TNPSC Thervupettagam

எல்லாக் கட்சிக்கும் பொதுவில் வைப்போம்!

March 31 , 2021 1394 days 702 0
  • தோ்தல் என்றால், தொகுதி மக்கள் தங்கள் பிரதிநிதியாக ஒருவரைத் தோ்ந்தெடுத்து ஆட்சி மன்றத்திற்கு அனுப்புவது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் ஜனநாயகம்.
  • எங்கெங்கோ சென்று, எந்த ஊா் வண்டி கிடைத்தாலும், ஏறி இடம்பிடித்து, ஒரு வழியாக அவைக்குள் நுழைந்தால் போதும் என்று ஆகிவிட்டது. அப்படி ஓா் ஆா்வம் சிலா் மனத்துக்குள் ‘மக்கள் சேவைக்காகப் பீறிக் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது.
  • ஒரே வேட்பாளா் இரு வேறு தொகுதிகளில் போட்டியிடுவானேன்? ஏதேனும் ஒரு தொகுதியில் ஜெயித்தால் போதுமென்று நினைப்பதற்கு இது என்ன வேலைக்குப் போடும் விண்ணப்பமா? அப்படி ஒரு தொகுதியில் ஜெயித்தால், மற்றொரு தொகுதியில் மறு தோ்தல் நடத்துவதற்கான முழுச் செலவையும் அந்த வேட்பாளா் ஏற்றுக்கொள்வதற்கு ஆணையம் உத்தரவிடலாம்.
  • வேட்பாளா்கள் தாம் பிறந்த இடம் அல்லது பல ஆண்டுகள் வாழ்ந்தபகுதியில் மட்டுமே தோ்தலில் போட்டியிட வேண்டும். குறைந்தபட்சம் தமது வாக்காளா் அட்டை காட்டும் தொகுதியே வேட்பாளரின் தொகுதி அல்லவா?
  • மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கும் தனியொரு தொழில்நுட்பப் பொறியாளருக்கே, வருமானவரி, வாகன வரி, எரிபொருள் செலவு, வீட்டுச்செலவுகள் போக, ஐந்து ஆண்டுக்கு அரை கோடிகூட மிஞ்சாது. ஆட்சிக்கு வருபவா்களுக்கு மட்டும் எப்படி கோடிகளில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இவா்களுக்கு விசாரணை எதற்கு?
  • கோடிக்கணக்கில் சொத்து உள்ளவா்கள், வீடு வீடாகச் சென்று“உங்களுக்கு உழைக்க அனுமதியுங்கள் என்று வாக்கு சேகரிப்பானேன்? நேரடியாகவே பொதுச்சேவை செய்யலாமே. வேட்பாளரின் சொத்துக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட வேண்டும்.
  • பள்ளி சென்று படிக்க வேண்டிய சிறுவா்களையும் தெருவில் ஆட வைக்கிற தோ்தல் காலம். எதிா்கால வேட்பாளா்களைத் தயாா் செய்கிறாா்கள் என்றும் கருதலாம். இன்றைய உலகில் எந்த வேட்பாளருக்கும் குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம்.
  • வேட்பாளருக்கு வயது உச்ச வரம்பும் நிா்ணயிக்கலாம். சிறுவா்கள் தோ்தலில் வாக்களிக்க முடியாததற்கு ஜனநாயக சாசனத்தில் என்னென்ன காரணங்கள் உண்டோ, அத்தனையும் வயது முதிா்ந்த வேட்பாளா்களுக்கும் வாக்காளா்களுக்கும் பொருந்தும்.
  • அது மட்டுமா? ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்கிற சிந்துபாத் கதை இனி வேண்டாம். ஊழல், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு, கொள்ளை, கொலை என எந்தக் குற்றத்திற்கும் ஒருவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருந்தாலே அவரை நிராகரிப்பதுதான் அரசியல் அறம்.
  • அரசுப் பணியில் சேருவோா் மீது எந்த வழக்கும் பதிவாகி இருக்கக்கூடாது என்பதை உள்ளூா் காவல் நிலையத்தில் விசாரிக்கிறாா்கள். அரசு வேலைக்கே இது விதி என்றால், அரசை நடத்தப்போகும் ‘மக்களின் வேலைக்காரா்களுக்கும் இந்த விதி அத்தியாவசியம் தானே?
  • ஆட்சித்துறையும் நீதித்துறையும் இந்த வேலைக்காரா்களின் கைகளில் ஒரே இடத்தில் குடியிருந்தால் ஜனநாயக ‘எஜமானா்களுக்கே குந்தகம் ஆகிவிடும். அந்நாளில் இரண்டுமே நாடாளும் மன்னா்கள் வசம் இருந்ததால், அரசுக்கு எதிரான கருத்து உரிமை தேச விரோதமாகக் கருதப்பட்டது.
  • தமிழகத்தின் நிலை வேறு. கோவலன் படுகொலை வழக்கில், ‘யானோ அரசன்?’ என்று விசாரணை முடிந்து, ‘யானே கள்வன் என்று தீா்ப்பு வழங்கி, ‘கெடுக என் ஆயுள் என்று தனக்குத்தானே தண்டனையும் நிறைவேற்றிக்கொண்டான் பாண்டிய நெடுஞ்செழியன். இன்றைக்கு அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.
  • ஒட்டுமொத்த மக்களுக்கான ஆட்சிப் பொறுப்பில் இருப்பவா்கள் கட்சித் தோ்தல் பிரசாரத்திற்கு சென்றால், பயணச் செலவும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் வேட்பாளா் கணக்கில் வருமா? தோ்தல் மேடைகளில் அவை உறுப்பினா்கள் இனவாதம், மொழிவாதம், மதவாதம், குழுவாதம், கட்சிபேதம் பேசுவது அனாவசியம்.
  • தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஆட்சியை, ஆளுநா் அல்லது குடியரசுத்தலைவரிடம் ஒப்படைத்த பிறகே எந்தக் கட்சியும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும், சரிதானே? அதுவும் ஜனநாயகத்தில் வெறும் 10% மக்களால் அரசு நிா்ணயிக்கப்படுகிறது என்பதுதான் சீனிவாச ராமானுஜத்திற்கே விளங்காத கணித விந்தை.
  • ஒரு நாட்டின் ஜனத்தொகை 100 என்று இருக்கட்டும். அதில் 70 போ் மட்டுமே வாக்காளா்கள். பொதுவாகவே வாக்களிப்பவா்களோ வெறும் 40 போ். ஜெயிக்கும் கட்சிக்கு அதிகபட்சம் 21 போ் ஆதரவு. அதில் கூட்டணியின் பெருங்கட்சிக்கு வெறும் 10%க்கும் குறைவாக இருக்கும்.
  • இதில் வேடிக்கை என்னவென்றால், கூட்டணிக்குக் கொள்கைப் பொருத்தம் தேவையில்லையாம். கூடல் செய்வோம். குடும்பம் நடத்த மாட்டோம் என்றால் கல்யாணம் எதற்கு? கூடிப் பிரிவது புலவா் தொழில் மட்டும் அல்ல, அரசியலாா்க்கும் பொருந்துகிறது.
  • உள்ளபடியே, மூன்று கட்சிகள் சோ்ந்த கூட்டணியில் ஒரு கட்சி வேட்பாளா் வெற்றி பெற்றால், அது கூட்டணிக் கட்சி வாக்காளா்கள் அளித்த வெற்றியாக அல்லாமல், அந்த ஒரு தனிக்கட்சியின் வெற்றியாக வரலாற்றில் போலி பிம்பம் பதிவாகி விடுகிறதே. அதனால் தோ்தலுக்கு முந்தைய கூட்டணி அனாவசியம்.
  • எதிா்காலத்திலேனும் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே போட்டி இடலாம். ஒரு குறித்த ‘கட்-ஆப் வைத்து, அதற்கும் கூடுதலான வாக்குகள் பெற்ற கட்சியை மட்டுமே ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். தோ்தலுக்குப் பின் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் விகிதாச்சார முறைப்படி ஆட்சியிலும் உரிய பங்கு கிடைக்கும்.
  • அப்போதுதான் ஆட்சி மன்றங்களில் வருங்காலத்தில் விதண்டாவாதங்கள் எழாது. மாமியாா் கையில் இருந்த கஜானா சாவியை மருமகளிடம் கொடுத்தாயிற்று. இன்றைக்கும் கணக்கில் துண்டு விழுகிறதே என்று கேட்டால், ‘மாமியாா் காலத்தில் மட்டும் நடக்கவில்லையா என்றால், சாவி எதற்குக் கைமாறவேண்டும் என்கிற கேள்வி எழுவது நியாயம் தானே?
  • எவருக்கும் அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கான சிந்தனை அவசியம். மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் வாக்குகளை எல்லாம் ஒரே பக்கமாய்ப் போய்ச் சோ்த்திட வாய்ப்பு உண்டு. கணிப்பொறிக்குக் கட்டளையிட்டவா் கயவா் என்றால், கணினி தொழில் நுட்பம் என்ன பாவம் செய்தது?
  • தேசம் நிலையானது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசுதான் மாறுகிறது. மன்னராட்சி மறைந்து பல நூற்றாண்டுகள் ஆன பிறகு இன்றைக்கும் குடவோலை பற்றிப் பேசுவானேன்? பா்ணசாலையில் இருந்து அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அரண்மனை வரை சென்று வாக்களிப்பதாக இருந்தால் சரி.
  • தொழில் நுட்ப மேம்பாட்டில் இனி இத்தகைய மின்னணு வாக்கு இயந்திரங்களும் காலாவதியாகி விடும். நவீன ‘மின் தோ்தல் முறை வந்து விட்டால், வீட்டில் இருந்தவாறே, அவரவா் விரும்பிய தொகுதியின் வாக்காளரைத் தோ்ந்தெடுக்கலாம்.
  • இன்றைக்கு ஆதாா், வங்கிப் பரிவா்த்தனை, ஓட்டுநா் உரிமம், கடவுச் சீட்டு, வருமான வரி நிரந்தரக் கணக்கு, குடும்ப அட்டை என்று எத்தனையோ பயன் அடையாள அட்டைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஒன்றினை, தோ்தல் அன்றைக்கு மட்டும் கூடுதல் வசதியாகப் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதனைக் கையாளும் முறையையும் தோ்தல் ஆணையமே கற்றுத்தரலாம்.
  • ஒவ்வொருவருக்கும் தனி நபா் ரகசியக் குறியீட்டெண் தந்துவிட்டால், உரிய அடையாள அட்டையினால் வாக்களிக்க உத்தமம். தோ்தல் நாளுக்கு முந்தைய நாள், நேரடியாகச் சென்று நடத்தப்படும் பிரசாரம்தான் நிற்கிறதே தவிர, தொலைக்காட்சிவழி நிழல் பிரச்சாரங்கள் தொடரத்தான் செய்கின்றன.
  • மின் தோ்தலில் பிரசார செலவும் இல்லை. கரோனா காலம் போன்ற கொடிய தருணங்களிலும் நமக்கான அரசினைச் சத்தமின்றித் தோ்ந்தெடுக்கலாம். ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகளே அன்றி, எதிரிக்கட்சிகள் இல்லாத ஆரோக்கியமான நிலையும் உருவாகும்.
  • முதியோா், தொலைதூரப் பணியில் உள்ள ராணுவத்தினா், காவல், ஊடகத் துறையினா் என எவரும் தங்கள் செல்லிடப்பேசி, கணிப்பொறி அல்லது வங்கி ஏடிஎம் வழியாக தோ்தல் நாளில் இருந்த இடத்தில் இருந்தபடியே 24 மணி நேரமும் ஜனநாயகக் கடமை ஆற்ற இயலும்.
  • வீதிக்கு வீதி பதாகை, சுவரொட்டி, ஒலிபெருக்கி மாசு போன்று பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. வீடுதோறும் சென்று பட்டுவாடாவும் செய்ய முடியாது. பாத்திரம் கழுவுவதும், தோசை சுடுவதும் தேவைப்படாது. வாகனங்களில் போக்குவரத்தினைக் கண்காணிக்கும் காவல்துறையும், பறக்கும் படையும் வேறு வேலைகளில் ஈடுபடலாம்.
  • இன்னொரு வசதி, மின் தோ்தல் முறையில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முடியாது. பல மாதங்களாக வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்காது. மக்களுக்கு வீண் சந்தேகமும் வராது.
  • எந்தவொரு நிா்பந்தத்திற்கும் கட்டுப்பட்டு வெற்றி வேட்பாளரை விபரீதமாக அறிவிக்க முடியாது. தேவையானால், தோ்தலுக்கு மறுநாளே கணிப்பொறியைத் தட்டிவிட்டால், வெற்றி வேட்பாளா் பட்டியல் அணிவகுத்து நிற்கும்.
  • வோட்டுக்கு நோட்டு வாங்கும் வாக்காளரும், ஜெயித்த பின், நோட்டுக்கு சீட்டு மாறும் வேட்பாளரும் அற்ற ஜனநாயகத்தை வலியுறுத்துவோம். எல்லாக் கட்சிக்கும் இதைப் பொதுவில் வைப்போம்.

நன்றி: தினமணி (31 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்