- அனைத்துப் பயனர்களுக்கும் வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200ஐக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பணவீக்கத்தின் விளைவால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
- வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் நடைமுறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வளர்ச்சியை முன்னிலைப் படுத்திய பாஜகவின் ஆட்சிக் காலத்தில், நேரடி மானியத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன.
- இதன் விளைவாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, ஏற்றமும் இறக்கமுமாக இருந்துவந்தது. கோவிட்-19 பெருந்தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான காலகட்டமான 2020 மே 1 அன்று சென்னையில் சிலிண்டர் விலை ரூ.569.50ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த சிலிண்டரின் விலை 2022 மே அன்று ரூ.1,000ஐக் கடந்தது. 2023 மார்ச் முதல் தேதி அன்று அதன் விலை ரூ.1,118.50 ஆக அதிகரித்திருந்தது.
- இந்தச் சூழலில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இதன்படி, சென்னையில் தற்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.918.50ஆகக் குறைந்துள்ளது. உஜ்வாலா பயனாளிகளுக்கான சிலிண்டரின் விலை ரூ.400 குறையும் என்பது ஏழை, எளிய மக்களுக்கு ஆசுவாசமளிக்கும். மேலும், உஜ்வாலா திட்டத்தில் கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது.
- இந்த விலைக் குறைப்பின் மூலம் மானியங்கள் வளர்ச்சிக்கு எதிரானவை என்னும் முழக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நோக்கி பாஜக அரசு நகர்ந்திருப்பதாக உணர முடிகிறது. அதே நேரம், இதன் பின்னணியில் தேர்தல் அரசியல் கணக்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.
- உயர்ந்துள்ள பணவீக்கத்தால் தத்தளித்துவரும் அனைத்துக் குடும்பங்களின் பட்ஜெட்டில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் திறம்படப் பயன்படுத்திக் கொண்டது. அதுபோல விரைவில் தேர்தலை எதிர்கொள்ள உள்ள ராஜஸ்தானில் அந்த மாநில காங்கிரஸ் அரசு ஏழை மக்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கிவருகிறது.
- இதே திட்டத்தைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் செயல்படுத்துவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மத்திய அரசும் சிலிண்டர் விலைக் குறைப்பில் ஈடுபட்டிருப்பதன் மூலம், வீட்டு சிலிண்டர் விலையானது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.
- சிலிண்டர் விலையைப் போலவே பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அன்றாட வாழ்வில் சாமானிய மக்களைப் பாதித்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும், ரூ.100க்கு அதிகமாக விற்கப்படும் அவற்றின் விலையைக் குறைக்க வேண்டியதும் மிக அவசியம். உணவு சார்ந்த பணவீக்கத்தோடு தொடர்புடைய இவற்றின் விலையைக் குறைப்பதன் மூலம், விலைவாசி குறையும் வாய்ப்பு ஏற்படும். இதைப் பற்றியும் மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)