TNPSC Thervupettagam

எல்லப்பிரகதா சுப்பாராவ்

March 8 , 2025 5 days 76 0

எல்லப்பிரகதா சுப்பாராவ்

  • ஃபோலிக் அமிலமும் புற்றுநோய் மருந்தும்: 1943ஆம் ஆண்டு லெடெர்லியில் சுப்பாராவ் தலைமையில், விட்டமின் பி வகையில் ஒன்றான ஃபோலிக் அமிலம், கல்லீரல் திசுக்களில் இருந்து முதன்முறையாகப் படிகமாக்கப்பட்டு, அதன் மூலக்கூறு வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. கணிதத்தில் அசாத்தியத் திறமை கொண்டிருந்ததுபோல் கரிம வேதியியலில் திறமை கொண்டிருந்த சுப்பாராவ், ஃபோலிக் அமிலத்தின் மூலக்கூறு வடிவம் கண்டறியப்பட்ட நிலையில், அதனைச் செயற்கையாக உருவாக்கி [organic synthesis], உற்பத்தியைப் பெருக்கும் முறையை வடிவமைத்தார். இதன் மூலம் ஃபோலிக் அமில உற்பத்தி பெருகி பரவலாகக் கிடைக்கப்பட்டு, நோய்கள் குணப்படுத்தப்பட்டன.
  • அதே நேரத்தில் ஃபோலிக் அமிலம் சில வகை புற்றுநோய்களைத் தீவிரமாக்குவதும் கண்டறியப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சுப்பாராவ் ஃபோலிக் அமிலத்தின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்து, அதனைப் புற்றுநோய் எதிர்ப்பொருளாக மாற்றியமைத்தார். அமினோப்டெரின் [Aminopterin (Methotrexate)] எனும் இந்தச் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட எதிர்பொருள் ரத்தப்புற்றுநோய் சிகிச்சையில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

யானைக்கால் நோய் மருந்து:

  • கொசுக்களால் பரவும் ஹெல்மிந்த் வகைப் புழுவினால் ஏற்படும் நோயான பைலேரியாசிஸ் [யானைக்கால் நோய்], உடலின் நிணநீர் முடிச்சுகளைத் தாக்கி, உடலின் இயல்பான திரவ வடிப்பைச் சீர்குலைக்கும் தன்மையினால், வீங்கிய கால்களுடன் நேயாளியை உருக்குலைக்கும் என்பதை நாம் அறிவோம். லெடெர்லியில் சுப்பாராவின் தலைமையில், பைலேரியாசிஸ் மருந்தான ஹெட்ரஸான் [Hetrazan; Diethylcarbamazine] 1947இல் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் இன்றளவும் பயன்பாட்டில் இருந்துவருகிறது. அயோடின் கலந்த உப்பு, கழுத்துக்கழலை நோயைத் தடுப்பதுபோல், சில நாடுகளில், ஹெட்ரஸான் கலந்த உப்பு [Fortified salt] பைலேரியாசிஸ் நோயைத் தடுக்கும் பயன்பாட்டில் உள்ளது.

நுண்ணுயிர்க் கொல்லி [Antibiotic]

  • அந்த நேரத்தில் நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறன்கொண்ட மருந்துகள் மருத்துவ அறிவியலுக்குப் புதிது. பெனிசிலின், சல்போனமைடு [Beta-Lactam, Sulfonamide] ஆகிய வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், 1930 காலக்கட்டத்தில் புதிய மருத்துவ அணுகுமுறை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் மேலை மருத்துவத்தில் நுண்ணுயிர்க்கொல்லிகளின் தேவை அதிகரிக்க, புதிய வகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைக் கண்டறியும் போட்டி ஆரம்பமானது.
  • போர் நிமித்தமாக உலகெங்கிலும் சென்ற அமெரிக்கப் போர்வீரர்கள், அவரவர் தங்கிய இடங்களில் இருந்து கைப்பிடி மண்ணைச் சேகரித்துக் கொண்டுவந்தனர் [soil samples]. அறிவியலாளர்கள் இவற்றை ஆராய்ந்து, புதிய நுண்ணுயிரிகளையும், அவை உருவாக்கும் புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளையும் அடையாளம் காண முனைந்தனர். இந்த முயற்சியில், 1943இல் வேறோர் அமெரிக்க ஆய்வகத்தில் ஸ்ட்ரெப்ட்டோமைசின் [Streptomycin] கண்டறியப்பட்டது.
  • இந்நிலையில் சுப்பாராவின் தலைமையில், பெஞ்சமின் டக்கர் எனும் தாவரவியல் அறிஞர் உதவியோடு, லெடெர்லி நிறுவனம் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து வேட்டையில் இறங்கியது. டெட்ராசைக்லின் [Tetracycline] வகை நுண்ணுயிர்க்கொல்லியை முதன்முதலாக 1945இல் சுப்பாராவ் கண்டறிந்தார். டெட்ராசைக்லின் வகையில் முதல் மருந்தான குளோர்டெட்ராசைக்லின் [Chlortetracycline] சுப்பாராவின் முயற்சியால் உருவானது. இந்த மருந்தை உருவாக்கும் பாக்டீரியா Streptomyces aureofaciens எனப் பெயரிட்டு வகைப்படுத்தப்படுகிறது. உயிர்காக்கும் குளோர்- டெட்ராசைக்லின் மருந்து, லெடர்லியால் ஆரியோமைசின் [Aureomycin] எனும் வணிகப் பெயரிடப்பட்டு, 1947இல் பயன்பாட்டுக்கு வந்து நிலைத்து, மனிதரிலும் கால்நடைகளிலும் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

  • ஓய்வு ஒழிச்சல் இல்லா கர்ம வீரராக, சாதனைக்குப் பின் சாதனையென நிகழ்த்தும் தனித்தன்மையால் சக அறிஞர்களைச் சுப்பாராவ் கவர்ந்தார். புதிய ஆய்வக சோதனை முறை, உயிர்காக்கும் மருந்துகள் என ஒன்றன்பின் ஒன்றாகப் பலவற்றை உலகுக்கு அளித்த பேரறிஞர் சுப்பாராவ், மூன்றாண்டுகளில் திரும்பிவிடுவதாக, 1923இல் மனைவியிடம் வாக்களித்துச் சென்றவர், ஊர் திரும்பவேயில்லை. சுப்பாராவ் அமெரிக்காவுக்கு விடைபெற்றுச் சென்ற பிறகு, மனைவி சேஷகிரி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். அந்தக் குழந்தை பிறந்த சில மாதங்களில் இறந்துவிட்டது. அதுமுதல் தனிமையில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த சேஷகிரி, 1948இல் நிரந்தர தனிமைக்குச் சென்றார். ஆம், ஆய்வகத்தில் எப்போதும்போல் சுறுசுறுப்பாக வேலைகளைக் கண்காணித்துவிட்டு இரவு வீட்டுக்குச் சென்ற சுப்பாராவ், 52வது வயதில் உறக்கத்திலேயே மாரடைப்பால் காலமானார்.

ஹைதராபாத்தில் உள்ள சுப்பாராவின் நினைவுச் சின்னம்

  • தாயகம் திரும்பாமல் அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வாழ்ந்திருந்த சுப்பாராவ், அமெரிக்காவின் அன்றைய குடியேற்றக் கட்டுப்பாடுகளின்படி குடியுரிமையின்றி இருந்த நிலையில், தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் சட்ட மாற்றங்கள் ஏற்பட குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் உயிருடன் இருந்தவரை நிறைவேறவேயில்லை.

புறக்கணிப்புகளின் பின்னணி

  • 1920 வாக்கில் ‘கண்டறியப்பட்ட’ தசைநார் சுருங்கி விரியும் ஆற்றல் தேவையை விளக்கும் மேயர்ஹாப்-ஹில் [Meyerhoff-Hill] ஆகியோரின் கிளைக்கோஜென்-லாக்டிக் அமிலக் [glycogen-lactic acid] கொள்கை 1922இல் நோபல் பரிசு பெற்றது. அதாவது, உணவில் உள்ள குளுக்கோஸ் நமது உடலில் தசைநார்களில் கிளைக்கோஜென் வடிவில் சேமிக்கப்பட்டு, அதிலிருந்து தசைநார்களின் இயங்கு தேவைக்கேற்ப குளுக்கோஸ் பிரிந்து லாக்டிக் அமிலமாக மாற்றம் பெற்று, தசை ஆற்றலைத் பெறுகிறது. இதனால் நாம் இயங்க முடிகிறது என்பதே மேயர்ஹாப்-ஹில் கொள்கை.
  • அந்தக் கொள்கை மிகப் பிரபலமாகியிருந்த 1920களில், ஃபிஸ்க்-சுப்பாராவ் முன்மொழிந்த பாஸ்போகிரியாட்டைன் கொள்கை, மேயர்ஹாப்-ஹில் விளக்கத்தைவிடவும் உயரியது. இவர்கள் ஒருபடி மேலே சென்று விளக்கினர். கிளைக்கோஜெனிலிருந்து லாக்டிக் அமிலச்சிதை மாற்றம் அடையும்போது வெளிப்படும் ஆற்றலானது பாஸ்போகிரியாட்டைன், ஏடிபி எனும் அதுவரை அறிவியலில் விளக்கப்படாத மூலக்கூறுகளில் சேமிக்கப்பட்டு, இவையிரண்டும் இணையாக நின்று, தசைநார் செயல்பாட்டில் ஆற்றலை வழங்குகின்றன என விளக்கினார்கள்.
  • இது நுண்மையான விளக்கமாக இருந்தாலும், மேயர்ஹாப்-ஹில் கொள்கை வேரூன்றியிருந்த நிலையில், ஃபிஸ்க்-சுப்பாராவ் கருத்து அறிவியல் உலகில் வரவேற்புப் பெறவில்லை [Glycogen-Lactic Acid theory vs Phosphocreatine-ATP theory] என்பதுடன், எதிர்ப்பும் உருவானது. அதன் விளைவாக நோபல் குழுவும் புறக்கணித்தது. எனினும், 1930லேயே கிளைக்கோஜென்-லாக்டிக் அமிலக் கொள்கை ஒதுக்கப்பட்டு, ஃபிஸ்க்-சுப்பாராவின் பாஸ்போகிரியாட்டைன் கொள்கை அங்கீகரம் பெற்று இன்றளவும் பயனுள்ள திடமான கொள்கையாக இருந்து வருகிறது.
  • மேலும், ஃபிஸ்க்-சுப்பாராவ் கொள்கையுடன் தொடர்புடைய ஆற்றல் மூலக்கூறான ஏடிபி, அமெரிக்காவில் ஃபிஸ்க்-சுப்பாராவ் குழுவாலும், ஜெர்மெனியில் லோமேன்-ஜென்ட்ராசிக் குழுவாலும் தனித்தனியே கண்டறியப்பட்டது. ஆயினும் லோமேன்-ஜென்ட்ராசிக் இருவரும் கண்டறிதலுக்கான அங்கீகாரத்தைப் பெற்றனர்.
  • இந்தப் புறக்கணிப்புகள் ஃபிஸ்க்கின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சுப்பாராவ் நிதானமாகவே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அன்றைய இன்றைய பார்வையில், தசைநார்ச் செயலியல் பாஸ்போகிரியாட்டைன், ஏடிபி ஆகிய கண்டறிதல்களுக்கான அங்கீகாரமும் அதனால் விளையும் பயன்களும் சுப்பாராவுக்குக் கிடைக்காமல் போனது விந்தையானது.

குன்றிலிட்ட விளக்கு

  • அறிவியல் உலகில் புகழ்பெற்ற பாஸ்பேட் அளவீட்டுமுறை, பாஸ்போகிரியாட்டைன், ஏடிபி, ஃபோலிக் அமிலம், அமினோப்டெரின், ஹெட்ரஸான், டெட்ராசைக்லின் என இவரின் நீண்ட சாதனைப் பட்டியலில், ஒவ்வொன்றும் குன்றில் இட்ட விளக்காக உலகம் முழுமைக்கும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. பயனைத் தந்துகொண்டிருக்கின்றன. அந்த மருந்துகள் ஒவ்வொன்றும் நோபல் பரிசு போன்ற உயர்ந்த பரிசுகளுக்குத் தகுதி உடையவையாக இருப்பினும், பரிசுகள் நழுவியே சென்றிருக்கின்றன. சுப்பாராவ் வெளியுலகிற்குத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், குடத்தில் இட்ட விளக்காக ஆரவாரமின்றி வாழ்ந்துவிட்டுச் சென்றவர்.
  • நியூயார்க் மாகாணத்தில் கண்டறியப்பட்ட ‘Subbaromyces splendens’, ஹைதராபாத் நாகரில் கண்டறியப்பட்ட ‘Subbaromyces aquatica’ எனும் பூஞ்சை வகை உயிரினங்கள் சுப்பாராவின் பெயரைப் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவருடைய மருந்தால் நம் உடல் நீண்ட காலம் வாழ்வதால், அவரும் நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இறந்தும் வாழ்கிறார் மருந்தால்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்