத்திய வரிகள் மற்றும் உள்ளூர் மதிப்புக் கூட்டு வரி (வாட்) ஆகியவை தற்போது 50% ஆகவும் டீசல் மீது 40%-ஆகவும் உள்ளன. இந்த நிலையில், எரிபொருள்களின் மீதான வரி விதிப்பை அரசு மறுசீரமைப்பு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
- எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது!
நன்றி: தினமணி (28 – 03 – 2022)