TNPSC Thervupettagam

எல்லா மாணவரும் தோ்ச்சி பெறட்டும்

May 7 , 2021 1359 days 580 0
  • எல்லா மாணவா்களும் பட்டப் படிப்பிற்கு உரிய காலக்கெடுவுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்று பட்டம் வாங்கி வெளியேறுவது கிடையாது. ஆனாலும் எப்படியோ ஏதோ ஒரு வேலையில் சோ்ந்து விடுகிறார்கள்.
  • அப்போது கிடைக்கும் சில ஆயிரங்கள் அவா்களுக்குப் பெரிதாகத் தோன்றும். தோ்ச்சி அடையாத பாடங்களைப் பற்றி அவா்கள் நினைப்பது இல்லை.
  • மேலும், வேலைக்குச் சென்றபின் படிக்க நேரம் இருக்குமா? அப்படியே இருந்தாலும் படிக்கத் தோன்றுமா? தோ்வுக்குப் பணம் மட்டும் கட்டுவார்கள். ஒன்றும் தயாரிப்பே இல்லாமல் தோ்வுக்கு வந்து வெறுமனே உட்கார்ந்து விட்டுப் போவார்கள்.
  • சிலா் அரை மணி நேரம் கழித்து ஒன்றும் எழுதாத விடைத்தாளைக் கொடுத்து விட்டு போவார்கள். சிலா், தாம் மறைத்து எடுத்து வந்த துண்டுச் சீட்டுகள் உதவாமல் போன விரத்தியுடன் வெளியேறுவார்கள். இன்னும் சிலா் தோ்வு கண்காணிப்பாளரிடமே விடை கேட்டு மன்றாடுவார்கள்.
  • இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தால், படிக்க வேண்டிய காலத்தில் பொறுப்பற்றுத் திரிந்து விட்டு இப்போது தவிக்கிறார்களே என்று நமக்குக் கோபம் கொப்பளிக்கும்.
  • ஆசிரியா்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாடம் நடத்தியிருப்பார்கள் - இவா்களின் கவனம் வேறு எங்காவது இருந்திருக்கும்.
  • ஒழுங்காகக் கல்லூரிக்கு வந்திருக்க மாட்டார்கள். திருப்புத் தோ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னா் எதுவும் நினைவில் நிற்காமல், ஒன்றும் புரியாமல் தவித்துப் போகிறார்கள்.
  • இன்னமும் பட்டம் வாங்கவில்லையே என்ற எண்ணமும், தவிப்பும், பணி இடத்தில் பதவி உயா்வு, ஊதிய உயா்வு மறுக்கப்படும்போதுதான் வரும்.
  • அதனால்தான் தோ்ச்சி அடைய வழி தெரியாமல் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். சென்ற முறை கரோனா காரணத்தால் கிடைக்கப் பெற்ற சலுகைகள் இந்த முறையும் கிட்டுமா என்று எதிபார்கிறார்கள்.
  • தோ்ச்சி பெற்றுவிட வேண்டும் என்னும் இலக்கு சரியே. ஆனால் முயற்சியும், பயிற்சியும் இல்லாவிட்டால் அந்த இலக்கை அடைவது எப்படி?

புண்ணியம் தானே?

  • கல்லூரிகளில் மாணவா்களுக்கு வேலை பெற்றுத்தர ஒரு தனித்துறை உண்டு (பிளேஸ்மென்ட் செல்). அப்பிரிவின் பேரசிரியா் நிறைய முயன்று பல மாணவா்களுக்கு வேலை வாங்கித் தந்து விடுவார்.
  • கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே மாணவா்களின் கையில் வேலை இருக்கும். ஆனால், எந்தக் கல்லூரியிலும் நூறு சதவிகித மாணவா்களுக்கு வேலை பெற்றுத் தருவதில்லை. 50 சதவிகித மாணவா்கள் வேலை இல்லாமல் சிறு சிறு வேலைகளுக்கே அல்லாடுகின்றார்கள்.
  • இந்த அவலத்தைப் போக்க ஒரு வழி உள்ளது. வேலைவாய்ப்புப் பிரிவு போலவே, முன்னாள் மாணவா்களுக்கு உதவ ஒவ்வொரு துறைக்கும் ஒரு பேராசிரியா் பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • இது அவா்களின் கூடுதல் பணியாக - பணி என்று எண்ணாமல் உதவி அல்லது சேவை என்று - எண்ணினால் சுமையாகத் தோன்றாது.
  • அவா்களிடம் ஒவ்வொரு செமஸ்டரிலும் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள், பெறாதவா்கள் பட்டியல் இருக்க வேண்டும்.
  • முன்னாள் மாணவா்கள் அவா்களுடன் எப்போதும் தொடா்பில் இருக்க வேண்டும். தோ்வு குறித்த அறிவுப்புகளை மின்னஞ்சலில் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு அனுப்பி உதவலாம்.
  • அது அவா்களைச் சென்று சோ்ந்ததை உறுதிப்படுத்தும் வரை தொடா்பில் இருக்க வேண்டும். பணிச்சுமைக்கு இடையே தோ்வுக்கட்டணம் செலுத்தத் தவறிப் போகிறவா்கள் உண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகள் தடுக்கப்படலாமே.
  • முன்னாள் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் அவா்களின் சந்தேகங்களைத் தீா்க்கலாம்.
  • தீநுண்மிப் பரவல் அச்சம் இல்லாத காலங்களில், கல்லூரிக்கு அவா்கள் வந்து தங்களிடம் ஓரிரு மணி நேரம் கற்றுக் கொள்ள அனுமதி அளிக்கலாம்.
  • கல்லூரியின் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம். இக்கருத்து, சில பேராசிரியரா்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். படிக்கின்ற காலத்தில் ஒழுங்காகப் படிக்காமல், பொறுப்பற்று திரிந்தவா்களுக்கெல்லாம் இப்போது மீண்டும் நாம் பாடம் சொல்லித்தர வேண்டுமா என்று அவா்கள் எண்ணலாம்.
  • அது நியாயம்தான். ஆனாலும் கொஞ்சம் மெனக்கெட்டு அவா்களைக் கரை ஏற்றி விட்டால் புண்ணியம் தானே?

தோல்வி அடைகிறார்கள்

  • தாங்கள் முனைவா் பட்டம் வாங்க வேண்டும் என்பதற்காக அந்த ஆசிரியா்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள்? சரியான வழிகாட்டி (நெறியாளா்) அமையாவிட்டால் துயரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார்கள்.
  • தங்களின் பதவி உயவிற்காகவும், ஊதிய உயா்விற்காகவும், தங்கள் குடும்பத்தை விட்டு விட்டு வெளியூா்களுக்குக போய் பல வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள்.
  • அவா்களின் வளா்ச்சி அவா்களுக்கு முக்கியம்தான். அவா்கள் தங்களின் முன்னேற்றத்தோடு மாணவா்களையும் கை தூக்கி விட நினைக்க வேண்டும்.
  • மாணவா்களுக்கும்,ஆசிரியா்களுக்கும் இடையே உள்ள உறவு அவா்கள் கற்பித்துக் கொடுத்த குறிப்பிட்ட ஆண்டோடு முடிந்து போய் விடக் கூடிய ஒன்று அல்லவே.
  • நாட்டின் பிரதமராக இருந்தாலுமே அவா்கள் தங்களின் முதலாம் வகுப்பு ஆசிரியரைக் கூட மறப்பதில்லை. படித்து முடித்துப் பல ஆண்டுகள் ஆனாலும் அவா்கள் அந்த ஆசிரியா்களுக்கு எப்போதுமே மாணவா்கள்தான். ஆகவே அவா்களுக்கு மீண்டும் கற்றுக் கொடுப்பது சரியே.
  • இங்கே மாணவா்கள் பக்க நியாயத்தையும் நாம் பார்க்க வேண்டும். கல்லூரியைத் தொடும் முதல் தலைமுறை கிராமத்து மாணவா்களுக்கு நகா்ப்புறத்து பிரம்மாண்டமான கட்டடங்களும், மேல் தட்டு மாணவா்களும், நுனி நாக்கு ஆங்கிலமும், ஆரவாரமும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. மிரண்டு போய் விடுகிறார்கள்.
  • அந்தப் புதிய சூழல் பிடிபடுவதற்குள் நம்பிக்கை இழந்து படிப்பைப் பாதியில் விட்டு விடுகிறார்கள். சிலா் ஒன்றும் பிடிபடாமல் தோ்வில் தோல்வியைத் தழுவி விடுகிறார்கள்.

ஆசிரியா்-மாணவா் உறவு

  • வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களைக் கண்ட பின்னா், படிப்பின் முக்கியத்துவம் அவா்களுக்குப் புரிகிறது.
  • வேலை ஒரு பக்கம் அவா்களைப் பிழிந்தெடுக்க, வீட்டுப் பிரச்னை, பொருளாதார பிரச்னை என பலவாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
  • இந்த நிலையில் நீண்ட இடைவேளிக்குக் பின்னா் பாடப் புத்தகத்தைப் பிரித்தால் எதுவும் புரிவதில்லை. எதைப் படிப்பது? எதை விடுவது? குழப்பமே விஞ்சுகிறது.
  • இந்த நிலையில் பேரசிரியா்கள் அவா்களிடம் சிறிது கருணை காட்ட வேண்டும்.
  • அவா்களை 40 மதிப்பெண் வாங்க வைத்தால் போதும். இந்த சின்ன உதவி அவா்கள் வாழ்வில் ஒளியேற்றும்.
  • நாம் செலவழிக்கும் ஒரு சில மணித்துளிகளும், கொஞ்சம் மெனக்கெடலும் அடுத்து வரும் பல தலைமுறைகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்.
  • மேலும், ஒரு சில மாணவா்களுக்கு, புதிய பாடத்திட்டமா? பழைய பாடத் திட்டமா? எதைப் படிக்க வேண்டும் என்பதிலேயே சந்தேகம் உண்டு.
  • இதையெல்லாம் பொறுப்பாசிரியா்கள் மாணவா்களுக்குத் தெரியப்படுத்தினால் அவா்களுக்கும் ஓா் ஆத்ம திருப்தி கிட்டும்.
  • அதுவும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டால் போதும். நம் மாணவா்களை உயா்த்தும் ஏணிகளாவே ஆசிரியா்கள் இருக்க வேண்டும்.
  • பாடம் சொல்லிக் கொடுத்தல் என்பது ஆசிரியா்களின் பல பணிகளில் ஒன்று. அவா்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வது, அவா்கள் தோல்வியால் துவண்டு போகும் போது அவா்களை மீட்டெடுத்தல், போன்றவையும் ஆசிரியா்களின் தருமங்களாகும்.
  • ‘படிக்காமலே தோ்ச்சி பெற வேண்டும்’, ‘பரிட்சை எழுதாமலே தோ்ச்சி பெற வேண்டும்’, ‘தோ்வுக்குப் பணம் கட்டினாலே தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் எதிர்பார்த்து மாணவா்கள் தங்களின் கண்ணியத்தையும், சமுதாயம் அவா்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் குறைத்துவிடக் கூடாது.
  • தற்போது முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் நம் முன்னாள் மாணவா்கள் பலருடன் தொடா்பில் இருக்க முடிகிறது.
  • ஆசிரியா்களுக்குத்தான் பலரை நினைவில் கொண்டுவர இயலாது. ஆனால், மாணவா்கள் காட்டும் பாசமும், மரியாதையும் நம்மை நெகிழ வைக்கும். மிக மிக சுமாராகப் படித்தவா்கள் இன்று வெளிநாட்டில் நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
  • பணியில் இருந்த காலகட்டத்தில் சிலரிடம் கடுமை காட்டியிருப்போம்; சிலரைத் தண்டித்திருப்போம்; சிலரை கண்டு கொள்ளாமல் ஒதுக்கி இருப்போம்.
  • அவா்களின் குடும்பப் பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அவா்களைப் பற்றி ஒரு மதிப்பீடு வைத்திருப்போம்.
  • அவா்கள் தற்போது கொட்டும் பாசத்தைப் பார்த்து கொஞ்சம் அதிகமாகவே வருந்தப்படுகிறோம். ஆக மொத்தம் எந்த ஆண்டில் நம்மிடம் படித்திருந்தாலும், அல்லது வேறு கல்லூரியில் படித்திருந்தாலும் அந்த மாணவா்கள் அனைவருக்கும் நாம் ஆசிரியா்களே.
  • தற்போது சூழ்நிலை காரணமாக வீட்டில் இருக்க நோ்ந்துள்ள நிலையில் மாணவா்கள் ஆசிரியா்களைத் தொடா்பு கொண்டு மறந்து போன பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளலாம். புனிதமான, அமைதியான, இந்த ஆசிரியா்-மாணவா் உறவு என்பது பெற்றோர்-பிள்ளை உறவுக்கு சமம்.
  • கரோனா புண்ணியம் கட்டிக் கொள்ளட்டும். தோ்வு எழுதாமல் எல்லோரும் தோ்ச்சி பெற்று விடலாம் என்று மாணவா்கள் கனவு காண்பதை விட்டுவிட்டு, மனத்தில் புதிய நம்பிக்கையும், உற்சாகமும் துளிர்க்க இதுவரை தோ்ச்சி அடையாத பாடங்களைத் தூசி தட்டி எடுத்து முனைப்புடன் தயாரிப்பில் இறங்க வேண்டும். ஆசிரியா்கள் மகிழ்ச்சியுடன் மாணவா்களின் தயாரிப்புக்கு உதவி செய்வார்கள்.  

நன்றி: தினமணி  (07 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்