TNPSC Thervupettagam

எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எல்லோருக்கும் கிடைப்பது எப்போது?

August 16 , 2024 149 days 122 0

எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எல்லோருக்கும் கிடைப்பது எப்போது?

  • இந்​தி​யா​வில், புற்றுநோய் பாதிப்பு​களும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்பு​களும் ஆண்டு​தோறும் அதிகரித்து ​வரு​வ​தாகத் தேசியப் புள்ளி​விவரங்கள் தெரிவிக்​கின்றன. குறிப்பாக, இவ்வகைப் பாதிப்பு​களுக்கு குழந்தைகள் அதிகம் உள்ளாவ​தாகத் தெரிகிறது. பயனாளிக்கு உரிய விழிப்பு​ணர்வு இருந்து, தேவையான மருத்துவச் சிகிச்​சைகளும் உரிய நேரத்தில் கிடைக்​கு​மானால், இந்தப் பாதிப்புகளை ஆரம்பநிலை​யிலேயே தவிர்க்​கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

எலும்பு மஜ்ஜை என்பது எது?

  • ஓர் எலும்​பானது வெளியி​லிருந்து பார்ப்​ப​தற்கு இரும்புக் கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்​தா​லும், அதன் மையத்தில் குழல் போன்ற ஒரு பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது மென்மையான திசுக்​கூழ். எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இரண்டு வகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்​பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்​தி​செய்​கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமித்து​வைக்​கிறது. எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்​கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்​துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசுக்​களின் செல்களாகப் பிரிந்து, வெவ்வேறு உறுப்புகளை உருவாக்கு​கின்றன. புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது ஒரு நோயின் தாக்குதலால் எலும்பு மஜ்ஜை பாதிக்​கப்​படு​மானால், அப்போது ஆரோக்​கியமான ஸ்டெம் செல்களை அது உருவாக்​காது. ரத்த அணுக்​களின் உற்பத்தி பாதிக்​கப்​படும். உடலின் பிற உறுப்பு​களும் இதனால் செயலிழக்​கும். இந்தச் சூழலில், ஆரோக்​கியமான நபரிட​மிருந்து எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பாதிக்​கப்பட்ட நபருக்குச் செலுத்​தப்​படும் சிகிச்சை முறைக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Bone Marrow Transplantation) என்று பெயர்.

மஜ்ஜையைப் பாதிக்கும் நோய்கள்:

  • எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் உற்பத்​தி​யாகாமல் போவதற்​கும், புற்றுநோய் ஏற்படு​வதற்கும் தெளிவான காரணங்கள் இன்னும் தெரிய​வில்லை. ஆனால், நெருங்கிய உறவில் திருமணம் புரிவது மரபணு சார்ந்த எலும்பு மஜ்ஜை நோய்களுக்கு ஒரு காரணமாகக் கருதப்​படு​கிறது. அதேவேளை​யில், நெருங்கிய உறவினர்​களைத் திருமணம் செய்யும் போக்கு குறைந்​து​வரும் தற்காலத்​தி​லும், எலும்பு மஜ்ஜை நோய்கள் அதிகரிப்​ப​தற்குக் கடுமையான காற்று மாசு, ஞெகிழிப் பயன்பாடு, அசுத்தமான சுற்றுப்புறச் சூழல் போன்றவை காரணமாகின்றன என்று கணிக்​கப்​பட்டுள்ளது. ரத்தப் புற்று​நோய், நிணநீர்ப் புற்று​நோய், ‘மல்டிபிள் மைலோமா’, தலசீமியா, அரிவாள் செல் ரத்தசோகை, ஏபிளாஸ்டிக் ரத்தசோகை, தன்னுடல் தாக்கு நோய், பரம்பரை ரத்தக்​கோளாறுகள், மரபணுக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ தேவைப்​படு​கிறது.

உதவிக்கு வரும் நவீனத் தொழில்​நுட்பம்:

  • ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ இரண்டு முறைகளில் மேற்கொள்​ளப்​படு​கிறது. எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்​கப்​பட்ட​வர்​களுக்கு முதலில் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை கொடுத்து, எலும்பு மஜ்ஜையில் சிதைவடைந்​திருக்கும் செல்கள் முழுவதுமாக அழிக்​கப்​படும். அதன் பின்னர், கொடையாளரின் ஒரு கிலோ உடல் எடைக்கு அதிகபட்சம் 20 மி.லி. ரத்தம் வீதம் சேகரிக்​கப்​படும். இது எலும்பு மஜ்ஜை சேகரிப்​பின்போது அவருக்கே திருப்பிச் செலுத்​தப்​படும். அவரிட​மிருந்து எலும்பு மஜ்ஜை சேகரிக்​கப்​பட்டு, அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரிக்​கப்​பட்டு, நோயாளிக்குச் செலுத்​தப்​படு​கிறது. சில கொடையாளரின் புற ரத்த ஸ்டெம் செல்கள் சேகரிக்​கப்​பட்டு, நோயாளியின் உடலுக்குள் செலுத்​தப்​படு​வதும் உண்டு. அவை உடலுக்குள் நுழைந்த இரண்டு வாரத்​துக்குள் புதிய செல்களைத் தோற்று​வித்து​விடும். முன்பு புற்றுநோய் இருந்த இடத்தில் இந்தப் புது செல்கள் உட்கார்ந்​து​கொள்​ளும். எலும்பு மஜ்ஜை செய்யும் ரத்த அணுக்கள் உற்பத்தி உள்ளிட்ட இயல்பான செயல்கள் தொடங்கி​விடும். இதன் பலனாக, நோய் விலகி​விடும். இந்தச் செயல்முறை ‘மாற்ற மரபுக்​கூறு’ (Allogeneic) எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எனப்படு​கிறது. சில நோயாளி​களுக்குச் சொந்த ஸ்டெம் செல்கள் செலுத்​தப்​படு​வதும் உண்டு. இவர்களுக்கு இடுப்பு எலும்​பிலிருந்து மஜ்ஜை சேகரிக்​கப்​பட்டு, அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்​தெடுக்​கப்​படும். இந்தச் செயல்​முறைக்கு ‘சுயதான எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Autologous bone marrow transplantation) என்று பெயர்.
  • முன்பெல்லாம் பயனாளியின் எலும்பு மஜ்ஜைக்குள் ஸ்டெம் செல்களை ஊசி மூலம் நேரடி​யாகச் செலுத்தும் செயல்​முறைதான் இருந்தது. இப்போது ‘ஹோமிங்’ (Homing) முறைப்படி ரத்தக்​குழாய்க்குள் ஸ்டெம் செல்களைச் செலுத்​தினாலே, அவை எலும்பு மஜ்ஜைக்குள் நுழைந்​து​விடும். இந்த நவீனத் தொழில்​நுட்பம் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்​சை’யை எளிதாக்​கி​உள்ளது.

பிரச்​சினைகள் என்ன?

  • நடைமுறை​யில், நாட்டில் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்​சை’க்குக் கடும் தட்டுப்பாடு உள்ளது. இந்தி​யாவில் ஆண்டு​தோறும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்​களைக் கணக்கெடுத்​தால், அது 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை வரும்; தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள். ஆனால், இந்தி​யாவில் மொத்தமே 11 ஆயிரம் பேருக்​கும், தமிழகத்தில் ஆயிரம் பேருக்​கும்தான் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ மேற்கொள்​ளப்​படு​கிறது. இந்த வகைப் பாதிப்பு​களில் தலசீமியா நோய் முக்கிய​மானது. இந்தி​யாவில் ஆண்டு​தோறும் 12 ஆயிரம் புதிய தலசீமியா நோயாளிகள் பிறக்​கிறார்கள் என்றால், இவர்களில் 30% பேருக்கு மட்டுமே ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ கிடைக்​கிறது. இன்னொரு கணக்குப்படி, 2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்​தில், நாடு மொத்தத்​திலும் 960 பேருக்​குத்தான் இந்தச் சிகிச்சை கிடைத்​திருக்​கிறது. இதற்குக் காரணம், சாமானியர்​களால் இந்தச் சிகிச்​சைக்கான செலவை நினைத்​துக்​கூடப் பார்க்க முடியாது என்பது​தான். சாதாரணமாக, ஒரு நோயாளிக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இதற்குச் செலவாகிறது. சில சமயங்​களில் ரூ.40 லட்சம் வரைகூடச் செலவாகலாம். அடுத்த காரணம், எலும்பு மஜ்ஜையைத் தானமாக வழங்கத் தகுதியான கொடையாளர்கள் கிடைப்பது சிரமம். நோயாளி - தானமளிப்​பவரின் ரத்த அணுக்கள் குறைந்தது 50% மரபணுப் பொருத்​தத்​துடன் இருக்க வேண்டியது அவசியம்.

அனைவருக்கும் சிகிச்சை சாத்தியமா?

  • தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து​வ​மனையில் 2018இல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை தொடங்​கப்​பட்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட​வர்​களுக்கு இச்சிகிச்சை இலவசமாக வழங்கப்​பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்​புத்​தூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்​களில் உள்ள தனியார் மருத்து​வ​மனை​களிலும் இச்சிகிச்சை வசதி கிடைக்​கிறது. அரசுடன் புரிந்​துணர்வு ஒப்பந்தம் பெற்ற சில தனியார் மருத்து​வ​மனை​களுக்கு அரசு மருத்து​வ​மனை​களி​லிருந்து இச்சிகிச்​சைக்குப் பயனாளி​களைப் பரிந்துரை செய்வதும் உண்டு. இச்சிகிச்​சைக்கான செலவை ‘முதல்​வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ ஏற்றுக்​கொள்​கிறது என்றாலும், பெரும்​பாலான தனியார் மருத்து​வ​மனைகள் அரசு வழங்கும் பணம் போதுமானதாக இல்லை எனக் கூறி, நோயாளி​களிடம் மீதிப் பணத்தைக் கோருகின்றன.
  • மேலும், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்து​வ​மனையைத் தவிர, வேறு எந்த அரசு மருத்து​வ​மனை​யிலும் இச்சிகிச்சை இலவசமாகக் கிடைக்​காத​தால், தேனி, கன்னி​யாகுமரி, ராமநாத​புரம் உள்ளிட்ட மாவட்டங்​களில் கிராமப்பு​றங்​களில் இருந்து வரும் சாமானிய நோயாளிகள் நூற்றுக்​கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்துச் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. நோயாளிகள் மருத்து​வ​மனையில் 30 முதல் 50 நாள்களுக்கு மேல் செலவிட வேண்டியிருப்ப​தால், தங்கள் அன்றாட வேலையைச் சார்ந்து வாழ்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது. தென் மாவட்டங்​களில் உள்ள தொலைதூரப் பகுதி மக்களுக்கும் இச்சிகிச்​சையின் தேவை அதிகரித்து​வரு​வதைக் கருத்தில் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்து​வமனை, கோயம்​புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து​வமனை ​போன்ற பிற மருத்து​வ​மனை​களிலும் இது​போன்ற மருத்துவ வசதியைத் தொடங்க வேண்டும் என்பது மக்​களின் எ​திர்​பார்ப்பு. தமிழக அரசு இதைக் கவனிக்க வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்