- வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டுக்கொண்டே வந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வங்கி வைப்புத்தொகை வாடிக்கையாளர்கள், சமீபத்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை (மானிட்டரி பாலிசி) அறிவிப்பில் தங்களுக்கு சிறிது பயன் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்துள்ளது பெரிய ஏமாற்றமே. டிசம்பர் 8}ஆம் தேதி பணவியல் கொள்கைக் குழு முக்கிய கடன் விகிதமான ரெப்போவை 4 சதவீதத்தில் தக்க வைத்து அதனை "அக்காமடேடிவ்' என்ற நிலைப்பாட்டில் வைத்துள்ளனர்.
- ரெப்போ வட்டி விகிதம் என்பது வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். வணிக வங்கிகள் தங்களது அவசரத் தேவைக்காக மிகக் குறுகிய காலத்திற்கு (பொதுவாக ஒரு நாள்) ரிசர்வ் வங்கியிடமிருந்து ரெப்போ வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இதற்குப் பிணையாக வங்கிகள், தங்களின் அரசு பத்திர முதலீடுகளை ரிசர்வ் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அதாவது இது ஒரு பிணை சார்ந்த கடன் (செக்யூர்ட் கிரெடிட்).
- ரெப்போ வட்டி விகிதம் என்பது, ஓரளவுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களுக்கும், வங்கிகள் பெறும் டெபாசிட்டுகளுக்கும் ஆதாரமாகும். அதாவது, ரெப்போ வட்டியின் மூலம் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அவை வழங்கக்கூடிய மற்றும் பெறக்கூடிய வட்டி விகிதங்களைக் குறிப்பாக உணர்த்துகிறது.
- இதனை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விடுக்கும் சமிக்ஞை என்று கொள்ளலாம். பொதுவாக, ரெப்போ அதிகரித்தால் வங்கிகளும் டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். ரெப்போ குறைந்தால் வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைக்கும்.
- தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வட்டியைத் தொடர்வதால் வங்கிகளும் பொதுவாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாது. ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள "அக்காமடேடிவ்' என்பதன் பொருள், வங்கிகள் கடன்காரர்களுக்குத் தரும் சலுகைகளைத் தொடர வேண்டும் என்பதே.
- அதாவது, வங்கியின் டெபாசிட்டர்களுக்கு எந்த பாதிப்பு நேர்ந்தாலும் பரவாயில்லை, கடன்காரர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதே இந்த "அக்காமடேடிவ்' என்பதற்கான பொருள்.
- பொதுவாக, பண வீக்கம் அதிகரித்தால் அதை சமாளிக்க ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டு பின்னர் எல்லா வட்டி விகிதங்களும் உயர்த்தப்படும். வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்க விகிதம் ஆகியவை தலைகீழ் உறவை (இன்வர்ஸ் ரிலேஷன்ஷிப்) கொண்டிருப்பதான போக்கு உள்ளது.
- 2021 செப்டம்பரில் 4.35 சதவீதமாக இருந்த சில்லறை விலை பண வீக்கம், 2021 அக்டோபரில் 4.48 சதவீதமாகவும், 2021 நவம்பரில் 4.91 சதவீதமாகவும், 2021 டிசம்பரில் 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து விலைவாசி ஏறி வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
- இது குறைவான அளவுதான் என்று நாம் அலட்சியப்படுத்த முடியாது.
- மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் உற்பத்தியாளர்களின் பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 14.23 சதவீதமாக நடப்புத் தொடரில் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது. இது இரட்டை இலக்க மொத்த விலை பணவீக்கத்தின் எட்டாவது மாதமாகும். இதை அலட்சியப்படுத்துவது சரியல்ல. இதன் பாதிப்பு சில்லறை விலையிலும் சில கால இடைவெளிக்குப் பிறகு தெரியும்.
- "இண்டியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச்' நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா "ஒமைக்ரான் உருமாற்றப் பரவல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகளை இயல்பாக்க அனுமதிக்காது' என்று தெரிவித்துள்ளார்.
- "விலை அழுத்தங்கள் தற்போதைய காலகட்டத்தில் நீடிக்கலாம்' என்றும் 2022}ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் பணவீக்கம் உச்சத்தை எட்டும்' என்றும் கூறும் ரிசர்வ் வங்கி, அவற்றை சமாளிப்பதற்கு எந்த முன்முயற்சியும் எடுக்காதது புதிராக இருக்கிறது. வளர்ச்சி முக்கியமா அல்லது பணவீக்கத்தை சமாளிப்பது முக்கியமா என்கிற சூழலில், தற்போதைக்கு வளர்ச்சியே முக்கியம், பணவீக்கத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்கிற நிலைப்பாடை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
- பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், வங்கியில் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் டெபாசிட்டிற்கு நெகடிவ் வட்டியைப் பெறுவதை உணரலாம். அதாவது வங்கியில் கிடைக்கும் வட்டிக்குப் பிறகும் அவர்களின் பணத்தின் மதிப்பும் வாங்கும் திறனும் குறைகின்றன.
- வட்டி என்பது கடனுக்குக் கொடுக்கும் விலையேயாகும். பொதுவாக விலைவாசி உயரும்போது, எல்லாப் பொருள்களின் விலையும் உயரும். எனவே, விலைவாசி உயரும்போது வங்கி டெபாசிட்டர்களுக்கும் உரிய வட்டி கிடைக்கச் செய்வதே நியாயமாக இருக்க முடியும்.
- ஆனால், அதற்கு மாறாக, ரிசர்வ் வங்கி கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் டெபாசிட்டர்களுக்கு வட்டியை குறைக்கும் வகையிலும், அதன் மூலம் கடன்காரர்களுக்கு அதிக பயன் ஏற்படும் வகையிலும் கொள்கை முடிவுகளை எடுக்கிறது.
- வங்கிகள் எவ்வளவு சலுகைகளைக் கொடுத்தாலும், வங்கியில் கடன் பெறுபவர்கள் மேலும் மேலும் சலுகைகளைப் பெறுவதற்கே விழைகிறார்கள். இவர்களுக்கு முதலில் குறைவான வட்டியில் கடன் கொடுக்க வேண்டும். பின் கணக்கு ஒழுங்கற்றதாக ஆனவுடன் அதை மறுசீரமைப்பு செய்து திரும்ப செலுத்தும் தவணையில் சலுகை அளிக்க வேண்டும். பின் நிலுவையை வங்கி தள்ளுபடி செய்யவேண்டும்.
- இவ்வாறு இவர்களின் கோரிக்கைகளுக்கு அளவே இல்லை. அரசும், ரிசர்வ் வங்கியும் இவர்களுக்கு மட்டுமே துணை போவது துரதிருஷ்டவசமானது. டெபாசிட்டர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.
நன்றி: தினமணி (30 – 01 – 2022)