TNPSC Thervupettagam

எரிபொருள் விலை உயர்வு

June 24 , 2020 1492 days 621 0
  • கொள்ளைநோய்க் காலகட்டத்தில் கிருமி உண்டாக்கும் சுகாதார நெருக்கடி ஒருபுறம், அதை எதிர்கொள்ளும் விதமாக அரசு அமலில் வைத்திருக்கும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் உண்டாக்கும் பொருளாதார நெருக்கடி மறுபுறம் என்று அல்லாடும் மக்களை, மேலும் மேலும் வதைக்கும் விதமான போக்குகளை எப்படிப் பார்ப்பது? பெட்ரோலியப் பொருட்கள் தொடர்ந்து விலையேற்றப்பட்டுவரும் போக்கை அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. மிக மோசமான விளைவுகளை இது உண்டாக்கும்.
  • கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தபோதும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படவே இல்லை.
  • மாறாக, கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை ரூ.3 உயர்த்தியது இந்திய அரசு; தொடர்ந்து மே மாதத்தில் பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 உயர்த்தியது. இந்த வரி உயர்வால் சுமார் ரூ.2 லட்சம் கோடி வரி வருவாய் அரசுக்குக் கிடைத்தது. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய - மாநில அரசுகளின் வரிகளே மூன்றில் இரு பங்கு வகிக்கின்றன.
  • தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை இயல்புக்குத் திரும்பத் தொடங்கியதும் வழக்கம்போல இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தத் தொடங்கிவிட்டன.

வாகனப் போக்குவரத்தே உயிர் நாடி

  • ஜூன் 7 தொடங்கி ஜூன் 23 வரையிலான 17 நாட்களும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையானது உயர்த்தப்பட்டது, எளிய மக்களின் மீது அரசுக்கு எந்தக் கரிசனமும் இல்லையோ என்று எண்ண வைப்பதானது. இந்த 17 நாட்களில் மட்டும் லிட்டர் விலை பெட்ரோலுக்குச் சுமார் ரூ.8.50, டீசலுக்குச் சுமார் ரூ.10 உயர்த்தப்பட்டது. 2002-ல் தொடங்கி இதுவரை அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் இந்த அளவுக்கு விலை உயர்வு இருந்ததும் இல்லை; விலை உயர்வு ஐந்து ரூபாயைத் தாண்டியதும் இல்லை.
  • ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தொழில் துறைகள் மீண்டும் புத்துயிர் பெறவும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிடவும் வாகனப் போக்குவரத்தே உயிர் நாடி.
  • ஆனால், அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலையானது அத்தியாவசியப் பொருட்களின் விலையையும்கூட அதிகரிக்கச்செய்யும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.
  • உயர்த்தப்படுவது பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல; அத்தியாவசியப் பொருட்களின் விலையும்தான் என்பதை அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும்; வரிகளைக் குறைப்பது தொடர்பில் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (24-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்